September 29, 2022

எமது அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஐரோப்பா வாழ் தமிழீழ மக்களே!

தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தின் அடிப்படையில்  தமிழின அழிப்புக்கு நீதி கோரி மார்ச் மாதம் 4 ஆம் திகதி அனைத்துலக அரசியல் முச்சந்தியாகிய யெனிவாவை  நோக்கி முருகதாசன் திடலில் அலையென திரள்வோம்.

எதிர்வரும் பிப்ரவரி 25 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 22 ஆம் நாள்வரை ஜெனீவாவில் ஐ.நா. மனிதவுரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.
ஆயுதங்கள் மௌனிக்கப்பட்ட சூழலில் திறந்துள்ள அரசியற் செயற்பாட்டு வெளியுள் பிரவேசித்துள்ள தமிழினத்தின் உரிமைப்போராட்டமானது, சிறீலங்கா மற்றும் பிராந்திய எல்லைகளைக் கடந்து அனைத்துலகப்பரப்பில் காத்திரமாகத் தடம்பதித்துள்ளதை தமிழினம் மனம்கொள்ளவேண்டியது அவசியமாகும். பல்லாயிரக்கணக்கான போராளிகளும் தமிழ்மக்களும் தமது உடல் பொருள் ஆவியை அர்ப்பணித்து  எட்டப்பட்ட இந்தக் களத்தை மேலும் வலுவுள்ளதாக்கிக் காத்திரமாக நகர்த்திச் செல்லும் கடப்பாடு புலம்பெயர்ந்த எமக்கானது என்பதில் இருவேறு கருத்திருக்கமுடியாது.
காலம்காலமாக அடிபட்டு உதைபட்டு அழிவுகளைச் சந்தித்து எமது துயர்நிலையை வெளிப்படுத்தியபோதெல்லாம் வாழாதிருந்த உலகு 2009 முள்ளிவாய்க்காலில் நடைபெற்ற இனஅழிப்பின் பின்னரான காலப்பகுதியில்  சிறீலங்கா அரசினது மனிதஉரிமை மீறல்கள் மற்றும் மானிடத்துக்கெதிரான குற்றங்கள் தொடர்பில் உரையாடத் தலைப்பட்டுள்ள வேளையில் எமது கடமை என்ன?
கடந்த காலத்தில் எமது உரிமைப் போராட்டத்துக்கு மனவலிமையோடு அள்ளியும் கிள்ளியும் தமது இயலுமைக்கு அமைவாக எமது தேசக்கட்டுமானத்தையும் தேசியபாதுகாப்பையும் உறுதிப்படுத்த உதவிக்கரம் கொடுப்பது எமது கடமையென வரித்துக்கொண்டவர்கள் நாம். அந்த உயரிய பங்களிப்பின் வடிவாக அமைந்த தமிழீழத்தின் கட்டுமானங்களை நேரடியாகத் தரிசித்தவர்களுக்கு அதன் செழுமை புரியும். அவற்றை இந்த உலகு சிங்கள சிறிலங்கா அரசினது பொய்ப்பரப்புரையை நம்பி அழிக்க உதவியதென்பது நாமறிந்ததே.
மனிதஉரிமைகள் மீறப்பட்டமை இனஅழிப்பை மேற்கொண்டமை என்பவற்றுக்குப் பொறுப்புக்கூறுமாறு சிறீலங்காவினது எதேச்சதிகார ஆட்சியாளர்களை கேட்பதும் இறுக்கமற்ற தீர்மானங்களை முன்வைப்பதுமாக இவர்கள் நகரும் இக்காலத்தில் எதிர்வரும் பிப்ரவரி 25 ஆம் நாள் தொடக்கம் மார்ச் 22 ஆம் நாள்வரை ஐ.நாவின் மனித உரிமைகள் அமைப்பினுடைய 40 வது கூட்டத்தொடர் ஜெனீவாவிலே  இடம்பெறவுள்ளது.
