தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் இலங்கை அகதி பலி:

தூத்துக்குடி ஸடெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் இலங்கை அகதி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இலங்கை ராணுவத்தினரின் தோட்டாவுக்கு தப்பியவர் தூத்துக்குடியில் பொலிசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் இலங்கை அகதி கே.கந்தையா (58) என்பவரே உயிரிழந்துள்ளார்.
தூத்துக்குடி சம்பவத்தில் பொலிசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
இலங்கை அகதியான இவர் தூத்துக்குடி சிலோன் காலனியில் மனைவி செல்வமணி (48), மகன் ஜெகதீஸ் வரன் (27) ஆகியோருடன் தங்கியிருந்தார்.
கட்டுமான வேலை செய்து வந்த இவர் ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். தனி மனித உரிமைக்காக போராடுவதில் முன்னணியில் இருந்தார்.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு 100 வது நாள் போராட்டத்தின் போது கலெக்டர் அலுவலகம் சென்ற அவர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
இந்த வீடியோ அனைத்து தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடப்பது யார்? என்ற கேள்வியை எழுப்பியது.
இந்தநிலையில் அவரது மனைவி செல்வமணிக்கு தனது கணவர் துப்பாக்கி சூட்டில் பலியானது தெரிந்துவிட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதறி அழுதார்.
இதுகுறித்து அவர் கூறும் போது,
தொலைக்காட்சியில் பார்த்தவுடன் துப்பாக்கி சூட்டில் பலியானது எனது கணவர் என தெரிந்து விட்டது.
இலங்கையில் இராணுவ தாக்குதலுக்கு பயந்து உயிர் பிழைக்க மற்ற தமிழர்களுடன் நாங்களும் கடந்த 1981 ஆம் ஆண்டு இந்தியா வந்தோம்.
தற்போது தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் அவர் பலியாகி விட்டார்” என்றார்.
துப்பாக்கி சூட்டில் பலியான கந்தையாவுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக சிலோன் காலனியில் அவரது உருவப்படம் பொறித்த பேனர் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அவரது மகன் ஜெகதீஸ்வரன் பிறவியிலேயே மனவளர்ச்சி குன்றியவர் என கூறப்பட்டுள்ளது.
தூத்துக்குடி துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு படிப்புக்கு தகுந்தபடி வேலை வழங்குவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
ஆனால் கந்தையாவின் மகன் மனவளர்ச்சி குன்றியவர். படிப்பறிவு இல்லாதவர் அவரது மனைவி குடும்ப தலைவி. அவர் தனது மகன் ஜெகதீஸ்வரனை கவனிக்க வேண்டியுள்ளது.
கந்தையாவின் வருமானத்தை மட்டுமே நம்பியிருந்த அவரது குடும்பத்தை காப்பாற்ற பாதுகாவலர் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உலகச்செய்திகள்