September 29, 2022

வடக்கில் முளைவிடும் மேடைகளில் அரசியல் துகிலுரிக் காட்சிகள்! பனங்காட்டான்

மாகாண சபைத் தேர்தல்கள் எப்போது என்பது தெரியாத நிலையிலும் தமிழ் அரசியல் அரங்கு அதற்குத் தயாராகிவிட்டது. சாவகச்சேரியில் சுமந்திரன் நடத்திய கருத்தறி கூட்டத்தில் வணபிதா சவுந்தரராசா கூட்டமைப்பை உச்சியில் பிடித்து உசுப்பியுள்ளார். யாழ். நகரில் சுரேஷ் பிரேமச்சந்திரன் நடத்திய கூட்டம் கொலைகாரனே கொலைகளைக் கண்டுபிடிக்கும் நாடகமாக அரங்கேறியுள்ளது. ஆரம்பக் கூட்டங்களே அரசியல் துகிலுரிக் காட்சிகளாக மாறியுள்ளன.

இலங்கையில் மாகாண சபைகள் என்பது 1987 இலங்கை-இந்திய (ஜே.ஆர்-ராஜிவ்) ஒப்பந்தம் வழியாகப் பிரேரிக்கப்பட்ட ஒன்று.

வடக்கும் கிழக்கும் இணைந்ததாக இது இருக்க வேண்டுமென்று எழுத்தின் வாயிலாக இது உருவாக்கப்பட்டது. இந்திய ராணுவத்தின் எடுபிடிகளாக இயங்கிய ஈ.பி.ஆர்.எல்.எவ்.க்கு இந்த மாகாண சபை அதற்கான பரிசு.

இந்திய ராணுவம் வெளியேற அதனுடன் சேர்ந்து இதன் முதலமைச்சராகவிருந்த வரதராஜப் பெருமாள் உடன்கட்டை ஏறுவதுபோல கப்பல் ஏறி இந்தியா சென்றதோடு, இச்சபையின் கதை முடிந்தது.

அதற்குப் பிறகு இந்தச் சபையை வடக்கு-கிழக்கு இணைந்ததாக இருக்கக்கூடாதென ஜே.வி.பி. தாக்கல் செய்த வழக்கை விசாரித்த அப்போதைய பிரதம நீதியரசர் சரத் சில்வா வழங்கிய தீர்ப்பு அதனை நிரந்தரமாகப் பிரித்தது.

ஆனால், சிங்களத் தேசத்தில் எந்தத் தேவையுமின்றி உருவாக்கப்பட்ட மாகாண சபைகள் எந்தத் தடையுமின்றி இன்றுவரை அரசாங்கத்தின் சுவீகாரப் பிள்ளைகளாக போதிய நிதியுதவியுடன் இயங்கி வருகின்றன.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிந்துவிட்டதால் அவை இப்போது ஆளுனர் ஆட்சியிலுள்ளன.

கணக்குக் காட்டுவதற்காக வடக்குக்கு ஒரு தமிழரையும் கிழக்குக்கு ஒரு இஸ்லாமியரையும் ஆளுனராக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நியமித்தார்.

அரசாங்கத்தின் இரண்டு தலைவர்களும் மோதிக் கொண்டிருப்பதால் மாகாண சபைத் தேர்தல் குரங்கு வால்போல நீண்டு செல்கிறது.

மே மாத இறுதிக்குள் அல்லது ஜூன் மாத முற்பகுதிக்குள் இத்தேர்தல்கள் நடைபெறுமென அமைச்சரவைக் கூட்டத்தில் ஜனாதிபதி அறிவித்தபோது இதனைச் சுற்றியிருந்த பனிமூட்டம் கலைந்ததுபோலத் தெரிந்தது. ஆனால் அது உண்மையல்ல.

இந்தக் காலப்பகுதியில் தேர்தலை நடத்த ரணில் தலைமையிலான அரசு தயாரில்லை.

இக்காலத்தில் தேர்தலை நடத்தினால் மைத்திரியும் மகிந்தவும் இணைந்து பலமான வெற்றியைப் பெற்றால், பின்னால் வரப்போகின்ற ஜனாதிபதித் தேர்தலிலும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தங்கள் அணியைப் பலவீனப்படுத்துமென ரணில் நினைக்கிறார்.

ஆதலால் செப்டம்பரின் பின்னர், ஜனாதிபதித் தேர்தலுக்கு சற்று முன்னராக இதனை நடத்துவதே ரணிலின் திட்டம்.

