திருகோணமலை விவகாரம் முஸ்லிம் இனத்திற்கு எதிரானதல்ல!

திருகோணமலை சண்முகா இந்துக்கல்லூரியில் இடம்பெற்ற தன்னெழுச்சிப் போராட்டமானது எந்த ஒரு இனத்திற்கு எதிராகவும் மேற்கொள்ளப்படவில்லை என்று அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பாடசாலையின் ஆசிரியர்கள் அணியும் ஆடை தொடர்பாக பாடசாலை அதிபருக்கும் ஆசிரியர்கள் மற்றும் அவர்களின் கணவன்மாருக்கும் இடையில் எழுந்த முரண்பாட்டை அடுத்தே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் சார்பாக பாடசாலையின் பழைய மாணவர் சங்கப் பிரதிநிதி திருமதி அருசா ஜெயராசா சுட்டிக்காட்டினார்.
திருகோணமலை சண்முகா இந்து மகளிர் கல்லூரியில் முஸ்லிம் ஆசிரியர்கள் மார்க்க நம்பிக்கையைப் பின்பற்றும் வகையில் ஹபாயா அணிந்து பாடசாலைக்கு சமூகமளித்தமை தொடர்பில் அதிபருக்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டன. ஹபாயா அணிந்து பாடசாலைக்கு சமூகமளிக்கவேண்டாமென அதிபர் வழங்கிய அறிவுறுத்தலையடுத்தே இந்தப் பிரச்சினை ஏற்பட்டிருந்தது.
இதனையடுத்து ஆசிரியர்களும் அவர்களது உறவினர்களும் கல்லூரி அதிபருடன் முரண்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி பழைய மாணவர்கள் பெற்றோர் மற்றும் நலன் விரும்பிகள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்தனர்.
இந்த நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து ஆசிரியைகளுக்கும், அவர்கள் விரும்பும் பாடசாலைகளுக்கு தற்காலிக இடமாற்றம் வழங்க, கல்வித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளமையைத் தொடர்ந்து இந்த விவகாரம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது.
மாவட்ட வலயக் கல்வி அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போது மேற்படி நடவடிக்கை எடுக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடக சந்திப்பில், பழைய மாணவர் சங்க பிரதிநிதி அருசா ஜெயராசா தெரிவித்தார்.

தாயகச்செய்திகள்