Oktober 2, 2022

பம்பைமடு தடுப்பு முகாமில் அவளைக் கண்டேன்..!

வாழ்க்கையில் நாம்பட்ட துயர்கள் எப்போதும் நம் மனதில் இருந்து இலகுவில் அழிந்துவிடுவதில்லை, இறுதி யுத்தத்தில் ஓராயிரம் வலிகள் சுமந்தோம்.அந்த வலிசுமந்த நினைவுகளின் ஓர் சம்பவத்தை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

நான் இறுதியுத்த காலப்பகுதியில் இராணுவத்தினரிடம் சரணடைந்து வவுனியாவில் உள்ள பூந்தோட்டம் தடுப்பு முகாமில் சிறிது நாட்களும்  அதன்பின் இடமாற்றம் செய்யப்பட்டு பம்பைமடு தடுப்பு முகாமிலும் தங்கியிருந்தேன்,

நான்கு பகுதிகளாக A,B,C,D என பிரிக்கப்பட்ட கட்டடங்களைசூழ முட்கம்பி வேலிகளிற்குள் பெண்போராளிகள் தங்கவைக்கப்பட்டோம்.நான் B பகுதி கட்டடத்தில் 9 மாதமளவில் தங்கவைக்கப்பட்டு பின்பு A கட்டட பகுதிக்கு இடம் மாற்றப்பட்டேன்,

முதல் இருந்த B பகுதி ஒரு மண்டபமாகவே  இருந்தது,ஆனால் A பகுதி மேல்மாடிக்கட்டிடம்,கீழ் பகுதி மேல் பகுதி என்று போராளிகள் அணி அணியாக பிரிக்கப்பட்டு ஒரு அறையில் 15 பேர்  இருந்தோம்,மிகுதிப்பேர் கட்டட வளைவுகளிற்குள்ளும் இருந்தார்கள்,

தண்ணீர் வசதி பெரும்பாடாகவே இருந்தது,அதேபோல் உணவும் மூன்று நேரமும் சோறு,அத்தோடு பலநூறு பேரிற்கு நாமே பெரிய பாத்திரங்களில் சமைப்பதால் அனேகமான நாட்களில் சுவையும் இருந்ததில்லை,

காலையில்  ஆறு (6) மணிக்கு பெண் இராணுவத்தினரின் விசில் சத்தத்தோடு எழும்புவோம்,வெளியில் சென்று அனைவரும் அணி அணியாக லைனில் நிற்க வேண்டும்,கம்பி வேலிக்குள் இருந்தாலும் தப்பி ஓடிவிடுவோம் என்று எம்மை எண்ணிக்கை செய்வார்கள்,அதேபோல் இரவிலும் கணக்கெடுப்பு நடைபெறும்,

நான் A பகுதிக்கு இடம் மாற்றப்பட்ட மறுநாள்  லைனில் நிற்கும்போது அங்கு ஒரு பெண் சிறிய தடியோடு எமக்கு முன் இராணுவத்தினர் நிற்கும் இடத்தில் நின்றார்.இப்படியே தொடர்ந்து இரண்டு மூன்று நாட்களும் அப்பெண் அவ்விடத்திலே நின்றார்.

எனக்கு சந்தேகம் அந்தபெண் இராணுவமா இருக்குமோ என்று, பார்க்க அப்படியும் தெரியேல நாங்கள் போடுற கவுண்தான் போட்டிருந்தாள்,

இராணுவம் விசில் அடிக்கும்வரை பனிகாலத்தில உறக்கம்தான்,அடை மழை என்றாலும் லைன்தான்,லைனிற்கு போகும்போது சிலவேளை முகமும் கழுவமாட்டோம்,இராணுவ பெண்கள் றூம்றூமாக வரும்போதுதான் லைனிற்கு போவோம்.ஆனால் அந்த பெண் மட்டும் தோய்ந்து நெற்றிக்கு குங்குமபொட்டிட்டு அழகாக வந்து நின்றாள்,பார்க்க இடைக்கால நடிகை ரேவதியின் சாயல்வேற,

கொஞ்ச நேரத்தில அந்த பெண் இராணுவத்திற்கு பக்கத்த நின்றுகொண்டு தொடங்கினாள்,

அண்ணா உங்களை இப்படியா வளர்த்தவர்…?அண்ணா பாவம்,அண்ணாவோட இருக்கேக்க லைனென்றா இப்படி பிந்திவருவீங்களோ…?,அண்ணாக்கு முதல்ல மரியாதை குடுங்கோ  என்று சராமரியாக  வார்த்தைகளை அள்ளிவீசினாள்,எல்லோருக்கும்  அதிர்ச்சி அடடா இப்படி துணிசலா கதைக்கிறாளே என்று,