இதனையறிந்த மைத்திரி மிகவும் கடுப்பாகியுள்ளார். தமது கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றும்போது இதனைச் சுட்டிக்காட்டி ரணிலை அவர் சீண்டப் பின்னிற்கவில்லை.

ரணிலின் போக்கு இப்படியாகத் தொடருமானால் தாம் நீதிமன்றத்தை நாடவேண்டியேற்படுமெனவும் மைத்திரி எச்சரித்துள்ளார்.

சகல நிறைவேற்று அதிகாரங்களையும் கொண்ட ஜனாதிபதி, பிரதமர் மீது வழக்குப் போட்டுத்தான் மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டிய நிலை இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ளது விந்தையும் விசித்திரமும் நிறைந்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வேண்டுகோளை ஏற்றே மாகாண சபைத் தேர்தலை ரணில் இழுத்தடிப்பதாக மைத்திரியும் மகிந்தவும் சந்தேகிக்கின்றனர்.

வடக்கில் தங்களை பலப்படுத்திக் கொள்ளும்வரை மாகாண சபைத் தேர்தலை நடத்த வேண்டாமென கூட்டமைப்பினர் கேட்டுக் கொண்டதால், சகல மாகாண சபைத் தேர்தல்களையும் ரணில் தள்ளி வருவதாக இவர்கள் கருதுகின்றனர்.

இது உண்மை என்பதை நம்பும் வகையில் வடக்கில் – முக்கியமாக யாழ்ப்பாணத்தில் அரசியல் கூட்டங்கள் அங்குமிங்குமாக முளைவிட ஆரம்பித்துள்ளன.

கூட்டமைப்பை பிளவுபடுத்தி உட்கட்சிக்குள்ளேயே எதிர்ப்பைச் சம்பாதித்துள்ள சுமந்திரன் கடந்த சில நாட்களாக தனித்தவில் வாசிக்க ஆரம்பித்துள்ளார். அதாவது தனித்து நின்று கூட்டங்களை ஏற்பாடு செய்து கருத்துக் கேட்கும் அரங்கமென்று பெயர் சூட்டி உரையாற்றி வருகிறார்.

இக்கூட்டங்களில் சுமந்திரனைத் தவிர வேறு எந்த நாடாளுமன்ற உறுப்பினரும் உரையாற்றுவதில்லை. கட்சியை உடைத்தவரே அதை றிப்பேர் செய்யட்டுமென விட்டு விட்டார்களாம்.

கடைசியாக நடைபெற்ற சாவகச்சேரிக் கூட்டத்தில் வித்தியாசமான குரலொன்று கேட்டது. இதனை ஏற்பாடு செய்தவர் சுமந்திரனின் கையாளான வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்திரன். பிள்ளையார் பிடிக்கப்போய் குரங்கான கதையாகியது இக்கூட்டம்.

சுமந்திரனை மேடையில் வைத்துக் கொண்டு மதகுருவான றெக்ஸ் சவுந்தரராசா அடிகளார் கூட்டமைப்பினரை ஒரு பிடி பிடித்து உலுப்பியுள்ளார்.

இனியும் உங்களை நாங்கள் நம்பத் தயாரில்லை. மக்கள் உங்கள் மீதான நம்பிக்கையை இழந்துவிட்டார்கள் என்று சுமந்திரனை நேரடியாகப் பார்த்து கூறிய சவுந்தரராசா அடிகளார் பின்வருமாறு அதற்கு விளக்கம் கொடுத்தார்.

‚இன்று வடக்கின் முன்னாள் முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் ஒரு மாற்றுத்தலைமை வேகமாக உருவாகி வருவதைப் பற்றி சாதகமான, எதிர்மறையான கருத்துகள் உலாவுகின்றன. அவை எப்படியாக இருந்தாலும், எனது கேள்வி என்னவெனில் இந்த மாற்றுத் தலைமை உருவாகக் காரணம் என்ன?…..

மாகாண ஆட்சியில் அவர் இருந்தபோது கூட்டமைப்புடன் பல தடவைகள் முரண்பட்டது எல்லோரும் அறிந்தது. இந்த முரண்பாடுகளுக்குக் காரணம் என்னவென்று அவர் திரும்பத் திரும்ப சொன்ன ஒரேயொரு பதில், நான் 2015ஆம் ஆண்டு மக்கள் கொடுத்த ஆணையின்படி செயற்படுகிறேன். அதை அவர்கள் செய்கிறார்களில்லை. அதனாலேயே இந்த முரண்பாடு| என்று சொன்னார்….

