Oktober 2, 2022

யாழில் நீதி கோரி ஆர்ப்பாட்டம்?

கடந்த யுத்தகாலப்பகுதியில் காணாமலாக்கப்பட்டோருக்கான நிலையை தெளிவுபடுத்த கோருதலும், அரசின் காவலிலுள்ள அரசியற்கைதிகள், முன்னாள்போராளிகள், இரகசிய முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரியும் யாழ்.மாவட்ட செயலகம் முன்பதாக போராட்டம் நடத்தப்பட்டுள்ளது.
முகநூல் நண்பர்கள் குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போராட்டத்தில் இளம் சமூக ஊடகங்களின் ஊடாக செயற்படும் குழுவினர் பங்கெடுத்திருந்தனர்.
போராட்டத்தின் பின்னர் அவர்கள் இலங்கை ஜனாதிபதிக்கு கையளித்துள்ள கடிதத்தில் இலங்கை நாட்டின் முதற்குடிமகன் என்ற வகையிலும், அரசியலமைப்பின் படி இந்தநாட்டின் சகல குடிமக்களையும் சமனாக நடாத்தும் பொறுப்பான்மையுடையவர் எனும் வகையிலும், இலங்கையின் முப்படையினரதும் தலைமைப்பிரதானி எனும் வகையிலும் கீழ்வரும் விடயங்களை தங்களது கனிவான கவனத்துக்கு கொண்டுவரும் முகமாகஇன்று வடக்குமாகாணம், யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் பணிமனைக்கு வருகை தந்து ஆளுநரிடம் தங்களுக்கான இம்மனுவினை கையளிக்கின்றோம்.
கடந்த யுத்த காலத்தில் பெரும்பான்மையாக வடக்கிலும் கிழக்கிலும், குறிப்பிட்ட சந்தர்ப்பங்களில் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் வைத்து இலங்கை அரசபடையினராலும் – இலங்கை காவல்துறையினராலும் கைதுசெய்யப்பட்டும், சட்டத்துக்கு விரோதமாக கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டும் இன்றுவரை எவ்வித தகவலும் இல்லாதிருக்கும் ஆயிரக்கணக்கான இலங்கை குடிமக்களான தமிழர்களை மீட்டுத்தரக்கோரி பல்வேறு காலப்பகுதிகளிலும் நாடெங்கும் போராட்டங்கள் நடைபெற்றதையும், தற்போதும் இதே கோரிக்கைகளுடனான போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருப்பதையும் தாங்கள் நன்கறிவீர்கள்.
காணாமலாக்கப்பட்டவர்களின் பெற்றோரும் பிள்ளைகளும் உறவினர்களும் குறிப்பாக இலங்கையின் வடபகுதியில் கிளிநொச்சியில் கடந்த மூன்றுவருடங்களுக்கு மேலாகவும், முல்லைத்தீவில் இருவருடங்களாகவும் வீதியோரங்களில் காத்திருப்பு போராட்டங்களில் ஈடுபட்டுவருகின்றனர்.
 கண்ணுக்கு முன்னால் அரசபடையினரால் கடத்தப்பட்டும் – ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட்ட இரவுநேரத்தில் ஆயுததாரிகளால் கடத்தப்பட்டும் – பகல்வேளையில் சனநெரிசல் மிகுந்த நகரங்களில் வெள்ளைவாகனங்களில் ஏற்றி கடத்தப்பட்டும் – இராணுவமுகாம்களுக்கு அல்லது பொலிஸ்நிலையத்துக்கு விசாரணைக்கு அழைப்பட்டு காணாமலாக்கப்பட்டும் – இறுதிப்போரின் நிறைவில் இராணுவக்கட்டுப்பாடு பகுதிகளில் வைத்து இராணுவத்தினரிடம் உயிருடன் கையளிக்கப்பட்டும் – மதகுருக்கள், அரசசார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் முன்னிலையில் இராணுவத்தினரிடம் உயிருடன் சரணடைந்தும்,
ஆனால் இன்றளவு வரை இவர்களைப்பற்றிய எந்த தகவலும் அரசாங்கத்தினால் வழங்கப்படாத உறவினர்களே, சனாதிபதியாகிய தங்களிடம் தமது பிள்ளைகளையும் – சகோதரர்களையும் – தந்தையை – தாயை மீட்டு தருமாறு கேட்டு வீதியிலிறங்கி போராட்டம் நடாத்துகின்றார்கள்.
