சம்பந்தனுக்கு எதிராக சிவசக்தி முறையீடு!-

எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான உரிமையை மறுத்து வருவதாக கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முறையிட்டுள்ளார்.

சபாநாயகரிடமும் இதுகுறித்து இரண்டு தடவைகள் முறையிட்டிருந்த போதிலும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.

இந்த செயற்பாடானது வன்னி மாவட்ட மக்களின் குரல்வளையை நசுக்குகின்ற விடயமாக காணப்படுகிறது என்றும் கூறினார்.

நாடாளுமன்றம் இன்று முற்பகல் 10.30 அளவில் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது.

வாய்மூல விடைக்கான கேள்விநேரம் முடிவடைந்ததன் பின்னர் சபையில் சிறப்புரிமை பிரச்சினை ஒன்றை கொண்டுவந்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், சபையில் தான் உரையாற்றுவதற்கான சந்தர்ப்பத்தை கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தொடர்ச்சியான நிராகரித்து வருவதாக தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவரது இந்த செயற்பாடானது வன்னி மக்களின் குரல்வளையை நசுக்குகின்றதற்கு ஒப்பானதாகும் என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த பெப்ரவரி மாதம் 21ஆம் திகதி மற்றும் நேற்று புதன்கிழமையும் இதுகுறித்து சபாநாயகரிடம் தாம் முறையிட்டதாகவும், சபாநாயகரிடம் நேரில் சென்றும், எழுத்து மூலமும் தான் முறைப்பாடு செய்ததாகவும்

ஆனால் இதுவரை தனக்கு சிறந்த பதிலொன்றை வழங்க சபாநாயகர் தவறியிருப்பதாகவும் சிவசக்தி ஆனந்தன் சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.
தாயகச்செய்திகள்