சிறிலங்காவின் கடல் வளங்கள் குறித்து ஆய்வு செய்ய வருகிறது நோர்வே கப்பல்


கடல் வளங்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்வதற்காக, நோர்வேயின் ஆய்வுக் கப்பலான, Dr Fridtjof Nansen சிறிலங்காவுக்கு வரவுள்ளது.

எதிர்வரும் 21ஆம் நாள் சிறிலங்கா வரவுள்ள இந்த ஆய்வுக் கப்பல், வங்காள விரிகுடாவில் சிறிலங்காவின் கடல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், 26 நாட்கள், ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது.

இந்த ஆய்வுகளில் சிறிலங்கா, மற்றும் நோர்வேயைச் சேர்ந்த விஞ்ஞானிகளும், ஆய்வாளர்களும் ஈடுபடவுள்ளனர்.

சிறிலங்கா- நோர்வே இடையிலான மீன்பிடி தொடர்பான தொழில்நுட்ப மற்றும் நிறுவன ஒத்துழைப்பு திட்டத்தின் அடிப்படையிலேயே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது.

மீன்களின் வளம் உள்ளிட்ட கடல் வளங்களின் தற்போதைய இருப்பு தொடர்பாக மதிப்பீடுகளைச் செய்வதே இந்த ஆய்வின் நோக்கமாகும்.

கடைசியாக, சிறிலங்காவில் 1978- 1980 காலப்பகுதியில், இந்தக் கப்பல் கடல் வள ஆய்வை மேற்கொண்டிருந்தது.

இந்த ஆய்வை மேற்கொள்ளும் நோர்வே கப்பல், நோராட் நிறுவனத்துக்குச் சொந்தமானதாகும்.

Allgemein