சிங்கள அரசியல் தலைவரின் மனிதாபிமானம்; தமிழ் தலைவர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்!

 

சிறுவர் விவகார இராஜாங்க அமைச்சராக பதவி வகித்த விஜயகலா மகேஷ்வரனுக்கு எதிராக தென்னிலங்கை அரசியல்வாதிகள் வெளிப்படுத்திவரும் கண்டனங்களுக்கு எதிராக நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன கடும் ஆத்திரம் வெளியிட்டுள்ளார்.

விஜயகலா மகேஷ்வரன் தான் பிரதிநிதித்துவப்படுத்தும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண்களும், சிறுவர்களும் தொடர்ச்சியாக முகம்கொடுத்துவரும் பாலியல் வன்கொடுமைகள் உள்ளிட்ட கொடூரங்கள் தொடர்பில் ஆதங்கத்துடன் தெரிவித்த கருத்துக்களை அரசியல் மயப்படுத்தி இனவாதிகள் அரசியலாபம் தேட முற்பட்டுள்ளதாகவும் கலாநிதி விக்கிரமபாகு கருணாரத்ன சாடியுள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் வடக்கில் பெண்கள் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் அச்சமின்றி வாழ்ந்ததாகவும் தெரிவித்திருந்த விஜயகலா மகேஸ்வரன் அதனால் மீண்டும் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு தென்னிலங்கையில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்ததை அடுத்து அவர் இன்றைய (05.07.2018) தினம் பதவி விலகிய நிலையிலேயே நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன அவருக்கு ஆதரவாக குரல்கொடுத்துள்ளதுடன், விஜயகலாவின் கருத்துக்கள் பாதிக்கப்பட்ட சமூகத்தின் பிரதிநிதியொருவரின் அவலக்குரல் என்றும் கூறியுள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா அந்த மாவட்டத்தில் வாழும் மிகவும் கஸ்டப்பட்ட அடிமட்ட மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஒருவர். அதனால் பெண்கள் உட்பட அனைத்துத் தரப்பினரினதும் கவலைகளை மக்கள் அவரிடமே கூறிவருகின்றனர்.

யாழ்ப்பாணத்தில் தொடர்ச்சியாக பல்வேறு கொடூரங்கள் இடம்பெற்றுள்ளன. குறிப்பாக பெண்களையும், சிறுமிகளையும் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமைக்குட்படுத்தி படுகொலை செய்யப்பட்ட பல சம்பவங்கள் அரங்கேறின. இவற்றைத் தவிர பல்வேறு கும்பல்கள் வன்முறைகள் இடம்பெறுகின்றன. இவற்றினால் அதிகமாக பெண்களே பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த யதார்த்த நிலையை உணர்ந்ததாலேயே விஜயகலா அமைச்சராக இருந்தாலும் தற்போதுள்ள நிலமைகளை விட தமிழீழ விடுதலைப் புலிகள் காலத்தில் நிம்மதியாகவும், அச்சமின்றியும் பெண்கள் இருந்தனர் என்று ஆவேசத்துடன் கூறியிருந்தார்.

இது ஒரு பெண்னின் அவலக்குரல். இந்த யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் பாதிக்கப்பட்ட பெண் தெரிவத்த கூற்றை அரசியலாக்கியுள்ள இனவாதிகள் விஜயகலா ஏதோ விசேட அரசியல் பிரகடனமொன்றை செய்ததுபோல் பிரசாரம்செய்து எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர்.

அவர்கள் மாத்திரமன்றி ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும் சில மடையர்களும் விஜயகலாவிற்கு எதிராக குரல்கொடுத்துள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்காக குரல்கொடுப்பதுக்குக் கூட பெண் ஒருவருக்கு அனுமதி இல்லா ஒரு நாடா இது என்று கேட்க நான் விரும்புகின்றேன்.

ஐக்கிய தேசியக் கட்சியின் யாாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஷ்வரன் போன்றவர்களின் கவலைகளுக்கு தீர்வு காணப்பட வேண்டுமாயின் இனியும் தாமதிக்காது புதிய அரசியல் யாப்பை உருவாக்கி மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்கள் உட்பட முக்கிய அதிகாரங்களை பகிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் நவ சம சமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரமபாகு கருணாரத்ன வலியுறுத்தியுள்ளார்.

“ வடக்கில் தொடரும் வன்முறைகளையும், குற்றங்களையும் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தோம். அது மாத்திரமன்றி மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்குமாறும் தொடர்ச்சியாக கூறிவந்தோம்.

இதற்கு தென்னிலங்கை பிரதான அரசியல் கட்சிகள் இணங்கியிருந்தன. ஆனால் இதுவரை மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்கவில்லை. இந்த நிலையிலேயே வட மாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரனும் இன்றைய தினம் தங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் வழங்கப்பட்டால் சில வாரங்களுக்குள் குற்றங்களை ஒழிப்பதாக கூறியிருக்கின்றார்.

ஏனெனில் சிங்கள பொலிசாருக்கு அங்கு சென்று குற்றங்களை முழுமையாக ஒழிக்க முடியாது. சிங்கள பொலிசார் எவ்வளவுதான் சிறப்பாக கடமையை ஆற்றினாலும் அவர்களுக்கு தமிழ் மொழி தெரியாது, அவர்களின் தனித்துவமான கலாசாரம், பாரம்பரியங்கள் குறித்து தெரியாது, அவர்களுக்கிடையிலான குலம் கோத்திரம் தொடர்பான சிக்கல்கள் தெரியாது. இதனால் பிரச்சனைகளுக்கு சரியான தீர்வை ஏற்படுத்த முடியாது. அதனாலேயே முதலமைச்சர் விக்னேஸ்வரன் கூறுவது போல் மாகாண சபைகளுக்கு பொலிஸ் அதிகாரங்களை வழங்க வேண்டும் என்று நாமும் வலியுறுத்துகின்றோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் விஜயகலாவின் கருத்து தொடர்பில் விஜயகலாவுக்கு ஆதரவாக வடக்கு முதலமைச்சர் தவிர்த்த பெரும்பான்மையான தமிழ் தலைவர்கள் எந்த வித ஆதரவும் வழங்கவில்லை எனவும், இவர்கள் விக்கிரமபாகு கருணாரத்னவிடம் இருந்து கற்றுக்கொள்ள வேண்டும் என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Allgemein