புலிகளுக்கும் அரசுக்குமான சமாதான தூதராக இருந்தவர் மைத்திரியைச் சந்தித்தார்!

இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐ.நாவின் சுற்றாடல் நிகழ்ச்சித்திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் எரிக் சொல்கெய்ம்மை சந்தித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பு மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வை தொடர்ந்து  இன்று இடம்பெற்ற சந்திப்பில் சுற்றாடல் பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் கடல் மாசடைதல் குறித்து கலந்துரையாடப்பட்டதுடன், இலங்கை சுற்றாடல் பாதுகாப்புக்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விசேட திட்டங்கள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

மேலும் இலங்கையில் 28 வீதம் குறைவடைந்துள்ள வன அடர்த்தியை 32 வீதமாக அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நிகழ்ச்சித்திட்டங்கள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, காடுகளின் பாதுகாப்பிற்காக விமானப்படை விசேட கண்காணிப்பு நிகழ்ச்சித்திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருவதாகவும், இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை அது தொடர்பான அறிக்கை தனக்கு சமர்ப்பிக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.

கடல் மாசடைதல் பாரிய பிரச்சினையாக மாறியிருக்கும் சூழ்நிலையில் இலங்கையில் பிளாஸ்டிக் பாவனையை குறைப்பதற்காக முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்தும் ஜனாதிபதி விளக்கினார்.

நிர்மாண நடவடிக்கைகளுக்காக அதிகளவில் மணல் மற்றும் மண் அகழ்வதன் காரணமாக ஏற்படும் சுற்றாடல் பிரச்சினைகள் குறித்து சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இதற்காக தொழிநுட்ப மாற்றீடுகள் மற்றும் முன்மொழிவுகளை இலங்கைக்கு அறிமுகப்படுத்துமாறு எரிக் சொல்ஹெய்மிடம் கேட்டுக்கொண்டார்.

அத்துடன் நோர்வே அரசாங்கத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான நெருங்கிய உறவுகள் குறித்தும் ஜனாதிபதி நினைவுகூர்ந்தார். சுற்றாடல் பாதுகாப்புக்காக இலங்கை தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து எரிக் சொல்ஹெய்ம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இதேவேளை, நோர்வேயின் முன்னாள் அமைச்சராக இருந்த எரிக் சொல்கெய்ம் இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் விடுதலைப் புலிகளுக்கும் அரசாங்கத்துக்குமிடையிலான சமாதான தூதுவராக செயற்பட்டிருந்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein