மே தினக் கூட்டங்கள் திட்டமிட்டபடி மே 01 நடைபெறும்: துரைராஜசிங்கம்.!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மே தினக் கூட்டங்கள் திட்டமிட்டபடி மே-01ம் திகதி வடகிழக்கு மாகாணங்களில் நடத்தப்படுமெனத் தெரிவித்திருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் செயலளர் துரைராஐசிங்கம்,
பௌத்த மகா நாயக்கர்களின் கோரிக்கையினையும், பௌத்தர்களின் புனித நாளான வெசாக்கையும் தமிழ்தேசிய கூட்டமைப்பு உதாசீனம் செய்யவில்லை.
அவர்களை நாம் மதிக்கிறோம். எனவும் கூறியிருக்கின்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மே தின நிகழ்வு தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே துரைராஐசிங்கம் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில்,
பௌத்த மத புனித நாளான வெசாக் பண்டிகையும், மே-01 தொழிலாளர் தினமும் ஒரே நாளில் வருகின்றது. இவ்வாறு முன்னரும் ஒரு தடைவ வந்திருக்கின்றது.
அப்போது தொழிலாளர் தினத்தை ஒரு வாரம் பிற்போட்டு நடத்தப்பட்டது. அவ்வாறே இந்த ஆண்டு தொழிலாளர் தினத்தையும் ஒரு வாரம் பின் தள்ளி நடத்தவேண்டும் என மகாநாயக்க தேரர்கள் மற்றும் பௌத்த அமைப்புக்கள் பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளன.
இதற்கமைய மே-07ம் திகதி தொழிலாளர் தினத்தை கொண்டாட ஒத்துழைப்பு வழங்குமாறு சகல கட்சிகளினதும் செயலாளர்களிடமும் கேட்டுள்ளது.
ஆனாலும் சர்வதேச தொழிலாளர் தினம் மே-01ம் திகதியே என்பதால் தொழிலாளர்களை கௌரவிக்க வேண்டும் என்பதால் பௌத்தர்களுக்கும், பௌத்த வணக்க தலங்களுக்கும் இடையூறு விளைவிக்காத வகையில் பௌத்தர்கள் வாழாத வட கிழக்கு மாகாணங்களில் மே-01ம் திகதி சர்வதேச தொழிலாளர் தினத்தை கொண்டாட தமிழ்தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த தீர்மானத்திற்கமைவாக வடமாகாணத்தில் பருத்துறையிலும், கிழக்கு மாகாணத்தில் வெல்லா வெளியிலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தொழிலாளர் தினம் நடைபெறும்.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் இந்த தீர்மானம் பௌத்த மதத்தவர்களையோ, மகாநாயக்கர்களையோ, பௌத்தர்களின் புனித நாளான வெசாக்கையோ மலினப்படுத்துவதாக அமையாது.
அவர்களை நாங்கள் மதிக்கிறோம். அந்தவகையில் வடகிழக்கு மாகாணங்களில் உள்ள வர்த்தகர்கள் இந்த மே தினத்திற்காக தமது தொழிலாளர்கள் மே தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளும் வகையில் தமது வர்த்தக நிலையங்களை பூட்டி ஒத்துழைப்பு வழங்கவேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

தாயகச்செய்திகள்