இவர்கள் இருக்கின்றனரா? இல்லையா? என்ற கடுமையான மாயமும், அரசமௌனமும் நிகழ்த்தப்படும் கடந்தகாலங்களிலும் இக்காலத்திலும், தமது உறவினரின் நிலைபற்றி அரசாங்கத்தையும் அரசதலைவரையும் கேள்விகேட்க வேண்டியிருப்பதன் காரணம் : இந்தமக்கள் இவ்வளவு காலமும் இதற்கான தீர்வை கோரிய பொறுப்புக்கூறலுடைய தரப்புக்களால் ஏமாற்றப்பட்டமையே ஆகும். இலங்கையின் நிறைவேற்றதிகார சனாதிபதி எனும்வகையில் தங்களது ஆணைகளுக்கு மேலாக இந்தநாட்டின் எந்தநிகழ்வும் அமையமுடியாது என்கிற அதிகார உச்சத்தினை கொண்டுள்ளவர் எனும் முறையில், இந்நாட்டின் நிலப்பரப்பின் கீழ் சட்டத்துக்கு முரணாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரைபற்றியும் தெரிந்துகொள்வதற்கு தங்களுக்கு மனமுண்டானால் நிச்சயம் இடமுண்டு.
காணாமலாக்கப்பட்டவர்களின் பிரச்சினை வெறுமனே சில குடும்பங்களின் பிரச்சினையல்ல, சமூகப்பிரச்சனையுமல்ல, வடக்கு கிழக்கு மாகாணங்களின் பிரச்சினை மட்டுமல்ல – மாறாக இது ஒரு இனத்துக்கான பிரச்சினை. இலங்கைத்தீவில் காலாகாலமாக மண்ணின் மரபுத்தொட்டு வாழும் தமிழ் இனத்தின் பிரச்சினை! காணாமலாக்கப்பட்ட தமிழர்களின் உறவினர்களின் கோரிக்கைகளுக்காக நீதியும் நியாயமுமான பதிலை வழங்குவதற்கான தங்களது கடப்பாடு, இலங்கையில் தற்போதுள்ள இனமுரண்பாடுகளை சுமுகமாக தீர்ப்பதற்கான முதலாவது படியாக அமையும் என்பதை தங்களுக்கு கனிவன்புடன் நினைவூட்டுகின்றோம்.
பாதுகாப்பு அமைச்சராகவுள்ள இலங்கையின் நிறைவேற்றதிகார சனாதிபதியாகிய தாங்கள், தங்களுக்கு கீழான அரசஉத்தியோக படிநிலையிலுள்ள பாதுகாப்புப்படைகளின் முகாம்களை ஆய்வுசெய்வதும் – சட்டவிரோதமாக தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழர்களை பற்றிய உத்தியோகபூர்வ தகவல்களை பெற்றுக்கொள்வதும் கடினமான கருமங்களேயில்லை? தயவுகூர்ந்து, கடத்தப்பட்டும் காணாமலாக்கப்பட்டும் தடுப்பிலும் சிறையிலும் முகாம்களிலும் காவலில் வைக்கப்பட்டுள்ள தமிழ்மக்களை விடுதலை செய்யவும் – அவர்களைப்பற்றிய முழுமையான தகவல்களை உறவினர்களுக்கு வழங்கவும் மனப்பூர்வமானதும் ஆக்கபூர்வமானதுமான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோமென தெரிவிக்;கபபட்டுள்ளது.
காணாமலாக்கப்பட்டோரின் பெற்றோர், வாழ்க்கை துணையினர், பிள்ளைகள், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றைய பேரணியில் கலந்துகொண்டோர் அனைவரும் இணைந்து கையளித்த மனுவின் பிரதிகள் செயலாளர் நாயகம், ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனிதவுரிமைகள்ஆணையாளர், மனிதவுரிமைகள் ஆணையம், ஐக்கிய நாடுகள் சபை என்பவற்றிற்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.