கால அவகாசம் வழங்க ஜெனீவா மறுக்கும், இலங்கை குறித்து அமெரிக்கா இந்தியா விசனம்

ஜெனீவா மனித உரிமைச் சபையின் ஆணையளார் அல் ஹுசைனின் அறிக்கை கடுமையாக இருக்கும் என இராஜதந்திர தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

கடந்த அமர்வின்போது, இலங்கைக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது என்றும் ஆனாலும் எந்தவித முன்னேற்றமும் ஏற்படவில்லை எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை விசனமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அதேவேளை மைத்திரி, ரணில் நல்லாட்சி அரசாங்கம் 2015ஆம் ஆண்டு பதவிக்கு வந்த காலம் முதல், வடக்கு கிழக்கு பிரதேசங்களின் நிலைமையில் மாற்றங்கள் ஏற்படவில்லை என்றும், குறிப்பாக இராணுவ முகாம்களின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை எனவும் முறைப்பபாடுகள் கிடைத்துள்ளதாக மனித உரிமைச் சபையின் தகவல்கள் கூறுகின்றன.
குறிப்பாக, காணாமல்போனோர் விவகாரம், தமிழ் அரசியல் கைதிகளை விடுவித்தல். மீள் குடியேற்றம், படையினரால் அபகரிக்கப்பட்ட காணிகளை மீளவும் கையளித்தல் உள்ளிட்ட யுத்தத்தினால் ஏற்பட்ட பக்கவிளைவுகளுக்கு, நல்லாட்சி அரசாங்கம் சரியான முறையில் தீர்வுகளை முன்வைக்கவில்லை என்று முறைப்பாடுகள் ஜெனீவாவில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த நிலையில், பொறுப்புக்கூறும் விடயத்தில், இலங்கை அரசாங்கம் உரிய முறையில் செயற்படவில்லை என்பது தொடர்பாக ஜெனீவா மனித உரிமைச் சபை கடும் கண்டனங்களை வெளியிடும் எனவும், கால அவகாசம் வழங்கக்கூடிய சாதகமான நிலைமை இல்லையெனவும் கூறப்படுகின்றது.
அதேவேளை, தமிழகத்தில் இருந்து நீதிபதி ஒருவரின் தலைமையில் சென்றுள்ள 12 பேர் அடங்கிய குழு தமிழர்களின் நிலைமை தொடர்பாக மனித உரிமைச் சபையின் ஆணையாளரை சந்தித்து விளக்கமளிக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
இதேவேளை இந்திய மத்திய அரசாங்கத்தின் பிரதிநிதி, ஜெனீவாவில் இலங்கை தொடர்பாக கடும் கண்டனங்களை வெளியிடலாம் எனவும், இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு குறித்து இந்தியா வலியுறுத்தும் எனவும் ஜெனீவா தகவல்கள் கூறுவதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.
அதேவேளை, அமரிக்காவும் இலங்கை தொடர்பாக விசனம் வெளியிடலாம் எனவும் இதன் காரணத்தினால் கால அவகசம் வழங்குமாறு இலங்கை அரசாங்கம் மீண்டும் கோரிக்கை முன்வைக்க முடியாத நிலை ஏற்படலாம் எனவும் ஜெனீவா தகவல்கள் கூறுகின்றன.
போர்க்குற்ற விசாரணை, உள்ளிட்ட பல்வேறு விடங்களில் இலங்கை அரசாங்கம் இதுவரை பொறுப்புக் கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

உலகச்செய்திகள்