தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!!

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஓரு பதிலை மிகச் சாதாரணமாக வாராந்தக் கேள்வி பதில் ஒன்றிற்கூடாக ஏன் விக்னேஸ்வரன் சொன்னார்? அவரிடமிருந்து அந்த பதிலை வரவழைப்பதற்காக பலரும் பல மாதங்களாக முயன்று வந்தார்கள்.

ஒரு மாற்று அணியை உருவாக்க வேண்டுமென்று இதய சுத்தியோடு உழைத்த பலரும் அவரிடம் அந்தக் கேள்வியைக் கேட்டிருக்கிறார்கள்.

2009ற்குப் பின்னரான தமிழ் அரசியலை பொருத்தமான ஒரு தடத்தில் ஏற்ற வேண்டுமென்று முயற்சித்த பலரும் அவரிடமிருந்து அந்த பதிலை எதிர்பார்த்தார்கள்.

இப்படிப்பட்ட தரப்புக்களுக்கெல்லாம் ரஜனிகாந்தைப் போல பதில் கூறிய விக்னேஸ்வரன் அவருடைய மாணவரும் இப்பொழுது அவருடைய அரசியல் போக்கிற்கு எதிராகக் காணப்படுபவருமாகிய சுமந்திரனுக்குக் கூறும் ஒரு பதிலாக அதைச் சுருக்கியது ஏன்?

ஒரு திருப்பகரமான தருணத்தில் நிர்ணயகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பதிலை ஏன் இப்படி மிகச் சாதாரனமாகக் கூறிவிட்டு அவர் இந்தியாவிற்குப் போனார்? ஒரு மாற்று அணிக்கான தேவையை அதற்கேயான கனபரிமாணத்தோடும், அடர்த்தியோடும் அவர் விளங்கி வைத்திருக்கவில்லை என்பதனை இது காட்டுகிறதா?

மாற்று அணி எனப்படுவது சுமந்திரனுக்கோ சம்பந்தனுக்கோ எதிரானது மட்டுமல்ல. அது அதைவிட ஆழமானது. பல தசாப்த காலமாக தமிழ் மக்கள் சிந்திய குருதியோடு அது சம்பந்தப்பட்டிருக்கிறது.

ஈழத் தமிழர்கள் இதுவரை காலமும் கொடுத்த விலைக்கு ஈடான ஒரு தீர்வைப் பெறுவதற்கு அது மிக அவசியம். அதாவது இனப்படுகொலைக்கு எதிரான ஒரு பரிகார நீதியைப் பெறுவதற்கு அது மிக அவசியம். ஆனால் விக்னேஸ்வரன் அதை சுமந்திரனுக்கு எதிரான ஒரு பதிலாக ஏன் சுருக்கினார்?

சில நாட்களுக்கு முன் ஒரு டயஸ்பொறாத் தமிழர் என்னிடம் கேட்டார். “ஒரு மாற்று அணியை உருவாக்கி அதில் வெற்றி பெறுவதன் மூலம் விக்னேஸ்வரன் அடுத்த கட்டமாக என்ன செய்வார்”? என்று.

ஏறக்குறைய இதே கேள்வியை நானும் அவரிடம் கேட்டிருக்கிறேன். அவர் இப்பொழுது முன்னெடுத்து வரும் அரசியல் பாதைக்கூடாக தமிழ் மக்களின் இலக்குகளை எப்படி அடையப் போகிறார்? என்று நான் அவரிடம் கேட்டேன்.

அதற்கு அவர் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்க வல்ல நாடுகளுக்கு தமிழ் மக்களின் நியாயங்களை விளக்குவதன் மூலம் தமிழ் மக்களுக்கு சாதகமான ஒரு நிலமையை ஏற்படுத்தலாம் என்ற பொருள்பட பதில் சொன்னார்.

அதாவது ஒரு ராஜதந்திரப் போரைக் குறித்த மனப்படமே அவரிடம் உள்ளது என்று தெரிகிறது. ஆனால் ராஜதந்திரப் போர் எனப்படுவது அறநெறிகளின் அடிப்படையில் நிகழ்வது அல்ல.

