சிவன் ஆலயம் இடிக்கப்பட்டு பௌத்த விகாரை அமைக்கப்படுகிறது!!

ஒட்டிசுட்டான் கற்சிலைமடுப்பகுதியில் பழமைவாய்ந்த சிவன் ஆலயத்தினை இடித்து தரைமட்டமாக்கியதுடன் அவ் ஆலயத்தின் சான்றுப் பொருட்களை அழித்து, அப்பகுதியில் பௌத்த விகாரை ஒன்றினை இராணுவத்தின் 64 வது படைப்பிரிவினர் மிகவும் மும்முரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

இவ்வாறு காணியின் உரிமையாளர் கந்தையா சிவராசா சமாதான நீதவான் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கும்போது,

கற்சிலைமடுப்பகுதியில் பரம்பரையாக வசித்து வருகின்றேன். 1921ஆம் ஆண்டில் எழுதப்பட்ட உறுதிக் காணி யுத்தம் முடிவிற்குக் கொண்டுவரப்பட்டு கடந்த 2009ஆம் ஆண்டிற்கு பிற்பட்ட காலத்தில் இராணுவம் எனது காணியை கைப்பற்றி இராணுவ முகாமினை அமைத்துள்ளது.

எனது காணிக்குள் மிகவும் பழமைவாய்ந்த சிவன் ஆலயம் ஒன்று அமைந்திருந்தது.

படைத்தரப்பினால் கைப்பற்றப்பட்ட எனது காணியிலிருந்த சிவன் ஆலயத்தை பைக்கோவினால் உடைத்து தடைமட்டமாக்கியதுடன், அப்பகுதியில் காணப்பட்ட வெள்ளரசு மரத்தடியில் பௌத்த விகாரையை அமைத்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு இராணுவத்தினரால் கைப்பற்றப்பட்டு அப்பகுதியைச்சுற்றி 2010ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் செய்யப்பட்டுள்ளது.

எனினும் கடந்த 2013ஆம் ஆண்டு புராதன திணைக்களத்தில் (தொல்பொருள் ஆராய்ச்சி திணைக்களத்தில்) பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அதேவருடம் 6ஆம் மாதம் வர்த்தகமானியில் புராதன திணைக்களத்திற்குச் சொந்தமானதாக பகுதியாக குறித்த எனது காணியினை அறிவிக்கப்பட்டுவிட்டது.

இதேவேளை தற்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு செல்லும் வீதியிலுள்ள 64 வது படைப்பிரிவு நிறைய மாற்றங்களை மேற்கொண்டுள்ளது.

பழமைவாய்ந்த புராதனக்கல்லுகளை எடுத்து வந்துள்ளதுடன் புத்தர் சிலையை முன்பக்கத்தில் நிறுத்தி அப்பகுதியில் தொடர்ந்து திட்டமிடப்பட்டு வேலைத் திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.

இது தொடர்பாக புராதனத்திணைக்களத்திடம் கூறியதாவது;

குறித்த பகுதி புராதன திணைக்களத்திற்குரிய பகுதி எனவும் வேறு யாரும் அப்பகுதியிற்குள் அனுமதிக்க முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

இந் நிலையில் இவ்வளவு காலமாக ஏன் இவற்றைக்கண்டு பிடிக்கவில்லை புராதன திணைக்களம் என காணி உரிமையாளர் கேள்வி எழுப்பியுள்ளார்.

எனவே இது திட்டமிடப்பட்டு அப்பகுதியிலிருந்த சிவன் ஆயலத்தினை இடித்து தரை மட்டமாக்கியதுடன் அவ்விடத்திலிருந்த தடயங்களையும் அகற்றி அப்பகுதியில் பௌத்தவிகாரை ஒன்றினை அமைப்பதற்கு இராணுவத்தினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வவுனியா மனித உரிமைகள் ஆணைக் குழுவின் அலுவலகத்தில் முறையிடப்பட்டுள்ளது.
தாயகச்செய்திகள்