September 28, 2022

குழந்தையை போல மரங்களைப் பாதுகாத்த விடுதலைபுலிகள்!

மட்டக்களப்பு – பதுளை வீதியில் உள்ள புத்தம்புரி பகுதியில் விடுதலைப்புலிகளினால் பராமரிக்கப்பட்ட கொய்யாத்தோட்டம் இன்றும் காய்த்து கொண்டுதான் இருக்கின்றது.

கொய்யாத்தோட்டம் என்று அழைக்கப்படும் மேற்படி இடமானது விடுதலைப்புலிகளின் காலத்தில் மிகப்பெரிய தோட்டமாக இருந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் காலத்திற்குப் பின்னர் குறித்த தோட்டத்தை அரசாங்கமோ அல்லது நிறுவனங்களோ பொறுப்பேற்று நடத்த தவறியதால் குறித்த பிரதேசத்தில் காடுகள் நிறைந்து காணப்படுகின்றது.

விடுதலைப் புலிகளின் கொய்யாத்தோட்டம்!

தற்போது கச்சான் செய்கை இங்கு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், அங்கு காணப்படுகின்ற கொய்யாத்தோட்டம் மட்டும் காடுகள் நிறைந்த பிரதேசமாக காணப்படுகின்றது.

இருந்தும் புலிகளினால் பராமரிக்கப்பட்ட கொய்யாத்தோட்டம் இன்றும் காய்த்து குழுங்குவதுடன் குறித்த பகுதிகளுக்குச் செல்லும் பலர் கொய்யாப் பழங்களை பறித்து உண்பதையும் காணக்கூடியதாக உள்ளது.

உலக வெப்பமயமாதல் மற்றும் மழை அற்றுப்போதல் போன்ற காரணங்களுக்கு காடழிப்பு ஒரு முக்கியாமான பிரச்சினையாக இருந்துவருகின்றது. பூமியின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கின்ற செயற்பாடாக காடழிப்பு நிகழ்ந்துவருகிறது.

காடுகள் மனிதர்களாலும் இயற்கையாலும் அழிக்கப்படுகின்றன. பாரிய மரங்களை அடியோடு வெட்டிச் சாய்த்தல், காடுகளுக்கு தீ மூட்டுதல் உள்ளிட்ட மனித செயற்பாடுகள் வனங்களின் பாதுகாப்பை சீர்குலைக்கின்றன.

குழந்தையைப் போல மரங்களைப் பாதுகாத்த புலிகள்; ஆண்டுகள் கடந்தும் அழியாத உண்மை!

கிழக்கில் விடுதலைப் புலிகள் காடுகளைக் காத்தது மட்டுமன்றி புதிதாக காடுகளையும் உருவாக்கிவைத்தனர். குறிப்பாக விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிராந்தியமெங்கும் காணப்படும் தேக்கு மரக் காடுகள் விடுதலைப் புலிகளின் வளர்ப்பாகும். 1990ஆம் ஆண்டளவில் பல பகுதியில் நடப்பட்ட தேக்குமரம், காட்டுமரங்கள் விடுதலைப் புலிகளின் வனவளப் பாதுகாப்பு முகாமைத்துவத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

இதுமட்டுமன்றி ஏராளமான மரங்கள் பணிச்சங்கேணி-மூதூர் நெடுஞ்சாலை, செங்கலடி – பதுளைவீதி, கிரான் பாலம் நெடுகிலும், அம்பாரை கஞ்சிகுடிச்சாறு – தங்கவேலாயுதபுரம், பட்டிருப்பு – அம்பாரை நெடுஞ்சாலை நெடுகிலும் விடுதலைப்புலிகளால் மரங்கள் நாட்டபட்டன. இவை அனைத்தையும் இன்றும் கூட குறித்த சாலைகளால் பயணிப்பவர்கள் காணலாம்.

யுத்தத்திற்குப் பின்னர் கிழக்கிலிருந்த விடுதலைப் புலிகளின் பெரும்பாலாலன காடுகள் இராணுவத்தாலும் தென்னிலங்கை அரசியல்வாதிகளின் செல்வாக்கினாலும், முஸ்லிம் வியாபரிகளாலும் அழிக்கப்பட்டதுடன் வெட்டிக் களவாடப்பட்டும் உள்ளன.

கிழக்கில் மட்டக்களப்பு படுவான்கரை பகுதியில் யாராவது வீட்டு முற்றத்திலுள்ள மரத்தை வெட்டுவதாயின் விடுதலைப் புலிகளின் வன வளப் பாதுகாப்புப் பிரிவினரின் விசேட அனுமதியைப் பெற வேண்டும். இந்த உத்தரவை மீறிச் செயற்படும் யாராயினும் கடுமையாகத் தண்டிக்கப்பட்டனர்.

விடுதலைப் புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் இடம்பெற்ற கடும் யுத்தத்தின்போதும் காடுகள் அதிகமுள்ள இடங்களில் எறிகணைகளையோ மோட்டார் உந்து கணைகளையோ பாவிப்பதிலிருந்து விடுதலைப் புலிகள் வெகுவாகப் பின்வாங்கினர்.

அவ்வாறான பிரதேசங்களில் படையினருக்கு மிக அருகில் சென்று துப்பாக்கியால் மட்டும் சண்டை செய்ததாக தெரிவிக்கப்பட்டது.

இவ்வாறாக விடுதலைப் புலிகளால் இலங்கையின் வடக்கு கிழக்கின் நிலப்பரப்பு எங்கும் பரந்து காணப்பட்ட காடுகள் அனைத்தும் குழந்தையைப் போல் மிக பத்திரமாக பாதுகாக்கப்பட்டமையை இந்த நாளில் நினைவுகூருகின்றனை சாலப் பொருத்தமாகும்.