‘கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகம் இடம்பெற்றால் நான் எதிர்ப்பேன்’;வண.ரன்முதுகல சங்கரட்ணதேரர்

செ.துஜியந்தன்

வில்பத்து பிரதேசத்தில் காட்டை அழித்து ஒரு இனத்தைக் குடியேற்ற முடியுமாயின் ஏன் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியாது என கேள்வியெழுப்பிய வண.ரன்முதுகல சங்கரட்ணதேரர், கல்முனையில் தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை நான் எதிர்ப்பேன் என்றும் தெரிவித்தார். 

கல்முனை ஸ்ரீ சுபத்திரராம மஹா விகாரையின் விகாராதிபதியும், கல்முனை சிவில் பாதுகாப்பு ஆலோசனைக் குழுவின் தலைவராகவும்,அம்பாறை மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத் தலைவராகவும், அம்பாறை வித்தியானந்த பிரிவெனாவின் தமிழ்ப்பாட வளவாளராகவும் இருக்கும் வண.ரன்முதுகல சங்கரட்ணதேரர் தினக்குரலுக்கு வழங்கிய விசேட நேர்காணல் வருமாறு.

கேள்வி; கல்முனைப் பிரதேசத்திற்க்கு நீங்கள் வந்து செய்த சேவைகள் என்ன?

பதில்; நான் கல்முனைப் பிரதேசத்துக்கு வருகைதந்து 14 வருடங்களாகிறது. இந்தப் 14 வருடங்களில் இங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களோடு மிகவும் ஐக்கியமாகப் பழகிவருகின்றேன். சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு சில நாட்களிலே நான் கல்முனைக்கு வந்து விட்டேன்.

அந்த நேரம் இங்குள்ள மக்கள் அம்பாறைக்கு இடம்பெயர்ந்து வந்திருந்தனர். அம் மக்கள் அம்பாறை டி.எஸ். சேனநாயகா கல்லூரியில் அகதிகளாக தங்கியிருந்தனர். அந்த வேளையில் இன, மத, குல, பேதம் பாராமல் தமிழ், முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் என்னால் முடிந்த உதவிகளைச் செய்திருக்கின்றேன். சுனாமி பாதிப்பிற்குள்ளான கல்முனை மக்களுக்கு அரச, அரசசார்பற்ற நிறுவனங்களை அணுகி அவர்களின் உதவிகளைப்பெற்றுக் கொடுத்துள்ளேன்.

கல்முனையில் இனங்களுக்கு இடையில் சகோதரத்துவத்தையும், புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதில் முன்னின்று செயற்பட்டு வருகின்றேன். நான் கல்முனைக்கு வரும் போது எனக்கு ஒரு தமிழ் வார்த்தை கூடத் தெரியாது. இங்குள்ள தமிழ் முஸ்லிம் மக்களிடம் தான் நான் தமிழில் பேசவும், எழுதவும் கற்றுக்கொண்டேன்.

குறிப்பாக எனக்கு மருதமுனையைச் சேர்ந்த ராசிக் என்பவரும், பாண்டிருப்பைச் சேர்ந்த இராசரெத்தினம் என்பவரும் தமிழ் கற்றுத்தந்தார்கள். அத்துடன் எனது சுயமுயற்சியினாலும் தமிழைக் கற்றுக் கொண்டேன். இப்போது இங்கிருக்கின்ற பௌத்த தேரர்களில் தமிழில் நன்கு பேசவும், எழுதவும் தெரிந்த ஒருவன் நான் மட்டும் தான்.

என்னைப்போல் சிங்களவர்கள் தமிழ் மொழியையும், தமிழர்கள் சிங்கள மொழியையும் கற்றுக் கொள்ளவேண்டும். முதலில் ஒருவருக்கொருவர் பேசுகின்ற மொழிகளை இரு இனமும் புரிந்து கொள்கின்றபோது இந்நாட்டில் பாதிப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணமுடியும்.

கேள்வி; கல்முனைப் பிரதேசத்தில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்களிடையே நீறுபூத்த நெருப்பாக இன ஐக்கியம் நிலவுகின்றது. இதற்கு காரணம் என்ன என நினைக்கின்றீர்கள்?