நீதி நியாயங்களின் அடிப்படையிலும் முன்னெடுக்கப்படுவது அல்ல. அது முழுக்க முழுக்க ஒரு நலன்சார் சூதாட்டம். அவ்வாறான ஒரு சூதாட்டத்திற்குத் தேவையான நெளிவு சுழிவுடன் கூடிய தலைமைத்துவம் விக்னேஸ்வரனிடம் உண்டா?அவருக்கு எதிராக மாகாணசபைக்குள் சுமந்திரனால் உருவாக்கப்பட்டிருக்கும் அணியை அவர் எப்படி எதிர் கொண்டார்?

அதே சமயம் அவருக்கு எதிரான அரசியல் போக்கின் கூர் முனை போலக் காணப்படும் சுமந்திரன் எப்படிச் செயல்படுகிறார்? சுமந்திரன் ஒரு தனிநபர் அல்ல.

பிராந்திய மற்றும் மேற்கு நாடுகளின் அபிலாஷைகளின் தமிழ்க்கருவியே அவர். பழைய தலைமுறையைச் சேர்ந்தவரும் முதியவருமாகிய சம்பந்தரை விடவும் ஆழம் குறைந்த வேர்களைக் கொண்ட ஒரு சுமந்திரனைக் கருவியாக்கிக் கையாள்வது இலகு என்று மேற்கு நாடுகளும் ஏனைய தரப்புக்களும் நம்புகின்றன.

அந்த அடிப்படையில்தான் சுமந்திரனின் அணி எனப்படுவது உள்நாட்டு அளவிலும் அனைத்துலக அளவிலும் பலப்படுத்தப்பட்டு வருகிறது.

Wigneswaranand-Sumanthiran தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) Wigneswaranand Sumanthiran

விக்னேஸ்வரனோடு ஒப்பிடுகையில் சுமந்திரனின் அரசியல் அதிகம் செயல்பூர்வமானதாகக் காணப்படுவது இந்த அடிப்படையில்தான். கூட்டமைப்பின் பிரதானிகளில் பெரும்பாலானவர்கள் சுமந்திரனுக்குக் கீழ்ப்பட்டவர்கள்தான்.

தம்மைத் தீவிர தேசியவாதிகளாகக் காட்டிக்கொள்ளும் சிலர்கூட சுமந்திரனை வெளிப்படையாகப் பகைப்பதற்குத் தயங்குகிறார்கள். அது மட்டுமல்ல உள்ராட்சி மன்றங்களைக் கைப்பற்றும் விடயத்தில் அவர்களும் சுமந்திரனின் அதே உத்திகளைத்தான் பயன்படுத்துகிறார்கள்.

கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் சுமந்திரனை மீறிச் செயற்படுவதற்கு அநேகமாக ஒருவரும் தயாரில்லை. சம்பந்தர் கூட சுமந்திரனை வெளிப்படையாக் கண்டிக்கும் ஒரு நிலமையில்லை.

நடந்து முடிந்த உளூரட்சி மன்றத் தேர்தல்களின் போது தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட இரவில் டான் டீ.வியில் ஒரு நிகழ்ச்சியில் நான் பங்கெடுத்தேன்.

அதில் என்னோடு பங்குபற்றிய மற்றொரு அரசியல் விமர்சகர் நிகழ்ச்சி இடைவேளையின் போது கூட்டமைப்பின் பங்காளிக்கட்சித் தலைவர் ஒருவரோடு தொலைபேசியில் உரையாடினார்.

அதன் போது கூட்டமைப்பிற்கு ஏற்பட்ட வாக்குச்சரிவைக் குறித்தும் கதைக்கப்பட்டது. இதற்கு சுமந்திரனே பொறுப்பு என்று மேற்படி விமர்சகர் சொன்னபோது அவரோடு உரையாடிய அரசியல் தலைவர் இல்லை சம்பந்தர் தான் பொறுப்பு என்று பதில் சொன்னார்.