தமிழ் கதைக்கிறாள்.அட அப்ப நம்ம தமிழ் பொண்ணுதான்.தலைவர் அண்ணாவைப் பற்றிதான் சொல்றாள்,அதுசரி இப்படி இராணுவதிற்கு முன்னால நின்றுசொல்ல கொண்ட துலைக்கபோறாளே,இப்படி அந்தாள கதைக்க தலையை சீவி எறியபோறாளே.ஏன் இப்படிக்கதைக்கிறாள்,நல்ல வேளை அவளேக்கு தமிழ்த் தெரியாதது,

எனக்கு மனம் கேட்கேல ஆமிக்காறிகள் லைன் எண்ணிமுடிய போனன் கதைப்பமென்று,கிட்டபோய் அக்கா என்றன்,ஒரு நமட்டு சிரிப்போட போட்டாள்,சரி போகட்டும் எங்க போகப்போறா..?அரசாங்கம் விடும்வரை இங்கதானே கம்பி எண்ணவேணும்,சரி பிறகு பார்த்துக்கொள்ளுவம் என்று விட்டிட்டன்,

மறுநாளும் அதிகாலை 5 மணிக்கு எழும்பி தலைக்கு தண்ணிவார்த்து குங்குமப்பொட்டும் வைத்து தனது நீண்ட தலைமுடியை உலரவிட்டு வந்து நின்றாள்,ஆமிக்காற பெண்கள் இவளை மட்டும் எண்ணிக்கை செய்யமாட்டார்கள்,

அன்றும் லைன் எண்ணிமுடிய போய் கதைகேட்டன்.பதில் இல்லை,அவள் பின் சென்று இருக்கும் இடத்தை பார்த்தேன்,நான் இருக்கும்
றூமிற்கு கொஞ்சம் தள்ளி தனிமையில் ஒரு மூலையில் இருந்தாள்,

அருகில் இருந்த தோழிகளிடம் கேட்டேன் ஏன் தனிமையில் இருக்கிறா என்று,அவர்கள் சொன்னகதை என்னை மிகவும் பாதித்தது,

ஆம் அவள் இராணுவத்தில் சரணடைந்ததை எண்ணி மனநிலை பாதிக்கப்பட்ட பெண்போராளி,அவள் பெயர் சுடர் என்றும்,படையணியின் சிறந்த களமருத்துவ போராளி என்றும்  தலைவர் அண்ணா பாவம்,அண்ணாவை எல்லோரும் ஏமாற்றிபோட்டியல் என்ற வார்த்தைகள் மட்டுமே அவள் வாயில் இருந்து வரும் என்றும் கூறினார்கள்.

எனக்கும் தெரியும்.அவள் அண்ணா பாவம் அண்ணா பாவம் என்று அனேகமாக எனக்கு முன்னும் சொல்லியிருக்கிறாள்.

இராணுவத்தினரிடம் போராளிகள் சரணடையும்போது பெண் போராளிகள் பயத்தில் பொது மக்களிடம் குங்குமம்கூட வாங்கிவைத்து கொண்டுவந்தார்கள்,திருமணம் செய்தால் இராணுவம் எதுவும் செய்யமாட்டான் என்ற நப்பாசை,அப்படித்தான் சுடர் அக்காவும் குங்கும பொட்டு வைத்துக்கொண்டு வந்திருக்கிறா.

மனநிலை பாதிக்கப்பட  தன்னிலை மறந்து அப்படியே தொடர்ச்சியாக பொட்டு வைக்கிறாள்,என்ன செய்ய முடியும் எம்மால்.,?அவளை மருத்துவமனை கூட்டிச்செல்ல எம்மிடம் என்ன இருக்கு.நோய்கூடி தடுப்பு முகாமிற்குள் இறந்த போராளிகளையும் நாம் கண்டதுண்டு,சுடர் அக்காவிற்கு ஆறுதலாக இருப்பதை தவிர வேறுவழி எம்மிடம் இல்லாமல் போனது.

