அணுகுண்டு மையத்தை நிர்மூலமாக்க வடகொரியா முடிவு! நன்றி தெரிவித்த டிரம்ப்!

வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் – அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் எதிர்வரும் ஜூன் மாதம் 12 ஆம் திகதி சிங்கப்பூரில் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளனர்.
பேச்சுவார்த்தைக்கு முன்னர் வடகொரியா தன்வசம் வைத்துள்ள அணு ஆயுதங்களை தங்களிடம் தந்தால் வாங்கிகொள்ள தயாராக இருப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் வடகிழக்கில் மண்ட்டாப் மலைப்பகுதியில் உள்ள புங்யே-ரி பகுதியில் அந்நாடு அணு குண்டு பரிசோதனை நடத்தும் மையத்தையும், அதற்காக மலைகளை குடைந்து வெட்டப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களையும் நிர்மூலமாக்கி மூடிவிட வடகொரியா அரசு முடிவெடுத்துள்ளதாக அரசுக்கு சொந்தமான ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பருவநிலை மற்றும் காற்றின் போக்கு ஆகியவற்றை கருத்தில் கொண்டு எதிர் வரும் 23 அல்லது 25 ஆம் திகதிகளில் இந்த மூடுவிழா நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள அணு ஆராய்ச்சி மற்றும் கண்காணிப்பு மையங்கள், சோதனை மற்றும் பாதுகாப்பு சாவடிகளும் அகற்றப்படும் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், வடகொரியாவின் இந்த முடிவுக்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக டிரம்ப் டுவிட்டரில் கூறுகையில், எங்கள் சந்திப்பு நடப்பதற்கு முன்னதாகவே அணு குண்டு சோதனை மையத்தை நிர்மூலமாக்க போவதாக வடகொரியா அறிவித்துள்ளது. வடகொரியாவின் இந்த உறுதியான நடவடிக்கைக்கு நன்றி என பதிவிட்டுள்ளார்.

உலகச்செய்திகள்