Oktober 1, 2022

ஈபிஆர்எல்எவ் முழு ஆதரவு!

இலங்கையில் நடைபெற்ற யுத்தக் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்களை விசாரித்து பொறுப்புக்கூறல் உள்ளிட்ட செயல்முறைகளை முன்னெடுப்பதற்கு ஐ.நாவால் இலங்கைக்கு வழங்கப்பட்ட கால அவகாசம் முடிவடைந்துள்ள நிலையில், இலங்கை அரசாங்கம் தான் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக்கொண்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாதது மட்டுமன்றி நிலைமாறுகால நீதிப் பொறிமுறையின் நான்காவது விடயமான மீள் நிகழாமையை உத்தரவாதப்படுத்துவதற்கு பதிலாக தமிழ் தேசிய இனத்தின் இருப்பை கேள்விக்குள்ளாக்கும் வகையிலும் அச்சுறுத்தும் வகையிலும் விடயங்களை முன்னெடுத்து வருகின்றது.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான பொறுப்புக்கூறலிலிருந்து அரசாங்கம் தொடர்ந்தும் தட்டிக்கழிக்கும் போக்கையே கடைப்பிடிக்கின்றது. இந்த நிலையில் எதிர்வரும் 25ஆம் திகதி காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி பத்திரிகைச் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையின் முழு விபரம் வருமாறு:
யுத்தகாலத்திலும் யுத்தத்திற்குப் பின்னரும் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டுள்ளனர். இந்த கைதுகள் கடத்தல்கள் தொடர்பாகவும், காணாமல் ஆக்கப்பட்டோரைக் கண்டுபிடிப்பதற்காகவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்குமாறு சிறிலங்காவின் இணைஅனுசரணையுடன் ஐ.நா மனித உரிமைகள் ஆணையகம் தீர்மானங்களை நிறைவேற்றிய போதிலும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கான அலுவலகம் என்ற ஒரு சட்டம் வந்ததைத் தவிர வேறு எத்தகைய ஆக்கபூர்வமான நடவடிக்கைகளும் இந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவில்லை. காணாமல் போனோருக்கான அலுவலகம் என்பதுகூட அதிகாரங்களற்ற வெறும் பதிவுகளை மாத்திரம் மேற்கொள்ளக்கூடிய ஒரு அலுவலகமாகவே இருக்கின்றது. யுத்தம் முடிந்த நாளிலிருந்து இன்றுவரை தமது உறவுகளைக் கண்டுபிடித்துத் தருமாறு பெற்றோரும் உறவினர்களும் தொடர் போராட்டங்களை நடாத்தி வருகின்றனர். ஆனால் இலங்கை அரசாங்கம் அதனை ஒரு பொருட்டாக கவனத்தில் எடுக்கவில்லை.
கடந்த இரண்டு ஆண்டுகளாக திருகோணமலை, வவுனியா, முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி போன்ற இடங்களில் தாய்மார்கள் வீதிக்கரைகளிலிருந்து தொடர் போராட்டங்களை நடாத்திவருவதும் இங்கு சிறப்பாக கவனிக்கப்பட வேண்டிய ஒரு விடயம்.
இவ்வாறான சூழ்நிலையில் இம்முறை நடக்க இருக்கின்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதுடன், புதிய தீர்மானங்களும் வர இருக்கின்றது. இந்நிலையில் ஜெனிவா தீர்மானத்திற்கு இணங்க இலங்கை அரசாங்கம் உண்மையைக் கண்டறிதல், பொறுப்புக்கூறல், பாதிக்கபபட்டோருக்கான உரிய விசாரணைகளை மேற்கொள்ளுதல், மீள்நிகழாமையை உறுதிப்படுத்துதல் போன்ற விடயங்களை வலியுறுத்தி 30ஃ1, 34ஃ1 தீர்மானங்களை ஜெனிவாவில் நிறைவேற்றிய போதிலும்கூட நான்கு வருடங்கள் கடந்துவிட்ட நிலையிலும், இவை தொடர்பான உறுதியான முன்னேற்றகரமான நடவடிக்கைகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை. இந்த நிலையில், மீண்டும் இலங்கை அரசாங்கத்திற்குக் கால அவகாசம் கொடுப்பதென்பதை இலங்கை தமிழ் மக்கள் முற்றுமுழுதாக நிராகரிக்கின்றார்கள் என்ற செய்தியை ஜெனிவா மனித உரிமைகள் ஆணையகத்திற்குக் கொண்டு செல்லும் முகமாகவும், சர்வதேச சமூகம் இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட யுத்தக் குற்றங்கள், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் போன்றவை தொடர்பாக ஒரு சர்வதேச விசாரணையின் மூலம் மட்டுமே தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கும் என்பதை வலியுறுத்தியும் வடக்கு-கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கம் கடைகள், பாடசாலைகள், சந்தைகள், அலுவலகங்கள், போக்குவரத்து உள்ளிட்ட அனைத்தையும் மூடி பூரண அடைப்பிற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு விடுத்த கோரிக்கையை ஈழ மக்கள் புரட்சிகர முன்னணியும் ஏற்றுக்கொண்டு தனது பூரண ஆதரவை வழங்குவதுடன் மக்களும் இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டும் என்று அழைப்பு விடுக்கிறது.