போராளிகளின் குடும்பங்களிற்கு உதவி வழங்குவதை மைத்திரி மறுப்பது ஏன்?

போராளிகளின் குடும்பங்களிற்கு உதவி வழங்குவதை மறுக்கின்ற ஜனாதிபதி உள்ளிட்ட அமைச்சர்கள் அடங்கிய இந்த அரசின் செயற்பாடுகள் இந்த நாட்டின் நல்லெண்ணத்திற்கும் எதிர்காலத்திற்கும் நல்லதல்ல என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்கினேஸ்வரன் காட்டமாகத் தெரிவித்திருக்கின்றார்.
உயிரிழந்த புலிகளின் குடும்பத்திற்கு நஷ்ர ஈடு வழங்க வேண்டுமென மீள்குடியேற்ற புனர்வாழ்வு அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் அமைச்சரவையில் முன்வைத்த யோசனைக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அமைச்சர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருக்கின்றமை குறித்து முதலமைச்சரிடம் கேட்ட போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இவ்விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்..
புலிகள் இறந்துவிட்டார்கள் அழிந்துவிட்டார்கள் என்று சொன்ன பின்னர் அதிலிருந்து வந்தவர்களுக்கு எந்தவிதமான வாழ்வாதார உதவிகளையும் கொடுக்காமல் விடுவது மனித உரிமைகளுக்கு அப்பாற்பட்டது.
மனித உரிமைகளுக்கு எதிரான ஒரு நடவடிக்கை என்று நான் நம்புகின்றேன்.
அதாவது புலிகள் மீது ஏதோ அரசியல் ரீதியான காழ்ப்புணர்ச்சிகள் இருப்பதால் மக்களை மக்களாகப் பார்க்காதது பிழையான கருத்தென்றே நம்புகின்றேன்.
அமைச்சர் சுவாமிநாதன் அது சம்மந்தமாக நடவடிக்கை எடுப்பது மிகச் சரியானது. அதற்கு ஏற்றவாறு அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டும்.
ஆனால் அதற்கான நடவடிக்கையை அரசாங்கம் எடுக்காததது பிழை என்று தான் நான் கூறுவேன்.
இதே போன்று தான் இராணுவத்தினரைக் காட்டிக் கொடுக்கப் பார்க்கின்றனர் என்றெல்லாம் சிலர் கூறிக் கொண்டிருக்கின்றார்கள். இராணுவத்தை யாரும் காட்டிக் கொடுக்கவில்லை.
அந்த இராணுவத்திலும் பிழைகளைச் செய்தவர்களையே காட்டிக் கொடுக்குமாறே கூறுகின்றோமேயொழிய முழு இராணுவத்தையும் பிழை என்று சொல்லவில்லை.
ஆகவே இதிலே உண்மை எது பொய் எது என்ற எந்தவிதமானதொரு அடிப்படையும் இல்லாமல் அவர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியின் நிமித்தம் சில சில நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகிறது.
அது இந்த நாட்டின் நல்லெண்ணத்திற்கும் எதிர்காலத்திற்கும் நல்லதென்று கூற முடியாது.

தாயகச்செய்திகள்