 பேரவையில் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட  30/1 தீர்மானத்தின் வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் எவ்விதத்திலும் நடைமுறைப்படுத்த இல்லாத நிலையில் பிரித்தானியாவின் முன்னெடுப்பில் ஏனைய இணை நாடுகள் மீண்டும் இலங்கைக்கு மேலதிக காலத்தை கொடுக்கும் பிரேரணையை கொண்டுவர முயற்சி எடுப்பதை அறிகின்றோம்.
இத் தருணத்தில் தாமதிக்கப்டும் நீதி மறுக்கப்படும் நீதிக்கு ஒப்பானது என்பதை வலியுறுத்தி சர்வதேச அரசியல் அரங்கிலே எமக்கான நீதியை வேண்டி போராட உறுதியெடுப்போம்.
 தம்மை ஈகம் செய்து  எம்மிடம் கையளிக்கப்பட்ட விடுதலைப்போராட்டத்தை புலம்பெயர் நாடுகளில் உள்ள ஜளநாயகத் தளத்தைப் பயன்படுத்தி முன்நகர்த்துவதொன்றே எந்த வினவுதலுக்குமப்பால் தமிழினத்தின் விடுதலையொன்றே தம்முயிர்மூச்செனக்கொண்டு தம்மை அர்பணித்தோருக்காற்றும் கைமாறாகும்.
அதன்பொருட்டு எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி சுவிஸ் நாட்டின் யெனிவா நகரில் ஐரோப்பா வாழ் தமிழ்மக்கள் அனைவரும் எழுச்சிகொண்டு,மக்கள் போராட்டம் ஒன்றை நிகழ்த்துவதற்காக தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அன்போடும் உரிமையோடும் வேண்டிக்கொள்கிறோம்.
எமது சுதந்திரத்துக்காக மண்டியிடாது தொடர்ந்து ஓயாது போராடிவரும் தமிழர்களாகிய நாம், சர்வதேச நாடுகள் ஒன்றுகூடுகின்ற இந்த காலப்பகுதியில் இனவழிப்புக்கு உட்பட்டுவரும் எமது மக்களுக்கான நீதியை வலியுறுத்தியும், எமது வரலாற்றுத் தார்மீக உரிமையை வலியுறுத்தியும் பல்வேறு எழுச்சி மிகு மக்கள் போராட்டங்களை ஓயாது தொடர்ந்து நிகழ்த்தவேண்டியிருப்பது இன்றைய வரலாற்றுத் தேவையாக இருக்கின்றது.
அழிக்கப்பட்டுவரும் எமது தேசிய இனத்தை காப்பதற்காக தமிழர்களுடைய தார்மீக வரலாற்று உரிமையை, தமிழ்த் தேசியத்தை, தமிழரின் இறைமையை தமிழர்களாகிய நாமே போராடி மீட்கவேண்டியிருப்பது என்பது ஒவ்வொரு தமிழனும் தனது இனத்துக்காக செய்யவேண்டிய ஒப்பற்ற கடமையாகும்! உலகிலே நாம் மிகவும் தொன்மையான, வீரமான, தனித்துவமான கலாச்சார பண்பாட்டு நெறிமுறைகளைக் கொண்ட ஓர் தேசிய இனம். நாம் எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரனால் வீரமூட்டி வளர்க்கப்பட்ட ஒரு தலைமுறை.
‚தார்மீக அடிப்படையில் நாம் உறுதியான அத்திவாரத்தில் நிற்கின்றோம். எமது போராட்ட இலட்சியம் நியாயமானது. சர்வதேச மனித அறத்திற்கு இசைவானது. எமது மக்கள் தன்னாட்சி உரிமைக்கு உரித்தானவர்கள். தனியரசு அமைக்கும் தகுதி பெற்றவர்கள். அனைத்துலக சட்டத்தின் அடிப்படையில் இந்த உரிமையை எவரும் நிராகரித்துவிட முடியாது‘.என்ற எமது தேசியத் தலைவரின் சத்திய வாக்குக்கு அமைய, எமது தலைமை எமக்குக் காட்டுகின்ற வழியில், உலக ஓட்டங்களுக்கு இசைவாக, புவி அரசியல் அசைவுகளை நுணுகி ஆராய்ந்து, எமது தேசிய விடுதலைப் போராட்டத்துக்கான பாதையில், காலம் எமக்கிட்ட பரிமாணத்தில் நாம் தொடர்ந்து போராடிவருகிறோம்.
