திருகோணலையில் பிரித்தானியா- பிரான்ஸ் கடற்சமர்! திருமலையைக் கைப்பற்றிய பிரெஞ்சுஅட்மிரல்!!

1782 ஆம் ஆண்டு திருகோணமலையில் பிரித்தானிய மற்றும் பிரெஞ்சுக்கடற்படையினருக்கு இடையில் இடம்பெற்ற ஒரு பெரிய கடற்சமர்குறித்த தகவல் இது.
இந்த சுவாரசியமான தகவலை ஏன் இப்போது தேடவேண்டி வந்தது என்பதை இறுதியில் பதிவிட்டுள்ளேன்.
ஆங்கிலத்தில் Battle of Trincomalee எனவும் பிரெஞ்சில் அதே அர்த்தத்தடன் லெ பத்தாய் து றிங்கோமலே (La bataille de Trinquemalay) என அழைக்கப்படும் திருகோணலை கடற்சமர் 1782 ஆம் ஆண்டு ஓகஸ்ற் 25 ஆந்திகதி முதல் செப்டெம்பர் 3 ஆந்திகதி வரை இடம்பெற்றிருந்தது.
பிரித்தானியத்தரப்பில் அட்மிரல் எட்வேட் குயுக்ஸ் Edward Hughes ( பின்னர் சேர் பட்டம் பெற்றவர்) தலைமையில் 12 பீரங்கிக்கடற்கலங்களும்> பிரெஞ்சுத்தரப்பில் அட்மிரல் பியேர் அந்ரே து சுப்ரன் (Pierre André de Suffren)தலைமையில் 14 பீரங்கிக்கடற்கலங்களும் இந்தச்சமரில் பங்கெடுத்தன.
அப்போது அமெரிக்கப் புரட்சி இடம்பெற்றகாலம். அமெரிக்கப்புரட்சிக்கு பிரான்ஸ் உதவியதால் பிரான்ஸ் மீது சீற்றம்கொண்ட பிரித்தானியா அதனுடன் போர்செய்தது.
இந்தப் போர்க்களங்களின் அங்கமாகவே திருகோணமலை சமரும் இடம்பெற்றது.
இந்தசமர் இடம்பெறுவதற்கு 7 மாதங்களுக்கு முன்னர்;தான் 1782 ஜனவரியில் ஒல்லாந்தரிடமிருந்து திருமலை துறைமுகத்தை பிரித்தானியர் கைப்பற்றியிருந்தனர். (தமிழர் இறைமை வீ ழ்ச்சியின் இன்னொருபுள்ளி)
எனினும் மட்டக்களப்புத்துறைமுகப் பகுதியை தொடர்ந்தும் ஒல்லாந்தரே வைத்திருந்தனர்.
இந்துசமுத்திரப்பகுதியில ஒல்லாந்தருக்கு பிரெஞ்சு கடற்படைக்கலங்கள் உதவின.இதனால் பிரித்தானியா அதனுடன் மோதியது
ஒருகட்டத்தில் பிரித்தானியர்களுக்கு புதியகடலணிகள் வருவதை அறிந்த பிரெஞ்சு அட்மிரல் சுப்பரன் திருமலைத் துறைமுகத்தை பிரித்தானியரிடமிருந்து கைப்பற்ற முடிவெடுத்தார்.
அவருக்கும் அப்போது இலங்கைப்பக்கம் வந்த பிரெஞ்சுக்கலங்களால் புதிய ஆளணிகளும் வெடிமருந்து உதவிகள் கி;ட்டியிருந்த துணிவு.
இதன்விளைவான 14 பீரங்கிகடற்கலங்களுடன் ஆயிரக்கணக்கான கடற்படையினருடனும் ஓகஸ்ற் 22 ஆந்திகதி மட்டக்களப்பில் இருந்து திருமலை துறைமுகத்தை நோக்கி பிரெஞ்சுக் கடலணி பயணித்தது.
திருமைலத் துறைமுகத்துக்கு வெளியே நங்கூரமிட்ட பிரெஞ்சுகலங்கள் ஓகஸ்ற் 25 ஆந்திகதி தமது தாக்குதல் நடவடிக்கையை தொடுத்தன.
முதலில் சுமார் 2400 பிரெஞ்சுத்துருப்பினர் திருமலைக்கோட்டைக்கு வெளியே கிழக்குப்பக்கமாக தரையிறங்கி நிலையெடுத்து நின்றனர்.
