குருநகர் மக்களின் போராட்டத்திற்கு ஆளுநர் வழங்கிய யோசனை!

வதிவிடத்திற்கு காணி வழங்குமாறு போராட்டம் நடாத்திய குருநகர் வாழ் குடும்பங்களுக்கு அரச உயர் அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் மாற்று யோசனையினை ஆளுநர் வழங்கியுள்ளார்.

மது வரித்திணைக்களத்திற்கு சொந்தமான காணியில் அத்துமீறி குடியமர்ந்த மக்கள் அண்மையில் நாவற்குழியில் அமைந்துள்ள தேசிய வீட்டமைப்பு அதிகாரசபைக்கு சொந்தமான காணியில் குடியர்த்தப்பட்டனர்.
எனினும் காணி கிடைக்காத 15 குடும்பங்கள் பொலிஸாருக்கு ஒதுக்கப்பட்ட காணியில் தற்காலிக கொட்டகைகள் அமைத்து குடியமர்ந்தனர்.

எனினும் பொலிஸாரினால் அவர்கள் வெளியேற்றப்பட்டனர். பின்னர் தமக்கு காணி வழங்குமாறு கோரி ஆளுநர் செயலகம் முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றில் நேற்றயதினம் ஈடுபட்டிருந்தனர்.

அவர்களுடன் பேச்சு நடாத்திய ஆளுநர் நாளை (இன்று) பொலிஸார் மற்றும் அரச உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடி பதில் தருவதாக உறுதியளித்திருந்தார். இந்த நிலையில் போராட்டத்தினை கைவிட்டு சென்றிருந்தனர்.
இந்த நிலையில் அரசாங்க அதிபர் நா.வேதநாயகன், யாழ்ப்பாணம் மற்றும் தென்மராட்சி பிரதேச செயலர்கள், சாவகச்சேரி மற்றும் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள், கிராமசேவையாளர்கள், காணி திணைக்கள அதிகாரிகள் ஆகியோரை இன்று காலை அழைத்து பேசியிருந்தார்.
இதன்போது நாவற்குழியில் அரச காணிகள் அனைத்தும் பயன்பாட்டிற்கு வழங்கப்பட்ட நிலையில் மண்டைதீவு, யாழ்ப்பாணம் கல்லுண்டாய்வெளி, மருதம்கேணி போன்ற பகுதிகளில் காணப்படும் அரச காணிகளை குறித்த குடும்பங்கள் விரும்பும் பட்சத்தில் வழங்க முடியும் என்று அரசாங்க அதிபர் ஆளுநரிடம் தெரிவித்தார்.
அவர்களுக்கான குடிநீர் மற்றும் தற்காலிக கொட்டகைகளை உடனடியாக அமைப்பதற்கு உதவிகளை வழங்க தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்த முடிவினை போராட்டத்தில் ஈடுபட்ட குடும்பங்களுக்கு அறிவிக்கப்பட்டு மேலதிக தேவைகளுக்காக அரசாங்க அதிபரை தொடர்பு கொள்ளுமாறும் ஆளுநர் கேட்டுக்கொண்டார்.

தாயகச்செய்திகள்