September 29, 2022

துயர் பகிர்தல்;அக்கினியுடன் சங்கமமானது ஈழத்து அறிஞர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல்

செம்மண் வளமுள்ள யாழ்.குப்பிழானைப் பிறப்பிடமாக கொண்ட ஈழத்து அறிஞர் சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் நினைவஞ்சலி மற்றும் இறுதி யாத்திரை நிகழ்வுகள் இன்று வெள்ளிக்கிழமை(15) இடம்பெற்றது.
யாழ்.கோண்டாவில் கிழக்கிலுள்ள சிவத்தமிழ் வித்தகரின் இல்லத்தில் இறுதிக் கிரியைகள் இடம்பெற்றது. இதன் போது அவரது மனைவி சாந்தா மற்றும் பிள்ளைகள், உறவினர்கள், ஆன்மீகத்துறை சார்ந்தவர்கள், பல்துறை சார்ந்தவர்கள் சிவத்தமிழ் வித்தகரின் பூதவுடலுக்கு கண்ணீருடன் இறுதி அஞ்சலி செலுத்தினர். அதனைத் தொடர்ந்து நினைவஞ்சலி உரைகள் ஆரம்பமானது.

பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன், மூத்த எழுத்தாளர் குப்பிழான் ஐ.சண்முகன், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் வைத்தியகலாநிதி எஸ்.சிவபாதமூர்த்தி, வலம்புரிப் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் ந. விஜயசுந்தரம், யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் ஓய்வுநிலைப் பிரதி அதிபர் பொ. மகேஸ்வரன், பண்டிதர் ஏழாலையூர் பேரின்பநாயகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலரும், சிவத்தமிழ் வித்தகரின் மாணாக்கருமான எஸ்.பிரதீபன், சிவத்தமிழ் வித்தகரின் மாணாக்கரும், மானிப்பாய் மெமோரியல் ஆங்கிலப் பாடசாலையின் ஆசிரியர் ஷாம்குமார் காரைநகர் மணிவாசகர் சபையைச் சேர்ந்த மு.வேலாயுதபிள்ளை ஆகியோரின் அஞ்சலி உரைகள் இடம்பெற்றன.

அஞ்சலி உரைகளைத் தொடர்ந்து சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் பூதவுடல் மணிவாசகர் அருளிய சிவபுராணம் மற்றும் திருவாசக பாடல்கள் ஓத அவரது சொந்த ஊரான குப்பிழான் கிராமத்திற்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது.

அதனைத் தொடர்ந்து குப்பிழான் விவசாய சம்மேளன முன்றலில் சிவத்தமிழ் வித்தகரின் பூதவுடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நினைவஞ்சலி உரைகள் ஆரம்பமாகி இடம்பெற்றன.
குப்பிழான் கிராமத்தின் ஓய்வுநிலைக் கிராம சேவகர் சோ. பரமநாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் சுன்னாகம் பலநோக்கு கூட்டுறவு சங்கத்தின் இளைப்பாறிய முகாமையாளர் எஸ். சிவலிங்கம், இளைப்பாறிய கிராம அலுவலர் தட்சணாமூர்த்தி, வடமாகாண சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் த. கணேசநாதன், மூத்த இசை சொற்பொழிவாளர் கவிமணி க. ஆனந்தராசா, சிவத்தமிழ் வித்தகரின் மாணாக்கரும், சொற்பொழிவாளருமான கந்தசத்தியதாசன், குப்பிழான் கற்கரைக் கற்பக விநாயகர் ஆலய நிர்வாகம் சார்பில் தலைவர் எஸ். சின்னராசா, செயலாளர் ஏ. நிர்மலன் மற்றும் பலாலி ஆசிரிய கலாசாலையின் விரிவுரையாளர் கு.பாலசண்முகன் ஆகியோர் உரைகளாற்றினர்.

மேற்படி இரு நினைவஞ்சலி நிகழ்வுகளிலும் உரையாற்றிய பலரும் கண்ணீருடன் சிவத்தமிழ் வித்தகரின் நினைவுகளைப் பகிர்ந்து கொண்டனர்.
அதனைத் தொடர்ந்து திருவாசகம் ஓதுதலுடன் குப்பிழான் காடாகடம்பை இந்துமயானத்தை நோக்கி சிவத்தமிழ் வித்தகரின் இறுதி யாத்திரை ஆரம்பமானது. அங்கு சிவமகாலிங்கத்தின் மூத்த புத்திரரான யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் அகம் சுரக்கும் தொகுதி வைத்திய நிபுணர் வைத்தியகலாநிதி ம. அரவிந்தன் தந்தையாரின் பூதவுடலுக்கு கொள்ளி வைத்தார்.

ஆன்மீகவாதிகளின் திருவாசக ஓதுதலுடன் சிவத்தமிழ் வித்தகரின் பூதவுடல் அக்கினியுடன் சங்கமமானது.
சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கத்தின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளில் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர்களான பாலச்சந்திரன் கஜதீபன், கேசவன் சயந்தன், மூத்த ஓதுவார் கலாபூஷணம் க.ந.பாலசுப்பிரமணியம், சைவமகாசபையின் பொதுச் செயலாளர் ப.நந்தகுமார், பிரபல எழுத்தாளர் இயல்வாணன்,தினக்குரல் நிறுவன ஸ்தாபகர் எஸ்.பி. சாமி, சைவப்புலவர் ஏ. அனுஷாந்தன், யாழ். யோகா உலகம் அமைப்பின் இயக்குனர் சிவஞானம் உமாசுதன், வைத்தியர்கள், ஆன்மீகத்துறை சார்ந்தவர்கள், கல்வியியலாளர்கள், பல்துறைசார்ந்தவர்கள், குப்பிழான்,கோண்டாவில் கிராமத்தவர்கள் எனப் பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

இதேவேளை, இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஓய்வுநிலை உதவிப் பணிப்பாளரும், சமய சொற்பொழிவுத் துறையில் தடம் பதித்தவருமான சிவத்தமிழ் வித்தகர் சிவமகாலிங்கம் நேற்று முன்தினம் புதன்கிழமை (13) அதிகாலை யாழ். கோண்டாவிலுள்ள அவரது இல்லத்தில் தனது-70 ஆவது வயதில் காலமானார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.