இனியும் சுமந்திரனை விடமுடியாது: கலாநிதி சர்வேஸ்வரன்!

எம்.ஏ. சுமந்திரன் கடந்த காலத்தில் நாடாளுமனறத்தில் வைத்து பௌத்தத்துக்கு முன்னுரிமை கொடுக்க தமிழ் மக்கள் இணக்கம் தெரிவித்துள்ளனர் என்ற கருத்தை கூறியிருந்தார். அப்போது நாடாளுமன்றில் இருந்த ஏனைய கூட்டமைப்பு எம்.பிக்களும் இதற்கு மறுத்துப் பேசவில்லை. இப்போது சமஸ்டி தேவையில்லை மாகாண சபைகளுக்கு வெள்ளையடித்து பொட்டு வைப்பதுபோல கொஞ்ச அதிகாரங்களை வழங்கினால் போதும் எனக் கூறியுள்ளார்.
இவரின் இக்கூற்றுக்கு கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகளோ அல்லது எம்பிக்களோ இம்முறையும் பதில் கூறவில்லை. அப்படியான நிலையில் தேர்தலில் ஒரு வாக்குறுதியும் இப்போது இன்னொரு கதையையும் கூறிக்கொண்டிருக்கும் இவர்களுக்கும் தமிழரசுக் கடசிக்கும் கொள்கை இருக்கின்றதா அவ்வாறு இருந்தால் அதனை வெளிப்படுத்த வேண்டுமென வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி.க.சர்வஸே;வரன் சவால் விடுத்துள்ளார்.
புதிய அரசமைப்பில் சமஸ்டி தேவையில்லை, மாகாண சபை முறைமையில் சிறு மாற்றம் செய்தாலே போதுமானதென நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியிருக்கும் கருத்தானது தமிழ் மக்களது 70 ஆண்டு காலப் போராட்டத்துக்குச் செய்த துரோகம் எனவும் அப்போராட்டத்தையே காட்டிக் கொடுத்த செயற்பாடு எனவும் சர்வேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.
“காலியில் இடம்பெற்ற கூட்டத்திலே தமிழ் மக்களுக்கு சமஷ்டி தேவையில்லை என்று கூறிவிட்டு பின்னர் தான் அவ்வாறு கூறவில்லை. சமஸ்டி என்ற பெயர்ப் பலகை வேண்டாம் என்றே கூறினேன் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கூறியுள்ளார். இது முழுப் பொய். இங்கே சுமந்திரனுக்கு பொய் கூறுவது என்பது எதுவும் புதிதானதுமல்ல.
ஏற்கெனவே, கனடாவில் பத்திரிகையொன்றுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டு விட்டது என கூறியிருந்தார். இது தொடர்பாக நாம் கட்சிக் கூட்டத்திலே கேட்டபோது உங்களுக்கு வேண்டுமானால் அது தெரியாமல் இருக்கலாம் என்று கூறியவர். இவ்வாறு பொய் கூறுவது அவருக்கு இயல்பானதாக இருக்கலாம். ஏனெனில் அவர் ஒரு சட்டத்தரணியாக பொய் கூறுவது இயல்பானதாக இருக்கலாம்.
70 ஆண்டு கால தமிழர்களது போராட்டத்தில் முன்னர் சமஸ்டி கோரிக்கை நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் முன்வைத்துப் போராடினார்கள். பின்னர் தனிநாட்டுக் கோரிக்கை முன்வைத்து ஆயுதப் போராட்டம் இடம்பெற்றது.
அதன்பின்னர் போராட்டம் மௌனிக்கப்பட்ட பின்னர் வடக்கு கிழக்கு இணைந்த சமஸ்டி அடிப்படையிலான தீர்வே எமது இனப்பிரச்சினைக்கு தீர்வாக அமையும் என்ற கொள்கையை முன்வைத்தே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தேர்தல்களில் வாக்குப் பெற்று வருகின்றது.
தற்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கொள்கை எது என்பதை மறந்து அல்லது அதற்கு மாறாக சுமந்திரன் தெரிவித்திருக்கின்ற கருத்தானது தமிழர்களது 70 ஆண்டு கால போராட்டத்துக்கு துரோகம் இழைத்தது மட்டுமல்லாது அதைக் காட்டி கொடுத்து இழிவுபடுத்தியுள்ளது.
சுமந்திரனின் அண்மைய கருத்துகள் தமிழர்களை காட்டிக்கொடுக்கும் துரோகத்தனமாகும். சுமந்திரன் கூறிய கருத்து தொடர்பாக இதுவரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ அல்லது கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளோ எதுவும் கூறாத நிலையில் அக்கூட்டமைப்பானது தமிழ் மக்களிடம் வாக்குகளை பெற்று அத்தமிழ் மக்களுக்கே துரோகம் செய்வது போல அம் மக்களது கையாலேயே அம்மக்களது கண்களில் குத்துகின்ற செயற்பாட்டை செய்துள்ளது. இவ்விடயத்தை அவ்வளவு இலகுவாக விட்டுவிட முடியாது. இது கண்டிக்கத்தக்க விடயம். இதனை ஒரு போதும் தமிழர்கள் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை” என்று கூறினார்.
தாயகச்செய்திகள்