ஜனநாயக தலைமை தந்தைக்கு சென்றுவிடும் என்ற பயத்திலேயே சுட்டார்கள்!

ஜனநாயகத்தின் தலைமை தனது தந்தைக்கு சென்றுவிடும் என்ற பயத்திலேயே அவரைச் சுட்டுக்கொன்றுவிட்டார்கள் என அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். வவுனியா பாவற்குளம் ஆறாம் வட்டாரத்தில் இடம்பெற்ற அகில இலங்கை தமிழ் காங்கிரசின் செட்டிக்குளம் பிரதேச சபைக்கான பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில், „ஆயுத போராட்டம் பலம் பொருந்தி வந்த காலத்தில் ஜனநாயக தலைமை என்னுடைய தந்தையின் கைகளிற்கு மாறிவிடும் என்ற பயத்தில் அவரை சுட்டுக்கொலை செய்தார்கள். ஆகவே எங்களிற்கு தியாகம் என்றால் என்ன என்று தெரியும். இலட்சக்கனக்கான மக்கள் உயிரைக் கொடுத்தது ஒற்றையாட்சிக்கு ஆதரவளிப்பதற்காக அல்ல அவ்வாறெனின் எப்போதோ இலட்சக்கனக்கான மக்களை காப்பாற்றியிருக்கலாம்.

இன்று இப் போராட்டம்  சரணடையாது உயிர்போனாலும் பரவாயில்லை என்று முள்ளிவாய்க்காலில் போய் முடிந்தமையானது எட்டு வருடங்கள் கழித்து நாங்கள் இந்த இலட்சியத்தை கைவிடுவதற்காக அல்ல. சம்மந்தனுக்கு முடியா விட்டால் விட்டு போ வேறு யாரும் வருவார்கள். நாங்கள் வருவோம் எங்களிற்கென்று ஒரு அனுகுமுறை இருக்கு. நாங்கள் சர்வதேச அரசியலை படித்தவர்கள். எங்களது மக்களது உரிமைகளை எவ்வாறு பெற்றுக்கொள்வது தொடர்பாக ஒரு திட்டம் இருக்கின்றது.

முழங்கால் இட்டு கெஞ்சிக்கொண்டு போவதுதான் உமது பாதையென்றால் இதை விட்டு போங்கள். எங்களது மக்களை ஏமாற்றி அழிக்காதீர்கள். தியாகத்தின் உச்சமான இந்த மண்ணில் இருந்து கேட்கின்றேன் நடக்கப்போகின்ற சதித்திட்டங்களுக்கு துணை போகாமல் உரிமையை பெற்றெடுப்பதற்கான பங்காளர்களாகவும் செயற்பாட்டாளர்களாகவும் முன்வாருங்கள்.” என்றார் அவர்.

தாயகச்செய்திகள்