September 28, 2022

இலங்கையில் ஒரு தானியக்க ரயில் டிக்கெட் முறை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த ஆண்டின் இறுதியில் இலங்கையில் ஒரு தானியக்க ரயில் டிக்கெட் முறை நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளர் எம். டி.ஜே.டி.பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் இறுதியில் அதற்கான திட்டத்தை அமுல்படுத்த தாம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இலங்கை ரயில்வே திணைக்களம் இந்த திட்டத்திற்கான பல ஒப்பந்தங்களை பெற்றுள்ளதாகவும், இதற்கு ஆசிய அபிவிருத்தி வங்கி திட்டத்தின் கடன் வழங்குநர்களின் அங்கீகாரம் அவசியம் என்றும் அவர் கூறியுள்ளார்.

தற்போது இந்த திட்டத்திற்காக நான்கு முன்மொழிவுகளை பெற்றுள்ளதாக குறிப்பிட்ட அவர், அவற்றை மதிப்பீடு செய்து ஆசிய அபிவிருத்தி வங்கிக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றும் பின்னர் அவர்கள் அதை சரிபார்த்து ஒப்புக்கொள்வார்கள் என்றும் கூறினார்.

இதற்கான ஒப்புதல் வழங்கப்பட்ட பின்னர் இந்த திட்டம், எந்த செலவுகளும் இல்லாமல் கட்டம் கட்டமாக மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.