Oktober 2, 2022

ரணிலாலேயே தீர்வை தரமுடியுமென கூட்டமைப்பு நம்புகின்றது: மஹிந்த!

இலங்கையில் ஏற்பட்ட ஆட்சி கவிழ்ப்பிற்கும், தனது இந்திய பயணத்திற்கும் இடையில் எந்தவித தொடர்பும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
கொழும்பு – விஜயராம பகுதியிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வீட்டில், தமிழ் ஊடகவியலாளர்களை இன்று (செவ்வாய்க்கிழமை ) காலை சந்தித்தபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட இந்திய பயணத்திற்கும், ஆட்சி கவிழ்ப்பிற்கும் ஏதேனும் தொடர்புள்ளதா என்ற கேள்விக்கு அளித்த பதிலில் அவர் இதனைக் கூறியிருந்தார்.
இதேவேளை, தான் ஆட்சி பீடம் ஏறும் பட்சத்தில், தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி, அரசியல் தீர்வை பெற்று கொடுக்கப் போவதாக முன்னாள் ஜனாதிபதியும், எதிர்க்கட்சித் தலைவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அரசியல் தீர்வுத் திட்டம் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் நடத்திய பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியடைந்ததற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பே காரணம் எனவும் மஹிந்த ராஜபக்ஸ சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக் கொடுப்பதற்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனக்கு ஆதரவை வழங்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.
எதிர்காலத்தில் தமது ஆட்சியின்போதும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்காத பட்சத்தில், தமிழ் மக்களுடன் நேரடியாக கலந்துரையாடல்களை நடத்தி, அவர்களுக்கான தீர்வைப் பெற்றுக் கொடுக்கப் போவதாக அவர் கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபகஸ, ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்தின்போது, இலங்கை தமிழர்களுக்கு 13வது திருத்தத்தையும், தாண்டிய அதிகார பகிர்வை வழங்குவதாக தெரிவித்திருந்தார்.
தமிழ் மக்களுக்கான அடிப்படை வசதிகளும், பொருளாதாரத்தையும் மேம்படுத்தப்படும்போது, அவர்களுக்கான அரசியல் தீர்வுகள் தன்னிச்சையாகவே கிடைக்கும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்படியே, மத்தியிலுள்ள அதிகாரங்களை பகிர்தல், உள்ளுராட்சி சபைகளுக்கான அதிகாரத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட விடயங்களை அடிப்படையாகக் கொண்டே, 13ஐ தாண்டிய எண்ணத்தை தான் வெளிப்படுத்தியதாகவும் மஹிந்த ராஜபக்ஸ கூறினார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க மட்டுமே, தமிழர்களுக்கான தீர்வுத்திட்டத்தை வழங்க முடியும் என்ற எண்ணத்தை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கொண்டுள்ளதாக கூறிய மஹிந்த ராஜபக்ஸ, அந்த விடயத்திலும் கூட்டமைப்பு தோல்வி கண்டுள்ளதாக குறிப்பிட்டார்.
அனைத்து விடயங்களுக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவாக செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, மாகாண சபைத் தேர்தலை நடத்துவது குறித்து மட்டுமே எந்தவித கருத்துக்களையும் வெளியிடுவதில்லை என அவர் சுட்டிக்காட்டினார்.
தமது ஆட்சியின்போது வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களை நடத்த வேண்டாம் என ராஜதந்திர மட்டத்திலிருந்து அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டதாக கூறிய அவர், அதனையும் தாண்டி, தான் மாகாண சபைத் தேர்தலை உரிய சந்தர்ப்பத்தில் நடத்தியதாகவும் குறிப்பிட்டார்.
இந்தநிலையில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தலை நடாத்துவதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவிதத்திலும் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபகஸ குற்றம் சுமத்தினார்.
இதேவேளை, தனது ஆட்சிக் காலத்தல் 12,500க்கும் அதிகமான தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டதாக சுட்டிக்காட்டிய முன்னாள் ஜனாதிபதி, தற்போது எஞ்சியுள்ள நூற்றுக்கணக்கான தமிழ் அரசியல் கைதிகளை அரசாங்கத்தினால் விடுவிக்க முடியவில்லை எனவும் கூறியுள்ளார்.
போர் காலப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகள் மற்றும் ராணுவத்தினர் என இரு தரப்பிலும், சில குற்றங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறிய அவர், அவ்வாறு குற்றம் இழைத்தவர்களுக்கு நீதிமன்றத்தின் ஊடாக தண்டனை வழங்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், எத்தனை தடவையும், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வகையில் அரசியலமைப்பின் 18-வது திருத்தம் கொண்டு வரப்பட்டதன் காரணத்தை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ இன்றைய தினம் தெளிவுபடுத்தினார்.
ஜனாதிபதியாக பதவி வகிக்கும் ஒருவர், தனது பதவி காலத்தின் இறுதித் தருணத்தில் மக்களுக்காக பணியாற்றுவதை தவிர்த்து, தமது தேர்தல் நடவடிக்கைகளையே இலக்காக கொண்டு செயற்படுவதை தவிர்ப்பதற்காகவே, தான் 18வது அரசியலமைப்பு திருத்தத்தை கொண்டு வந்து நிறைவேற்றியதாக முன்னாள் ஜனாதிபதி குறிப்பிட்டார்.
இதேவேளை, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறும் நபர் ஒருவரையே, தனது தரப்பினர் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளராக களமிறக்க தீர்மானித்துள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கூறியுள்ளார்