பதில்; இதற்கு முக்கிய காரணம் அதிகாரத் துஸ்பிரயோகமாகும். இப் பிரதேசத்தில் அரசியல், பொருளாதார ரீதியில் பலம் பெருந்தியவர்கள். இன்னுமொரு இனத்தின் உரிமைகளைப் பறித்தெடுக்கின்ற நிலையே காணப்படுகின்றது.

கல்முனையிலுள்ள அரச அலுவலகங்களைப் பார்த்தால் மேலதிகாரிகள் எல்லாம் ஒரு இனத்தைச் சேர்ந்தவர்களாகவே இருக்கின்றனர்.

இதனால் ஒரு இனம் பாதிக்கப்படுகின்றது. அரச அதிகாரிகள் இன, மத, குல பேதங்கள் பார்க்காமல் பரந்த மனப்பாங்குடன் மக்களுக்குச் சேவையாற்ற வேண்டும். அதிகாரங்களை துஸ்பிரயோகம் பண்ணக்கூடாது. கல்முனையில் சிங்கள மக்களும் வாழ்கின்றார்கள் இவர்களை யாரும் நினைத்துப் பார்ப்பதுமில்லை.

இங்குள்ள தமிழ் மக்களுக்கு இருக்கின்ற பிரச்சினை போன்று சிங்கள மக்களுக்கும் இருக்கின்றது. இங்குள்ள சிங்கள மகா வித்தியாலயம் எதுவித அபிவிருத்தியும் செய்யப்படாதுள்ளது. இந்த பௌத்த விகாரைக்குக்கூட எவரும் உதவி செய்வதில்லை.

முதலில் சேவை செய்பவர்கள் தங்கள் இனம் சார்ந்து சேவை செய்யாது எல்லோரும் இந்நாட்டு மக்கள் என்பதை உணர்ந்து சேவைகளைச் செய்யவேண்டும். அப்படிச் செய்கின்றபோது முரண்பாடுகளைத் தவிர்த்துக் கொள்ள முடியும்.

கேள்வி; கல்முனையில் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெறுகின்றதா?

பதில்; கல்முனையை அபிவிருத்தி செய்வதாக ஊடகங்களில் செய்தியாக மட்டுமே அறியக்கிடைக்கிறது. செயற்பாட்டில் எதுவும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. கல்முனையில் ஒழுங்கான ஒரு பஸ்தரிப்பு நிலையம் இல்லை, நல்லதொரு பொதுச்சந்தைக் கட்டிடம் இல்லை.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்ததொரு விளையாட்டு மைதானம் இல்லை. படித்த இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய ஒரு தொழிற்பேட்டை இல்லை. வெளிமாவட்டங்களில் இருந்து வருகின்ற உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரக்கூடியளவிற்கான வாய்ப்புவசதிகள் இல்லை, இங்குள்ள கடற்கரைப் பிரதேசம் கூட குப்பையாகவும், பற்றைக்காடாகவும் இரவு வேளையில் இருளடைந்த பிரதேசமாகவும் காட்சியளிக்கின்றது.

கல்முனையை அபிவிருத்தி செய்வதாகக் கூறுகின்றார்கள், மக்களை ஏமாற்றுகின்றார்கள் இங்கு ஒன்றும் நடைபெற்றதாகத் தெரியவில்லை. தமிழ்பேசும் மக்களின் பிரதிநிதிகளாகவுள்ள தமிழ்க்கூட்டமைப்பு உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஏனைய சிறுபான்மையின் சிறு கட்சிகள் அப்பாவி மக்களைப்பற்றி அக்கறை செலுத்துவதில்லை. அவர்கள் தங்களுடைய கட்சி நலனையும், உறுப்பினர்களின் சுயநலன்களையுமே முன்னெடுக்கின்றனர்.