சமஷ்டி ஆட்சியென்று 2015ஆம் ஆண்டு வடக்கின் தேர்தல் மேடைகளில் பேசினீர்கள். பின்பு தெற்குக்குச் சென்று ஒற்றையாட்சி என்றீர்கள். மீண்டும் வடக்கு வந்து இரண்டும் ஒன்றுதான் என்கிறீர்கள். இதை நாங்கள் நம்ப வேண்டுமா? நாங்கள் உங்களில் நம்பிக்கையிழக்க நீங்களே காரணம். எங்களை நீங்கள் ஏமாற்றி விட்டீர்கள்“.

அடிகளாரின் இந்தச் சொல்லாடல் நிச்சயமாக சுமந்திரனை வாட்டியிருக்குமென நம்பலாம்.

மறுபுறத்தில் ஈ.பி.ஆர்.எல்.எவ் மாநாடு என்ற பெயரில் ஒரு கூட்டத்தை சுரேஷ் பிரேமச்சந்திரன் யாழ். நகரில் கடந்த 3ஆம் திகதி நடத்தினார். மக்கள் மத்தியில் தமக்கு செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்ட – முக்கியமாக கஜேந்திரகுமார் தரப்பினருக்கு சூடேற்ற இக்கூட்டத்துக்கு முன்னாள் முதலமைச்சர் விக்னேஸ்வரனை சிறப்பு விருந்தினராக அழைத்திருந்தார்.

பாவம் அவர்! தமிழ் மக்கள் கூட்டணியைப் பலப்படுத்தும் நோக்குடன் மறுக்காது அங்கு சென்று உரையாற்றினார். அதே கூட்டத்தில் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஒரு ஆவணத்தையும் வெளியிட்டார்.

இதில், விடுதலைப் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட கொலைகள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. அதுமட்டுமன்றி இந்த ஆவணத்தை விக்னேஸ்வரன் அவர்களே வெளியிட்டு வைத்ததாகவும் இச்செய்திகள் தெரிவித்தன.

இதனைப் படித்த அவர் மீது தேசியப் பற்றுக் கொண்டிருந்த மக்கள் விசனமடைந்தனர். புலம்பெயர்ந்த மக்களுக்கு இது பெரும் துன்பியல் தாக்கத்தை ஏற்படுத்தியது.

மண்டையன் என்ற பெயரில் கொலைகளில் பிரசித்தமான சுரேஷ் பிரேமச்சந்திரன் திட்டமிட்டு விக்னேஸ்வரன் அவர்களை வீழ்த்திவிட்டதாகவும் சிலர் பேசிக் கொண்டனர்.

இது தொடர்பாக விக்னேஸ்வரன் அவர்கள் விடுத்த அறிக்கையில், யாழ்ப்பாணத்தில் கடந்த 3ஆம் திகதி நடைபெற்ற ஈ.பி.ஆர்.எல்.எவ். மாநாட்டில் சிறப்பு அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றியதைத் தவிர, புத்தக வெளியீட்டிலோ அல்லது வேறு எந்த ஆவண வெளியீட்டிலோ தாம் ஈடுபடவில்லையென்று அழுத்திக் கூறியுள்ளார்.

இந்த விவகாரம் இத்துடன் நிற்குமா அல்லது தொடருமா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும்.

ஆனால், இந்தக் கூட்டமும் வெளியிடப்பட்ட ஆவணமும் ஏதோ ஒரு வகையில் தமிழ் மக்கள் எதிர்பார்த்திருக்கும் ஒரு விடயத்துக்கு முடிவைக் கொண்டுவரக்கூடும்.

சுரேஷ் பிரேமச்சந்திரனை தமிழ் மக்கள் கூட்டணியில் சேர்த்துக் கொள்வதா இல்லையா என்பதனை சம்பந்தப்பட்டவர்கள் முடிவெடுப்பதற்கு இது நிச்சயமாக உதவக்கூடும்.

இதனூடாக, வெளியே காத்திருக்கும் இன்னொன்றுக்கான கதவு திறக்கப்படலாம்.

ஒன்றின் முடிவில்தான் இன்னொன்றின் ஆரம்பமென்பது அரசியலுக்கும் பொருந்தலாம்.

NO COMMENTS