மருத்துவத் துறையின் கணிப்புகளை உடைத்தெறிந்த ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!!

உலக புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் அறிஞருமான ஸ்டீபன் ஹாக்கிங், காலமானார். அவருக்கு வயது 76.

இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பகுதியில் கடந்த 1942ஆம் ஆண்டு பிறந்த ஸ்டீபன் ஹாக்கிங், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றினார்.

கடந்த 1963ஆம் ஆண்டு மோட்டோ நியூரோன் என்ற குணப்படுத்த முடியாத நரம்பியல் நோயால் பாதிக்கப்பட்ட அவர், உடல் அங்கங்களின் செயல்பாடுகளையும், பேச்சுத்திறனையும் இழந்தார்.

இதனால், நாற்காலியின் துணையுடனே நடமாடிய அவர், கணினி மூலமாகவே மற்றவர்களுடன் உரையாற்றி வந்தார்.

ஆனாலும், இயற்பியல் ஆராய்ச்சிலும், எழுத்துத்துறையிலும் மிகுந்த ஈடுபாடு கொண்ட ஸ்டீபன் ஹாக்கிங், அண்டவியல் மற்றும் குவாண்டம் ஈர்ப்பு ஆகியவை குறித்த ஆராய்ச்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டார்.

குவாண்டம் ஈர்ப்பு மற்றும் பிளாக் ஹோல் எனப்படும் கருந்துளை கோட்பாடுகளை அனைவருக்கும் புரியும் வகையில் விளக்கி உலகக் புகழ்பெற்ற இவர் பேசுவதை கண் அசைவுகள் மூலம் தெரிந்து கொள்வதற்காக புதிய மென்பொருள் தயாரிக்கப்பட்டது.

அதுவே அவரது குரலாக மாறிய பிறகு, பல ஆராய்ச்சி முடிவுகளை அடுத்தடுத்து தந்து, உலகம் முழுவதும் உள்ள விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

பூமி உருவான விதம், வேற்றுக்கிரக வாசிகள், ஒளியின் வேகம் ஆகியவற்றை விளக்கி, நூறு ஆண்டுகளுக்கு மேல் இந்த பூமி இருக்காது என்றும் அதிரவைத்தவர் ஸ்டீபன் ஹாக்கிங்.

பூமியில் இருக்கும் மனிதர்கள் வேறு கிரகங்களுக்கு செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது என எச்சரிக்கை விடுத்த ஸ்டீபன் ஹாக்கிங், ஒளியின் வேகத்தை மிஞ்சி நாம் பயணிக்கும்போது டைம் டிராவல் சாத்தியம் என்றும் கூறினார்.

இந்த நூற்றாண்டில் தலைசிறந்த விஞ்ஞானியாக போற்றப்பட்டவர். மோட்டோ நியூரோன் நரம்பியல் நோயால் அவர் பாதிக்கப்பட்டபோது, சில காலங்களே உயிருடன் இருப்பார் என மருத்துவர்கள் கூறினர்.

இந் நிலையில், அந்த கணிப்புகளை உடைத்தெறிந்து 50 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், இன்று தனது 76வது வயதில் கேம்பிரிட்ஜில் உள்ள தனது இல்லத்தில் காலமானார்.
துயர் பகிர்தல்