இந்நாட்டில் கல்முனை நகர் என்பது சிறந்த வர்த்தக நகரம் என்று சொல்கின்றார்கள் இங்கு வர்த்தகர்களுக்குரிய எந்த வசதியும் இல்லை. தேர்தல் காலத்தில் மட்டும் அறிக்கைகள் வருகின்றது எனக்கு மிகவும் மனவேதனையளிக்கின்றது. கல்முனையில் எதனையும் கவனிக்கிறார்கள் இல்லை. அபிவிருத்தி என்று சொல்லி மக்களை பேய்க்காட்டுகிறார்கள்.

கேள்வி; கல்முனையில் முன்னெடுக்கப்படவுள்ள நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் இங்கு வாழும் தமிழ் மக்கள் மத்தியில் ஒருவித அதிருப்தி நிலவுகின்றதே இதைப்பற்றி தங்களது கருத்து என்ன?

பதில்; கல்முனை நகர அபிவிருத்தி திட்டம் எங்கே முன்னெடுக்கப்படுகின்றது. அப்படியொரு திட்டம் நடைபெறுவதாக நான் காணவில்லை. சும்மா சும்மா பேசுகின்றார்கள்.

அபிவிருத்தியைக் காணவில்லை. அப்படியொரு நகர அபிவிருத்தித் திட்டம் முன்னெடுக்கப்படுமாக இருந்தால் இங்குவசிக்கும் எந்தவொரு இனமும் பாதிக்கப்படாத வகையில் முன்னெடுக்கப்பட வேண்டும். ஒரு இனத்தை அழித்துக் கொண்டு மற்றுமொரு இனம் அபிவிருத்தியடைய முடியாது.

கல்முனை நகர அபிவிருத்தித் திட்டம் தொடர்பில் திறந்தவெளி கலந்துரையாடல்கள் நடைபெறவேண்டும். குறிப்பாக இங்கு வசிக்கும் தமிழ் மக்களுடன் முஸ்லிம் பிரதிநிதிகள் மனம் விட்டுப்பேச வேண்டும். தமிழ் மக்களின் நிலங்களை அபகரித்து எந்தவொரு திட்டத்தையும் செய்யமுடியாது. தமிழ் மக்களின் நியாயமான சந்தேகங்களுக்கு விடையளிக்கப்பட வேண்டும்.

கல்முனையில் வசிக்கும் மூவின மக்களும் ஒரே மேசையில் அமர்ந்து அவர்களுக்கு சாதகமான அபிவிருத்திகளை எவ்வாறு முன்னெடுக்கவேண்டும் எனத் திட்டம் தீட்டவேண்டும். அதைவிட்டு விட்டு பூட்டி இரகசிய அறைக்குள் இருந்து கொண்டு நகர அபிவிருத்தித் திட்டம் பற்றி ஒரு இனம் மட்டும் திட்டமிடக்கூடாது.

ஒரு இனம் சார்ந்த செயற்பாடுகள் இங்கு முரண்பாட்டிற்கே வழிவகுக்கும். இலங்கை என்பது எல்லோருக்கும் பொதுவான நாடு இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சுதந்திரமாக வாழக்கூடிய உரிமை இருக்கின்றது. இனவாதம், மதவாதம் இனியும் இந்நாட்டில் இருக்கக்கூடாது.

அவரவர் கலை கலாசார உரிமைகளை அவரவர் மதித்து நடக்கவேண்டும். இலங்கையில் இந்தப் பகுதி எனக்கு மட்டும் தான் சொந்தம். இங்கு நான் வைத்ததுதான் சட்டம் என எவரும் நினைக்கக் கூடாது ஒரே நாடு ஒரு தேசம் என்ற அடிப்படையில்தான் செயற்படவேண்டும்.

கல்முனை அபிவிருத்தியடைய வேண்டும் என்பதில் மாற்றக்கருத்துக்கு இடமில்லை. இங்கு தமிழ் மக்களுக்கு பாதகமான முறையில் நகர அபிவிருத்தி மேற்கொள்ளப்படுமாக இருந்தால் அதனை நானும் எதிர்ப்பேன்.

கேள்வி; கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் கடந்த 30 வருடங்களாக தரம் உயர்த்தப்படாதுள்ளது. இதனைப்பற்றி உங்களது அபிப்பிராயம் என்ன?