ஏனெனில் சுமந்திரனை கொண்டு வந்தது அவர்தான். சுமந்திரனுடைய நடவடிக்கைகளை பேசாமல் பார்த்துக்கொண்டிருப்பதும் அவர்தான். ஒரு தலைவராக தன்னுடைய வாரிசை சம்பந்தர் நெறிப்படுத்தத் தவறிவிட்டார். அதன் விளைவே தேர்தல் முடிவுகள் என்ற தொனிப்பட அவர் பதில் சொன்னார்.

------------------------------4 தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) 42

சுமந்திரன் மட்டுமல்ல விக்னேஸ்வரனும் சம்பந்தரின் கண்டுபிடிப்புத்தான். இருவருமே கொழும்பு மையத்திலிருந்து வந்தவர்கள்தான்.

2009ற்குப் பின்னரான தமிழ் அரசியல் எனப்படுவது கொழும்பு மையத் தலைவர்களின் ஆதிக்கத்துட் சென்றுவிட்டது. இதில் இணக்க அரசியலை முன்னெடுக்கும் சுமந்திரனும் எதிர்ப்பு அரசியலை முன்னெடுக்கும் விக்னேஸ்வரனும் எதிர் எதிராகப் போனமை என்பதும் ஒரு நூதனமான தோற்றப்பாடுதான்.

சம்பந்தர் களமிறக்கிய இரண்டு தீர்மானகரமான ஆளுமைகள் ஒன்றுக்கொன்று எதிராகத் திரும்பி நிற்கின்றன. இதைச் சம்பந்தரின் தோல்வியென்பதா? அல்லது வெற்றியென்பதா? இவ்வாறாக கொழும்பு மையத் தலைவர்களுக்கிடையிலான ஒரு முரண்பாட்டின் விளைவாகவே விக்னேஸ்வரன் மாற்று அணியைக் குறித்தும் வாய் திறந்திருக்கிறார்.

மாறாக வடகிழக்கு மையங்களிலிருந்து செயற்பாட்டாளர்களும், கருத்துருவாக்கிகளும், அரசியல் விமர்சகர்களும், ஊடகவியலாளர்களும், அவருக்கு வாக்களித்த மக்களும் அவரை நோக்கி எதிர்பார்ப்போடு கேள்வி கேட்ட போதெல்லாம் உரிய பதிலை வழங்காமல் ரஜனிகாந்தைப் போலப் பதிலளித்து வந்தார். இப்பொழுது சுமந்திரனுக்கு தரப்படும் ஒரு பதிலாக தனது முடிவை அறிவித்திருக்கிறார்.

பேரவையை ஒரு மக்கள் இயக்கமாகக் கட்டியெழுப்பப் போவதாக அவர் கூறி வருகிறார். அந்த மக்கள் இயக்கத்தின் பின்பலத்தோடு ஒரு தேர்தல் அரசியலை அவர் முன்னெடுக்கக்கூடும்.

அதற்குரிய ஓர் ஐக்கிய முன்னணியை அவர் இனிமேல்தான் உருவாக்க வேண்டியிருக்கும். அதற்குக்கூட மாகாணசபையின் காலம் முடியும் வரை காத்திருப்பாராக இருந்தால் சில சமயம் மாற்று அணியெனப்படுவது ஓரணியாகத் திரள்வதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

ஒரு மாற்று அணிக்குத் தலைமை தாங்கப் போவதாக அவர் அறிவிக்குமிடத்து கூட்டமைப்பு அவருக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கூடும். அதைத் தவிர்ப்பதற்காகவே அவர் காலத்தை மேலும் கடத்துகிறாரா?

ஆனால் அவருடைய எதிரணியோ அதாவது சுமந்திரன் அணியானது தொடக்கதிலிருந்தே செயல்பூர்வ அணியாகத்தான் காணப்படுகிறது.

அது முழுக்க முழுக்க நலன்கள் சலுகைகளின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஓர் அணியாகும். நாடாளுமன்ற உறுப்பினர்களிலிருந்து தொடங்கி உள்;ராட்சிமன்றத் தலைவர்கள் வரையிலும் அது மிகப் பலமாக ஸ்தாபிக்கப்பட்டுவிட்டது.