தமக்குரிய பீரங்கிநிலைகளை தயார்செய்த அவர்கள் பீரங்கிகளால் திருமலைக்கோட்டை யை மூன்று நாட்களாக கடுமையாகத்தாக்கினர்.
இறுதியில் கோட்டைச்சுவர் தகர்ந்து திருமலைக்கோட்டை பிரெஞ்சுப்படையிடம் வீழ்ந்தது.
கோட்;டைக்குள் கப்டன் மக்டோவல் Captain MacDowel தலைமையில் இருந்த பிரித்தானிய படையினர் பிரெஞ்சுப்படையிடம் சரணடைந்தனர்.
இதனையடுத்து பிரெஞ்சுத் துருப்பினர் செப்டெம்பர் முதலாம் திகதி திருமலைக்குள் முற்றாக நுழைந்தனர்
இந்தநிலையில் இந்த நிலையில் இந்த நகர்வுகளை அறியாத பிரித்தானிய அட்மிரல் எட்வாட் குயுக்ஸ் தனது கடலணியுடன் சென்னையில் இருந்து திருகோணமலைக்குத் திரும்பிக்கொண்டிருந்தார் .
அவரது மாலுமிகள் திருமலைக்கடற்பரப்பை நோட்டமிட்டபோது துறைமுகத்துக்கு வெளியே பிரெஞ்சுக்கடற்கலங்கள் நிற்பதை கண்டனர்.
இந்த ச்செய்தி முதன்மைக்கலத்தில் இருந்த அட்மிரல் எட்வாட் குயுக்சுக்கு மாலுமிகளால் அனுப்பப்பட்டது ஆனால் திருமலைக்கோட்டையை கைப்பற்றிவிட்டுத்தான் பிரெஞ்சுக்கலங்கள் துறைமுகத்துக்குவெளியே தரித்து நிற்கின்றன என்பதை பிரித்தானிய அட்மிரல் அறியவில்லை.
மாறாக திருமலைக்கோட்டையை இனிமேல் தாக்குவதற்காகத்தான் பிரெஞ்சுக்கலங்கள் வெளியே நிற்பதாக அட்மிரல் எட்வாட் குயுக்ஸ் நினைத்துவிட்டார்.
இதனால் பிரெஞ்சுக்காரர்களிடமிருந்து திருமலைக்கோட்டையை காப்பாற்றவேண்டும் என்றவகையில் தனது கடலணியை தாக்குதலுக்கு தயார்ப்படுத்தினார்.
அப்போது அவரது அணியில் 12 பீரங்கிகடற்கலங்கள் இருந்தன. அந்த அணிக்கு 74 பீரங்கிகளைத்தாங்கிய எச்.எம்.எஸ் சுப்பேர்ப் (HMS Superb) தலைமை தாங்கியது.
இந்தநிலையில் திருமலைகோட்டைக்குள் பாதுகாப்பாக இருந்த பிரெஞ்சு அட்மிரல் சுப்பரன் பிரித்தானிய கடலணியை கடலிலேயே இடைமறிக்க முடிவுசெய்தார்.
துறைமுகத்தைவிட்டு பிரெஞ்சு கடற்கலங்களும் தாக்குதலை நடத்த வெளியே சென்றன. பிரெஞ்சுதரப்பில் அவர்களின் முதன்மை தாக்கு;தல் கலமான 74 பீரங்கிகளையுடைய ஹிரோ (Héros ) இந்தஅணிக்கு தலைமை தாங்கியது. அதில்தான் அட்மிரல் சுப்பரனும் இருந்தார்.
ஆயினும் அன்றைகாலத்தில் கப்பல்களுக்கு இடையிலான தொடர்பாடல் வசதிகள் துல்லியமாக இல்லை. இதனால் அட்மிரல் சுப்பரனின் ஆரம்ப சமிஞ்சையை தவறாகப் புரி ந்;து கொண்ட பிரெஞ்சுக்கலங்கள் பிரித்தானியக் கடற்கலங்களை நெருங்கமுன்னரே தாக்குதலை தொடுக்கஆரம்பித்தன.
பிரித்தானியக் கலங்களும் பதில் பீரங்கித்தாக்குதலை தொடுக்க திருமலைக் கடற்பரப்பில் பெரும் கடற்சமர் நடந்தது.