பதில்; கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும். இங்கு வாழும் தமிழ் மக்களின் நியாயமான இக் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும். இப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்துவதற்கு தடையாக இருப்பவர்கள் அதனைக் கைவிடவேண்டும்.

தமிழ்ப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படவேண்டும் என்ற போராட்டத்தில் நான் ஈடுபடவுள்ளேன். பல தடவைகள் அதற்கு ஆதரவாக செயற்பட்டுள்ளேன். இனிவருங்காலங்களில் பிரதேச செயலகம் தரம் உயர்த்தப்படாவிட்டால் நான் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தயாராகவுள்ளேன்.

வில்பத்து பிரதேசத்தில் காட்டை அழித்து ஒரு இனத்தைக் குடியேற்ற முடியுமாயின் ஏன் கல்முனை தமிழ்ப் பிரதேச செயலகத்தை தரம் உயர்த்த முடியாது எனக்கேட்கிறேன். இங்கு உடனடியாக ஒரு கணக்காளரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். இன்று எதிர்க்கட்சியாக இருக்கின்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஏன் இப் பிரதேச செயலகம் தரம் உயர்த்தல் விடயத்தில் மௌனமாக இருக்கின்றது. சம்பந்தன் ஐயா நினைத்தால் இதனைச் செய்யமுடியும்.

கேள்வி; நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் தொடர்பாக உங்கள் கருத்து?

பதில்; இந்நாட்டில் நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத்தேர்தல் முறை உடனடியாக மாற்றப்படவேண்டும். ஒரு கேலிக்கூத்தான தேர்தலாகவே இம் முறை அமைந்துள்ளது.

வெற்றிபெற்ற கட்சியினரால் கூட ஆட்சி அமைக்க முடியாத நிலையுள்ளது. உறுப்பினர்கள் தொகையை அதிகரித்து அவர்களுக்கான கொடுப்பனவுச் செலவுகளையும், வசதிகளையும் வழங்குவதற்கு மில்லியன் கணக்கில் செலவிட வேண்டிய அவசியம் அரசாங்கத்திற்கு ஏற்பட்டுள்ளது. உலகில் அபிவிருத்தியடைந்த நாடுகளைப் பார்த்தால் அங்குள்ள அரசாங்கத்தில் அமைச்சர்கள் தொகை மிகக்குறைவாகும்.

சிங்கப்பூரில் 17 அமைச்சர்கள் மாத்திரம் உள்ளனர். சீனாவில் 27 அமைச்சர்கள் உள்ளனர். சிறிய நாடான எமது நாட்டில் அமைச்சர்கள் தொகையைப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது. அமைச்சர்களுக்கும், பிரதியமைச்சர்களுக்கும் மக்களின் வரிப்பணத்தை செலவளித்து நாட்டைக் குட்டிச்சுவராக்குகின்றனர்.

இப்போதெல்லாம் மக்களுக்காக சேவை செய்ய எவரும் முன்வருவதில்லை. பதவிக்காகவே வருகின்றனர். இது கவலையளிக்கக்கூடிய விடயமாகும். நாட்டின் தேர்தல் முறையில் மாற்றம் கொண்டுவரவேண்டும்.

கேள்வி; இந்நாட்டு மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகின்றீர்கள்?

பதில்; நாட்டில் வாழ்கின்றவர்கள் தமது மதத்தை மதித்து மற்றவர் மதங்களை விமர்ச்சிக்காமல் தமது கடமையைச் செய்யவேண்டும். இது நமது தாய் நாடு என்ற உணர்வுடன் செயற்படவேண்டும்.

இந்நாட்டை மிக அழகான சிறப்பான செழிப்பான அபிவிருத்தியடைந்த தேசமாக கட்டியெழுப்புவதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும். நான் சிங்களவன், நான் தமிழன், நான் முஸ்லிம் என்ற பேதங்களின்றி நாம் இலங்கையர் என்ற ரீதியில் கைகோர்க்கவேண்டும்.

Allgemein