தடைகளை மீறி அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதானம்!

மட்டக்களப்பு மாநகரசபை உறுப்பினர்களினால் கல்லடி நாவலடியில் உள்ள தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவிடத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிரமதான நிகழ்வு ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

நேற்றைய தினம் (திங்கட்கிழமை) மட்டக்களப்பு மாநகரசபையின் முதலாவது அமர்வின்போது விடுக்கப்பட்ட வேண்டுகோளின் அடிப்படையில் இந்த சிரமதான நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபையின் முதல்வர் தி.சரவணபவன்,பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் உட்பட மட்டக்களப்பு மாநகரசபையின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

இந்த சிரமதான நிகழ்வில் கட்சி வேறுபாடுகளின்றி அனைத்து மாநகரசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் உட்பட மாநகரசபை ஊழியர்கள்,பொதுமக்களும் கலந்துகொண்டனர்.

தடைகளை மீறி அன்னை பூபதியின் நினைவிடத்தில் சிரமதானம்!

அன்னை பூபதியின் நினைவு தினத்தை எங்களின் அனுமதியில்லாமல் யாரும் எவ்விதமான நிகழ்வுகளையும் நடத்தக்கூடாது என அன்னை பூபதியின் குடும்பத்தினர் மட்டக்களப்பு பொலிஸ் தலைமையகத்தில் முறையிட்டுள்ள நிலையில் இந்த சிரமதான நிகழ்வு நடாத்தப்பட்டுள்ளது.

இதனை வெறும் அரசியல் நோக்கம் கருதாது தமிழர்களின் தாயக விடுதலைக்காக ஒப்பற்ற தியாகம் செய்த அன்னை பூபதியின் நிகழ்வுகளின் முன்னாயத்த வேலைகளுக்காக இந்த சிரமதானம் முன்னெடுக்கப்பட்டதாக பிரதி முதல்வர் எஸ்.சத்தியசீலன் தெரிவித்தார்.

தமிழ் மக்களின் உரிமைக்காக 1988.04.19 ஆண்டு உண்ணாவிரதம் இருந்து தியாக தீபம் அன்னை பூபதி உயிர்நீத்தமை குறிப்பிடத்தக்கது.

தாயகச்செய்திகள்