வமாகாண சாரதிகள் எடுத்த ‘அதிரடி’ முடிவு..! – மக்கள் மகிழ்ச்சி…!!!


இலங்கையின் வடமாகாணத்தைச் சேர்ந்த சாரதிகளுக்கான பொதுக்கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் ‘டிப்பர்’ சாரதிகள், ‘லொறி’ சாரதிகள், ‘மோட்டார் சைக்கிள்’ சாரதிகள் என பல கையான சாரதிகள் கலந்து கொண்டு, பல முக்கிய முடிவுகளை எடுத்துள்ளனர்.
அதில் முக்கியமான தீர்மானம் ‘இனிமேல் மோட்டு ஓட்டம் ஓடுவதில்லை’ என்பதாகும். குறிப்பாக ரோட்டில் காவல்துறை நின்றாலும் சரி, நிற்காவிட்டாலும் சரி இனிமேல் அளவான வேகத்திலேயே வாகனம் ஓட்டுவோம் என்று அவர்கள் முடிவெடுத்துள்ளார்கள்.
அதிலும் நகரப் பகுதிகளை ஊடறுத்துச் செல்லும் வீதிகளில் 30 கிலோமீட்டர் வேகத்தில் மட்டுமே செல்வோம் என்று ஒருமித்த குரலில் உணர்ச்சி ததும்ப குறிப்பிட்டுள்ளார்கள்.
கணேசன் எனும் லொறி ஓட்டுனர் தெரிவிக்கும் போது ‘நான் எப்போதுமே தொங்கல் வேகத்தில் தான் லொறி ஓட்டுவேன். என்னுடைய லொறி உறுமிக்கொண்டு வேகமாக வரும்போது சின்னப் பிள்ளைகள் பயந்து சிதறி ஓடுவது வழக்கம். இதுவரை காலமும் ஈவு இரக்கம் இல்லாமல் லொறி ஓட்டிய நான் இனிமேல் திருந்தலாம் என்று நினைக்கிறேன்’ என்று குறிப்பிட்டார்.
கொழும்பு – வவுனியா பஸ் சேவையில் சாரதியாகப் பணிபுரியும் கண்டன் என்பவர் தெரிவிக்கும் போது ‘நானும் மோட்டு ஓட்டமே ஓடுவது வழக்கம். குறிப்பாக என்னுடைய பஸ்சை யாராவது ‘ஓவர் டேக்’ செய்தால், உடனே எனக்கு கோபம் வரும். அது ஒரு கௌரவ குறைச்சல் என்று நினைத்து போட்டிக்கு ஓடுவேன். பேருந்தில் இருக்கும் வயோதிபர்கள், கர்ப்பிணி பெண்கள் பற்றியெல்லாம் நான் கவலைப்பட்டதே இல்லை. இனிமேல் திருந்துகிறேன்’ என்று ஆவேசமாக குறிப்பிட்டார்.
கஜன் எனும் மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் தெரிவிக்கும் போது ‘நான் வைத்திருப்பது எடை குறைந்த மோட்டார் சைக்கிள். வெளிநாட்டு மோட்டார் சைக்கிள்கள்
போல நல்ல எடையுடன் எனது மோட்டார் சைக்கிள் இல்லை என்பதை இப்போதுதான் உணர்கிறேன். ‘வெயிட்லெஸ்’ மோட்டார் சைக்கிளை 100, 120 இல் ஓட்டினால் கொன்றோல் இருக்காது என்பதை அறியாத எருமை மாடாக இவ்வளவு நாளும் இருந்துவிட்டேன். இனிமேல் திருந்தி ஒழுங்கான வேகத்தில் ‘ஹெல்மெட்’ போட்டுக்கொண்டு ஓடுவேன்’ என்று கண்ணீர் மல்க குறிப்பிட்டார்.
டுக்சன் எனும் இன்னொரு மோட்டார் சைக்கிள் ஓட்டுனர் குறிப்பிடும்போது ‘நான் ரெயில்வே கடவைகளைக் கடக்கும் போது இனிமேல் நின்று, நிதானமாக வலம் இடம் எல்லாம் பார்த்துவிட்டு ரெயின் வரவில்லை என்பதை உறுதி செய்த பின்னர் தான் கடவையைக் கடப்பேன்’ என்று குறிப்பிட்டார்.
மேலும் அவர் குறிப்பிடுகையில் ‘எந்த அலுவலும் இல்லாத போதும் கூட அடிச்சுப் பிய்ச்சுக்கொண்டு மோட்டார் சைக்கிள் ஓடும் பழக்கத்தை இன்றோடு கைவிடுகிறேன். 20 வயதிலேயே நான் வெள்ளை பிரட்ட விரும்பவில்லை’ என்று குறிப்பிட்டார். ( வெள்ளை பிரட்டுதல் என்றால் சாவதைக் குறிக்கும். பாம்பு செத்தால் வெள்ளை பிரட்டும் இல்லையா? அதுதான் ).
சாரதிகளின் இந்த தீர்மானத்தை மக்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளார்கள்.
குறிப்பு : இங்கு போட்டிருக்கும் படங்கள் பொத்தாம் பொதுவாக கூகுளில் எடுத்தவை. எந்தவொரு சாரதியையும் குறிப்பன அல்ல.

தாயகச்செய்திகள்