கண்ணீர்விட்டுக் கதறியழுத இளஞ்செழியன்!

யாழ். மண்ணை நேசித்தேன்; யாழ். மண்ணை சுவாசித்தேன்; ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது. மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது”

இவ்வாறு கண்ணீருடன் தனது வேதனையை வெளிப்படுத்தினார் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன்.

“யாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண். அமைதி – சாந்தியை விரும்புகின்ற மண். மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ்.மண்ணுக்கு ‘குட் பாய்’” என்று கூறி கண்ணீர்விட்டார்.

திருகோணமலை மேல் நீதிமன்றுக்கு மாற்றலாகிச் செல்லும் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியனின் சேவைக்கு மதிப்பளித்து பிரிவுபசார வைபவம் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் நேற்று (23) புதன்கிழமை இடம்பெற்றது.

இந்த வைபவத்தில் ஏற்புரையாற்றிய போதே மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இவற்றைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:

யாழ்ப்பாணத்தில் வித்தியா என்ற மாணவி உயிரிழந்த செய்தி, யாழ்ப்பாணம் நீதிமன்றம் தாக்குதலுக்குள்ளான செய்தி, அதனையடுத்து ஜனாதிபதி யாழ்ப்பாணத்துக்கு விரைந்த செய்தி, தொடர்ந்து பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் யாழ்ப்பாணத்துக்கு விரைந்த செய்தி.

இவை நான்கு செய்திகளுக்குப் பின்னர் 48 மணி நேரத்தில் யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியாக என்னைப் பதவியேற்குமாறு பிரதம நீதியரசர் ஸ்ரீபவன் அவர்களால் எனக்கு கட்டளை வழங்கப்பட்டது.

கல்முனை மேல் நீதிமன்றிலிருந்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு வந்தேன். அந்த வகையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் 3 ஆண்டுகள் நான் சேவையாற்றுவதற்கு காரணமாகவிருந்த எமது முன்னாள் பிரதம நீதியரசர் கே.ஸ்ரீபன் அவர்களை நன்றியுடன் நினைவுகூருகின்றேன்.

மாணவி வித்தியா படுகொலை வழக்கின் ‘ட்ரயல் அட் பார்’ விசாரணையில் என்னையும் ஒரு நீதிபதியாக நியமித்து உத்தரவு பிறப்பித்த இன்றைய பிரதம நீதியரசர் டெப் அவர்களுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாண சட்டத்தரணிகள், கிளிநொச்சி மாவட்ட சட்டத்தரணிகள் என்னுடைய நீதிச் சேவைக்கு அரும்பெரும் துணையாக இருந்ததையிட்டு அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற பதிவாளரும் உத்தியோகத்தர்களும் என்னுடன் அன்புடனும் ஆதரவுடனும் பழகி, ஒவ்வொரு பணியையும் செய்தார்கள். சொற்ப காலம் போல் உள்ளபோதும் 3 ஆண்டுகள் உருண்டு ஓடிவிட்டன. உங்களுடைய சேவை என்னுடைய நீதிமன்ற சேவைக்கு உதாரணமாக இருக்கின்றது. எனக்கு உதவியாகவும் ஒத்தாசையாகவும் இருந்த பதிவாளருக்கும் உத்தியோகத்தர்களுக்கும் எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ்ப்பாண மண்ணில் அநியாயங்கள் – அட்டூழியங்கள் அரங்கேறிய போது, தடுத்து நிறுத்தவேண்டிய கடப்பாடு நீதித்துறைக்கு இருந்தது. நீதிமன்றத் தீர்ப்புக்கள் மூலம் கட்டுப்படுத்தக் கூடிய குற்றங்களையும் கட்டுப்படுத்தும் நடவடிகையில் நான் ஈடுபட்டேன். அதற்கு உதவிபுரிந்தவர்கள் யாழ்.மாவட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள். அவர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

யாழ். மண்ணை நேசித்தேன். யாழ். மண்ணை சுவாசித்தேன். வித்தியா என்ற மாணவியின் ஆத்மா சாந்தியடைய தீர்ப்பு எழுதினேன். ஆனால் சாதனைகள் – வேதனைகள் இருந்தவேளை சோதனை ஒன்று ஏற்பட்டது.