போராளிகளை குடும்பத்தவர்கள் பார்க்க பாஸ் நடைமுறை இருந்தது.ஆரம்பகாலங்களில் வெளி மாவட்டக்காறர் மூன்று மாதத்துக்கு ஒரு தடவையே தடுப்பில் இருக்கும் பிள்ளைகளை பார்க்க முடியும்.பல போராளிகளின் பெற்றோர் முகாம்களில் இருந்தனர்,

பல பெற்றோரிற்கு பிள்ளைகள் உயிரோடு இருக்கிறார்களா இல்லையா என்று தெரியாமல் இருந்தது,அதோபோல்தான் போராளிகளிற்கும் இருந்தது.தம் குடும்பத்தவர்கள் இருப்பார்களா..?இல்லையா என்ற நிலை,கடிதங்கள் ஒவ்வொரு முகாம்களுக்கும் போட்டே உறவுகளை கண்டுபிடித்துகொண்டார்கள்.

சுடர் அக்காவின் பெற்றோரிற்கு சுடர் அக்கா உயிரோடு இருப்பது தெரியாமல் போனது,அவள் தன்னை மறந்து மனநிலை பாதித்திருந்தபடியால் தன் பெற்றோரிற்கு தான் இருப்பதை தெரியபடுத்த முடியவில்லை,

நானும் பலநாள்  அவளிடம் போய் அம்மா அப்பா பெயர் விலாசம்  சொல்லுங்கோ,கடிதம் போடுவம் என்று கேட்பேன்,எதுவும் கூறமாட்டாள்,அவளிடம் இருந்து மௌனமே பதிலாக வரும்,

அவள் இரண்டு உடையோடு 12-13 மாதங்களிற்குமேல் பெற்றோரை பார்க்காது இருந்தாள்,தண்ணீர் பிரச்சனை,மணித்தியாலக்கணக்கில் வெய்யிலுக்குள் காத்திருந்தே தண்ணீர் எடுப்போம்,

அப்படி எடுத்துவைக்கும் தண்ணீரில் விரும்பிய வாளி தண்ணீரில் நம்ம சுடர் அக்கா அதிகாலையில் தோய்வார்,

கோபிக்க மாட்டார்கள் எம் தோழிகள்.ஏனெனில் நாங்கள் ஒருகொடியில் பூத்த மலர்கள்,ஓர் இலட்சியதாகத்திற்காக இணைந்தவர்கள்.எல்லோரும் அன்போடு கதைப்பார்கள்,

ஆனால் சுடர்அக்கா யாரோடும் கதைக்கமாட்டாள்,நான் அடிக்கடி கதை கேட்பதால் ஓர் நாள் என் றூமிற்கு வந்த சுடர் அக்கா என்னிடம் பசிக்குது என்றார்,எனக்கு மகிழ்ச்சி ஒருபுறம்.அத்தோடு கவலைவேறு,உடனடியாக விஸ்கட் எடுத்துகொடுத்தேன்,வாங்கியவள் சென்றுவிட்டாள்,

அதன்பின் மறுநாள் நான் விஸ்கற் கொடுத்தபோது வாங்கவில்லை,தனக்கு ஒரு சிந்தனை வந்தால் மட்டும் வருவாள்.ஏதாவது கொடுப்பேன்,

நான் றூமில் இல்லாத நேரங்களில் றூமில் யாராவது கொடுத்தால் வாங்கமாட்டாள்,சென்றுவிடுவாள்.நான் வந்ததும் சொல்வார்கள் சுடர் வந்தது போய் என்னென்று கேட்டிட்டு வா என்று,ஓடிச்செல்வேன் ஆர்வத்தோடு.ஏன் வந்தீர்கள் என்று கேட்பேன்,எதுவும்கூற மாட்டாள்.என்ன செய்வது போஸ்பண்ணவும் முடியாது வந்துவிடுவேன்.

எமது A பகுதியில்தான் பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட முற்கம்பி கூட்டிற்குள் கம்பிக்கு வெளியே பிள்ளைகளை சந்திக்கவரும் பெற்றோரும் முற்கம்பிக்கு உள்பகுதியில்தான் போராளிகளும் நின்று 10 நிமிடம் கதைப்பார்கள்,

பல நாட்கள் பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்தபடி சுடர் அக்கா ஏக்கத்தோடு நின்றிருக்கிறா,அதேபோல ஒரு நாள் நண்பகல்   12-01 மணியளவில் சுடர் அக்கா பெற்றோர் சந்திப்பிடத்தை பார்த்தபடி உச்சி வெய்யிலுக்குள் பலமணிநேரம் நிற்பதைப் பார்த்தேன்,சிலவேளைகளில் சிறிதுநேரம் நின்றிட்டு வந்திடுவா,அன்று வரவில்லை,

மற்ற போராளிகளும் வந்து சொன்னார்கள் சுடர் நிறையநேரம் வெய்யிலுக்க நிற்குது போய் கூட்டிவா என்று,போய் கூப்பிட்டேன் சுடர் அக்கா என்று,

