மக்களை காப்பாற்ற புலிகள் தேவை!

விடுதலைப்புலிகளது மீள் உருவாக்கத்திற்கான தேவை பற்றி தமிழ் மக்கள் கடுமையாக சிந்திக்க தொடங்கியுள்ளனர்.இதனை அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனே கூறியுள்ளாரென வடமாகாண மீனவ சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று செவ்வாய்கிழமை நடத்தப்பட்ட பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட அதன் தலைவர் வே.தவச்செல்வம் கருத்து தெரிவிக்கையில் இன்று பலாலியில் நடைபெற்ற சந்திப்பில் இராணுவத்தளபதி தர்சன ஹெட்டியராட்சியிடம் இதனை தெரிவித்திருப்பதாகவும் கூறினார்.

குறிப்பாக கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பருத்தித்துறை வெளிச்சவீட்டினை விடுவித்தல்,படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள கரையோரப்பிரதேசங்களது விடுவிப்பு,தங்கியிருந்து மீன்பிடியில் ஈடுபடும் மீனவர்களிற்கான வயர்லெஸ் கருவிகளை பயன்படுத்தும் அனுமதி,கடலில் தொழிலின் போது காணாமல் போகும் மீனவர்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டதாக தெரிவித்தார்.

மக்களது அன்றாட பிரச்சினைகளை தீர்ப்பதிலும் சட்டம் ஒழுங்கை பேணுவதிலும்; அரசு தவறுமானால் மக்கள் தமது பொற்காலமான புலிகளது ஆட்சிக்காலத்தை மீள விரும்புவரென மீனவ அமைப்புக்கள் தெரிவித்துள்ளன.
இதேவேளை யாழ்ப்பாணத்தில் சட்டம் ஓழுங்கு சீர்குலைவதற்கும் படையினருக்கும் தொடர்பில்லையென மறுதலித்துள்ள யாழ்.மாவட்ட இராணுவத்தளபதி காவல்துறை அதனை தவறவிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

இதனிடையே வடமாகாண ஆளுநர் சட்டம் ஒழுங்கைப்பேண பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பாரென தாம் நம்பவில்லையென மீனவ அமைப்பு பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.

தாயகச்செய்திகள்