அந்த அணிக்கு அதிகார பலமுண்டு. கொழும்பிலும் அனைத்துலக அளவிலும் பலமான வலைப்பின்னல்களும், ஆதரவுத் தளமும் உண்டு. அனைத்துலக அளவிலும் உள்நாட்டு அளவிலும் அதற்கென்று ஒரு நிதித்தளம் உண்டு.

Sampanthan, sumanthiran and mavai தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) Sampanthan sumanthiran and mavai

மாகாணசபைக்குள் தனக்கென்று ஓர் ஆதரவுத்தளத்தை கட்டியெழுப்பியது போலவே சுமந்திரன் கிராம மட்டத்திலும் உள்ளூராட்சி மன்றங்களில் ஓர் ஆதரவுத்தளத்தைக் கட்டியெழுப்பி வருகிறார்.

உள்ளூராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்கான அவருடைய அணுகு முறையானது அம்மன்றங்களில் அவரது ஆதரவுத்தளத்தை பலப்படுத்தியிருக்கிறது.

இப்படிப் பார்த்தால் தமிழ் அரசியல்வாதிகளில் மேலிருந்து கீழாக பலமான ஒரு வலைப்பின்னலை திட்டமிட்டுக் கட்டியெழுப்பிய ஒருவராக சுமந்திரன் காணப்படுகிறார்.

அது மட்டுமல்ல ஊடகப்பரப்பிலும் சுமந்திரன் பிரவேசித்திருக்கிறார். ஊடகப்பரப்பிலும் சுமந்திரனுக்கு பலமான பிடியுண்டு.

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஒரு வாரப் பத்திரிகையின் பின்னணியில் அவர் இருப்பதாக ஊடக வட்டாரங்களில் ஒரு சந்தேகம் உண்டு.

கொழும்பிலிருந்து எழுதும் சில பத்தி எழுத்தாளர்கள் அவரை மறைமுகமாக நியாயப்படுத்துகிறார்கள். தமிழ் மக்களின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டவர்கள் போல காணப்படும் இவர்கள் அதே சமயம் விக்னேஸ்வரனை குறி வைத்துத் தாக்குகிறார்கள்.

இது ஏறக்குறைய கம்பன் கழகத்தின் உத்திதான். யாரை யார் சான்றோர் என்று அழைக்கிறார்கள் என்பதிலிருந்து யாரெல்லாம் சான்றோர் என்பதனை தமிழ் மக்கள் கண்டுபிடிக்கலாம்.

இது தவிர அண்மையில் யாழ்ப்பாணத்தில் தொடக்கப்பட்ட புதிய சுதந்திரன் பத்திரிகையின் பின்னணியிலும் சுமந்திரனே இருப்பதாக ஊகிக்கப்படுகிறது.

காலைக்கதிர் பத்திரிகையில் அரசியல் பத்தி ஒன்று அப்படித்தான் எழுதியிருக்கிறது. ஏற்கெனவே கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் இரண்டு பலமான ஊடகங்கள் உண்டு.

உதயன் பத்திரிகை சரவணபவானுடையது. தமிழ்வின் இணையத்தளம் சிறீதரனின் சகோதரனால் நடத்தப்படுகிறது.

இவ்விரு ஊடகங்களும்தான் இதுவரை காலமும் கூட்டமைப்பின் ஊடகப்பலங்காளாகக் காணப்பட்டன. ஆனால் இவ்விரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமது தனிப்பட்ட எதிரிகளைத் தாக்குவதற்கும் தமது ஊடகங்களைப் பயன்படுத்துவதனால் அவர்களுடைய தனிப்பட்ட எதிரிகளும் ஒரு கட்டத்தில் கட்சியின் எதிரிகளாக மாறிவிடுகிறார்கள்.

தவிர அண்மைய தேர்தல் முடிவுகளின் பின் உதயன் பத்திரிகை அதன் செய்திகளிலும் ஆசிரியர் தலையங்கங்களிலும் கூட்டமைப்பைக் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கியிருக்கிறது.