மூன்று மெய்ப்பாதுகாவலர்களுடன் யாழ். மண்ணுக்கு வந்தேன். இரண்டு மெய்ப்பாதுகாவலர்களுடன் திரும்பிச் செல்லுகின்ற ஓர் துர்ப்பாக்கிய நிலை எனக்கு ஏற்பட்டுவிட்டது.

யாழ்ப்பாண மக்கள் அமைதியாக வாழவேண்டும் என நினைத்தேன். என்னைக் காப்பாற்ற தன்னுயிரைக் கொடுத்த அந்த சிங்கள சகோதரனை நினைத்து ஒவ்வொரு நாளும் எனது மனம் வேதனையில் துடிக்கின்றது.

கல்முனையிலிருந்து எனக்கு இடமாற்றம் என என்னுடன் சேர்ந்து வந்தவர்கள், திருமலைக்கான எனது இடமாற்றத்தில் இருவர் மட்டும் என்னுடன் வருகிறார்கள். மூன்றாவது நபரைப் பலிகொடுத்து, செல்லுகின்றமைதான் வேதனையாக உள்ளது.

எனது வேதனையில் பங்குகொண்ட அனைத்து நீதிமன்ற உறவுகளுக்கும் யாழ். மண், வடக்கு – கிழக்கு உறவுகளுக்கும் நன்றி கூறுகின்றேன். விசேடமாக சிங்கள சகோதர சகோதரிகள், தாய்மார் என்னையும் அவர்களது வீட்டுப் பிள்ளையாக ஏற்றுக்கொள்ளுமளவுக்கு அந்த துர்ப்பாக்கிய சம்பவம் ஏற்படுத்திவிட்டது.

அந்தவகையில் இலங்கை வாழ் – வெளிநாடுகள் வாழ் தமிழ், சிங்கள உறவுகள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

ஒரு நீதிபதிக்கு ஏற்பட்ட இழப்பு – ஒரு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஏற்பட்ட மரணம் தமிழ் – சிங்கள மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்திய நிகழ்வு என்பதை என்னால் உணரக்கூடியதாக இருந்தது.

அந்த பொலிஸ் உத்தியோகத்தரின் பிள்ளைகளை நான் இறக்கும் வரையும் பார்ப்பேன். அவர்களும் எனது பிள்ளைகள். நன்றி மறப்பது நன்றன்று.

ஒரு தமிழ் நீதிபதியின் உயிரைக் காப்பாற்ற சிங்கள பொலிஸ் உத்தியோகத்தர் உயிரைக் கொடுத்தான் என்ற வரலாற்றை அந்த மாபெரும் வீரன் யாழ்.மண்ணில் பதித்துவிட்டுச் சென்றுள்ளான்.

நீதித்துறையில் இளஞ்செழியன் சாதனை படைத்தார் என்று சொல்வார்கள். அது எனது தொழில். ஆனால் எனது தொழிலைக் காப்பாற்ற – எனது உயிரைக் காப்பாற்ற ஒருவன் சாதனை படைத்து மேற்சென்றான், அது தியாகம். அதற்கு கோடான கோடி கோடி கொடுத்தாலும் முடியாத விடயம்.

ஒரு நண்பர் எனக்குக் கூறினார், “இனிவரும் காலங்களில் நீங்கள் தமிழ் நீதிபதி எனப் பெயர் எடுக்கக் கூடாது. உங்களுக்காக சிங்கள சகோதர, சகோதரிகள், தாய்மார்கள் அழுகின்றார்கள். எனவே இந்த நாட்டின் – இலங்கைத் தீவின் நீதிபதி என்றே இளஞ்செழியனை அழைக்கவேண்டும்” என்றார். பெருமையாக இருந்தது.

யாழ்ப்பாண மண் உணர்வுபூர்வமான மண். அமைதி – சாந்தியை விரும்புகின்ற மண். மூன்று ஆண்டுகள் என்னால் முடிந்த அனைத்து முயற்சிகளையும் செய்து யாழ். மண்ணை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளேன். விடைபெறும் நேரம் வந்துவிட்டது. யாழ்.மண்ணுக்கு ‘குட் பாய்” – என்றார்.

தாயகச்செய்திகள்