பிரெஞ்சுக் கலங்களில் இருந்து சுமார் 1 800 பீரங்கி குண்டு வீச்சுகள் 3 மணிநேரத்துக்கு இடையில் நடத்தப்பட்டன..
இந்த கடற்சமரில் பிரித்தானிய கடலணிக்கு கடும் இழப்பு ஏற்பட்டது. Isis, Worcester, Monmouth ஆகிய 3 கடற்கலங்கள் கடுமையாக சேதமடைந்தன. Exeter என்ற கலத்தின் கப்டன் உட்பட 51 பிரித்தானியக் கடற்படையினர் கொல்லப்பட்டனர். 283 பேர் காயமடைந்தனர்.
பிரெஞ்சுக்கடற்படையினருக்கு கடற்காற்றின் திசை மாற்றமும் உதவியதால் இறுதியில் அந்தஅணி வெற்றிபெற்றது.
ஆயினும் பிரெஞ்சுதரப்பின் முதன்மைக்கலம் ஹிரோ கடுமையாக அடிவாங்கியது. அதன் பிரதான பாய்மரமும் அணியங்களும் இழக்கப்பட்டன. மொத்தமாக இந்தசமரில் 82 பிரெஞ்சு படையினர் கொல்லப்பட்டனர். 255 பேர் காயமடைந்தனர்.
இழப்புக்களை சந்தித்த பிரித்தானியக்கலங்கள் மீண்டும் சென்னைக்கு சென்றன. பிரெஞ்சு அணி மீண்டும் திருமலை துறைமுகம் திரும்பியது.
இந்தச்சமருக்குப் பின்னர் திருமலைக்கடற்பரப்பில் இடம்பெற்ற கடற்சமர் தமிழர்தாயகத்தின் போராட்ட காலத்தில்தான் நடந்தது. ( விதிவிலக்காக இரண்டாம் உலகப்போரில் ஜப்பானியப் போர்விமானங்கள் திருமலை துறைமுகம் மீது நடத்திய குண்டுத்தாக்குதலை கொள்ளலாம். ஆனால் இது கடற்சமரல்ல)
திருமலைக்கடற்சமர் நினைவாக பிரித்தானிய கடற்படையினர் இதுவரை தமது 3 கடற்கலங்களுக்கு
( பிரான்சிடமிருந்து கைப்பற்றப்பட்ட கலங்களையும்; சேர்த்து) கடந்தகாலங்களில் H.M.S. Trincomalee என பெயரிட்டுள்ளனர்.
இறுதியாக பெயரிடப்பட்ட H.M.S. Trincomalee தற்போது இங்கிலாந்தின் Hartlepool நகரில் அருங்காட்சியமாக நிற்கிறது. பிரித்தானிய கடற்படைவரலாற்றில் இன்னமும் கடற்பயணத்தை செய்யக்கூடிய பழமையான கலம் H.M.S. Trincomalee மட்டுமே.
அதன் அணியத்தில் மீசை தலைபாகையுடன் கம்பீரமாக உள்ள தமிழனைப்போலவே அதுவும் கம்பீரமாகவே நூற்றாண்டுகள் கடந்தும் நிற்கிறது.
பிற்குறிப்பு- திருமலை என்றால் சும்மாவா? திருமலைகுறித்த இந்த வரலாற்றை எழுதியதற்காக என்றாலும் திருமலை மைந்தனான ஜெயா என்றழைக்கப்படும் பாசக்காரப்பயபுள்ளை ஜெயச்சந்திரன் என்னை அந்த கப்பலைப்பார்க்க தனது காசில் அழைத்துச் செல்லவேண்டும்.)
அது சரி இப்போது ஏன் இந்த பழைய வரலாறு?
பணியகத்தில் மதியஉணவு நேரத்தில் அந்தவகையில் தமிழர்தாயகத்தின் நீர்தொடுமுனை நிலப்பரப்பில் மன்னாரா? திருமலையா முக்கியத்துவம் வாய்ந்தது என ஒரு பாசக்கார விவாதம். நடந்தது அதனால் வந்தபதிவு இது!
உங்களுக்கு இந்த பழைய வரலாறு பிரயோசமானதா? பின்னூட்டங்களைத் (Comments)தாருங்கள்.

உலகச்செய்திகள்