எனவே கட்சிக்கென்றோர் ஊடகம் இருக்க வேண்டும். அது கட்சியின் கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று சிந்தித்து புதிய சுதந்திரன் தொடங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. கனடாவிலுள்ள தமிழரசுக்கட்சி ஆதரவாளர்கள் இதில் முதலிட்டுள்ளார்கள்.

இப்படியாக சுமந்திரன் எல்லாத் தளங்களிலும் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். சுமந்திரனின் வலைக்கட்டமைப்பானது நலன்கள், சலுகைகளின் அடிப்படையிலானது.

அதை இலகுவாகக் கட்டியெழுப்பலாம் ஆனால் விக்னேஸ்வரன் கட்டியெழுப்ப வேண்டியது ஒரு தேசியக் கட்டமைப்பு. கடந்த சுமார் மூன்றாண்டுகளுக்கு மேலாக அவர் கண்டுபிடித்திருக்கக் கூடிய நபர்களை வைத்தே அவர் அதைச் செய்ய வேண்டும். இக்குறுகிய காலப்பகுதிக்குள் ஆட்களை அடையாளங்காணும் அளவிற்கு அவரிடம் தலைமைத்துவப் பண்பு உண்டா?

wigneswaran-1 தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது விக்னேஸ்வரன் என்ற குத்துச்சண்டை வீரன்தான்!! - நிலாந்தன் (கட்டுரை) wigneswaran 1

அவரை நேசிக்கும் மக்களின் ஆதரவுத்தளம்தான் அவருடைய பிரதான பலம். அவருக்காக எழுதும் சில விமர்சனங்களும் கருத்துருவாக்கிகளும் உண்டு.

பேரவைக்குள் இவர்களில் ஒரு பகுதியினர் ஓரளவிற்கு நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளார்கள். ஆனாலும் சுமந்திரன் அணியோடு ஒப்பிடுகையில் விக்னேஸ்வரனுக்கிருக்கும் நிறுவனப்பலம் எனப்படுவது போதாது.

அவர் தன்னுடைய முடிவை இப்பொழுது மங்கலாகவேனும் அறிவித்திருக்கிறார். இதை வைத்துக் கொண்டு அவரது எதிரணி ஏற்கெனவே சுறுசுறுப்பாக இயங்கத் தொடங்கி விட்டது.

சுமந்திரன் தனது விருப்பங்களை செயலுருப்படுத்தும் ஒரு தலைவராக மாறி வருகிறார். ஆர்னோல்டை யாழ் மாநகர முதல்வராக்குவது என்று அவர் முடிவெடுத்தார்.

அந்த முடிவை எதுவிதத்திலோ செயலாக்கினார். இப்பொழுது விக்னேஸ்வரனை அகற்றுவது என்று முடிவெடுத்து விட்டார். அவர் அதைச் செய்வார். கூட்டமைப்பின் உயர் மட்டத்தில் அவரை எதிர்த்துக் கேட்க பெரும்பாலானவர்கள் தயாரில்லை.

மாவை என்ன செய்ய வேண்டுமென்பதையே சுமந்திரன் முடிவெடுக்கும் ஒரு நிலமைதான் காணப்படுகிறது. கூட்டமைப்பு எனப்படுவது சலுகைகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட ஒரு கட்சியாக மாறி விட்டது.

விக்னேஸ்வரனுக்கு இனி அதற்குள் இடமிருக்காது. ஒரு மாற்று அணியை விரைவாகக் கட்டியெழுப்புவதைத் தவிர அவருக்கு வேறு தெரிவுகள் இல்லை.

ஒரு ரஜனிகாந்தைப் போல அவர் இனியும் தளம்பக்கூடாது. அவருக்குள் ஒரு நீதிபதி உண்டு. ஓர் ஆன்மீகவாதி உண்டு. ஒரு குத்துச்சண்டை வீரர் உண்டு. தமிழ் மக்களுக்கு இப்பொழுது தேவைப்படுவது அந்த குத்துச்சண்டை வீரன்தான்.

– நிலாந்தன்
தாயகச்செய்திகள்