அப்போதுதான்  பார்த்தேன் அவள் முகத்தில் உள்ள ஏக்கத்தை,தன்னைப் பார்க்க தன் பெற்றோரும் வந்திருக்க மாட்டார்களா..? என்ற ஏக்கம் அவள் முகத்தில், படிந்திருந்தது,வெய்யிலுக்குள் நின்று வியர்வையில் போட்டிருந்த சட்டையும் நனைந்து முகம் எல்லாம் வியர்வை படிந்து வடிந்தபடி இருந்தது,

எனக்கு அவள் முகத்தை பார்க்க அழுகைவேறு,தானும் மற்றவர்களைப்போல பெற்றோரை பார்க்கவேண்டும் நல்ல உடுப்பு போடவேணும்,நல்ல உணவு உண்ணவேணும் என்று ஆசைப்பட்டாளோ அந்த அபலை,..?

அவளிற்கு எம்மால் என்ன செய்ய முடியும்..?நாங்கள் கைகள் கட்டப்பட்டு ஊமைகள்போன்றே வாழ்கிறோம்….அக்கா வாங்கோ றூமுக்கு போவம்,வெய்யிலுக்க நிற்ககூடாது,காய்ச்சல் வந்திடும்,என்று கூறினேன்,எதுவும் பேசாமல் போய்விட்டாள்,

நான் எனது றூமிற்குப்போய் என் நண்பிகளிடம் கூறி கவலைப்பட்டேன்,முற்கம்பி வேலிகளிற்கு நடுவே எமது வாழ்க்கை,நாம் என்ன செய்யமுடியும்..?

என்னால் முடிந்த அளவு அவள் பெற்றோரை கண்டுபிடிக்க முயற்சித்தேன்,முடியவில்லை.சுடர் அக்காவின் சொந்த இடம் யாருக்கும் தெரியவில்லை,

அதற்குள் பலரிற்கு மீண்டும் இடமாற்றம்,அதில் நானும் ஒருத்தியாய் கொழும்புக்கு போகநேர்ந்தது.இடம் மாற்றலாகி போகும்நேரம் சுடர் அக்காவிடம் போய் நான் வேறிடம் போகிறேன்,நீங்கள் நன்றாக சாப்பிடுங்கோ ஏதும் தேவை என்றால் என் றூமில் உள்ள தோழிகளிடம் கேளுங்கள் என்று கூறினேன்,அவள் வாங்கமாட்டாள் என்பது தெரியும் ஆனாலும் என்மன ஆறுதலிற்காக கூறினேன்,

நான் பஸ் ஏறபோகும்போது ஏங்கிய முகத்தோடு சுடர் அக்கா வந்துநின்றாள்,தனக்கு ஆறுதலாக இருந்த ஒரு உறவும் போகுதே என்ற ஏக்கமாய் அவள் முகம் தெரிந்தது.அனுபவிக்கின்றபோதே சில வலிகளை உணரமுடியும் என்பார்கள்….நான் கொழும்பில் இருந்த பம்பைமடுவில் உள்ள தோழிகளிற்கு கடிதம் எழுதுவேன்,

சுடர் அக்காவின் நலம்  கேட்பேன்.அவரின் நிலை அப்படியே தன்பாட்டில் கதைப்பது சிரிப்பதென்றே உள்ளது,வீட்டாரும் யாரும் வந்து பார்த்ததாக தெரியவில்லை என்றார்கள்,சில மாதங்களின்பின் கொழும்பில் இருந்து மீண்டும் பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் வந்தேன்,வந்து சுடர் அக்காவை தேடினேன்….அவர் பற்றி அறியமுடியவில்லை.

எப்படி வீட்டிற்கு சென்றார்,யார் அவரைவந்து பொறுப்பெடுத்து கூட்டிச்சென்றது என்பது தெரியாது,நான் தடுப்பு முகாமில் இருந்த தோழிகளை கண்டால் இன்றும் கேட்பது சுடர் அக்காவைப்பற்றியே..

அவள் மனதில் இறுதியாக படிந்த நினைவுகளே மனநிலை பாதிக்கப்பட்ட பின்பும் கூறியபடி இருப்பாள்,அண்ணா பாவம்,அண்ணாவை எல்லாரும் கைவிட்டிட்டீங்கள்,ஏமாற்றிப்போட்டியல் என்று….அவள் கூறும் வார்த்தைகளிற்கு இன்றல்ல எப்போதும் எம்மால் பதில்கொடுக்க முடியாது…..

***பிரபாஅன்பு***