எமது அன்புக்குரிய தமிழ் மக்கள் கடந்த காலங்களில் நிகழ்த்திய ஒன்றுபட்ட மக்கள் போராட்டங்கள் வாயிலாக உலக அரங்கில் தமிழர்களுடைய தேசிய விடுதலை அரசியலில் மாற்றங்கள் ஏற்பட்டுக்கொண்டிருப்பதை உங்களால் அவதானிக்க முடிகிறது. முள்ளிவாய்க்காலை அடுத்து, எமது விடுதலைப் போராட்டம் சர்வதேச மயப்பட்டு, உலக அங்கீகாரத்துக்காக கடும் முயற்சி பாதையில்   பயணித்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம்.
இது எமது மக்களின் போராட்டம். எமது மக்களின் சுதந்திரத்துக்கான போராட்டம். மக்கள்சக்தி வாய்ந்த போராட்டங்களை எந்த சக்தியாலும் அடக்கிவிட முடியாது என்னும் நியதி உண்டு. நாங்கள் ஒன்றுபட்ட மக்கள் சக்தியாக எழுச்சிபெற்று, எமது தேசியத் தலைவர் மேதகு. வே. பிரபாகரன் காட்டிய பாதையில் இலக்கை அடையும்வரை தொடர்ந்து போராடுவோம்! நிச்சயமாக வீரமிகு போராட்டங்களை நிகழ்த்தி சுதந்திர தமிழீழம் மீட்போம்!
சிங்கள பௌத்த இனவாத சக்திகளையும் ஆட்சி மாற்றங்களையும் காரணம்காட்டி தமிழர்களது உரிமைகளை மறுப்பதும், தீர்வுத்திட்டம் என்ற பெயரில் காலங்கடத்துவதும் சிங்களத்தின் தந்திரமாகவே இருக்கட்டும். அதில் நாம் சிக்கிக்கொள்ளாது விளிப்பாக இருப்பதுடன் இலட்சியத்தில் உறுதியுடன் இருப்பது அவசியமாகும்.
தமிழர்களின் மரபுவழித் தாயகம் பாதுகாக்கப்படவும், தமிழ் பேசும் மக்கள் ஓர் தேசிய இனமாக வாழவும் வேண்டுமாயின் சுதந்திர தமிழீழ அரசு அமைவது ஒன்றே நிரந்தரத் தீர்வாகும் என்பதனை தீர்க்கமான தீர்மானமாக உலகின் முன் உரைத்து நிற்கும் வட்டுக்கோட்டை தீர்மானத்தினை வலுப்படுத்துவது ஒன்றே சிங்களத்தின் தந்திரோபாயங்களை முறியடிப்பதற்கான உபாயமாகும்.
எப்படி ஜனநாயக முகத்திரைபோர்த்தி  உலகைத் துணைசேர்த்து எம்மைச் சிங்களம் வீழ்த்தியதோ அதே ஜனநாயக வழியைப் பயன்படுத்தி சிங்களத்தின் முகத்திரையைக் கிழித்து அதனது இனப்படுகொலை முகத்தை அம்பலப்படுத்தி எமது இலக்காகிய தமிழீழ தாயகத்தை வென்றெடுக்க அனைவரும் அணிதிரள்வோம். அடிமை விலங்குடைத்து நிமிர்வோம் வாரீர்!
ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் எதிர்வரும் 18.2.2019 திங்கள் கிழமை அன்று மதியம் 14 மணிக்கு ஆரம்பிக்க இருகின்றது . மனிதநேய ஈருருளிப்பயணம் பெல்ஜியம் , லக்சம்புர்க், யேர்மனி, பிரான்ஸ் இறுதியாக  சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .
எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால், ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 4 ஆம் திகதி  யெனிவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மக்களாகிய நாம் இந்த மக்கள் சக்திப் போராட்டங்களை நிகழ்த்தவுள்ளோம் :
1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக  வெளியேற்றப்பட்டு தமிழர் நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில் கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நன்றி.
‚தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.‘