இராணுவ தளபதிக்கு சவால் விடுத்த சந்தியா

இராணுவத்தினருக்கும், கொலையாளிகளுக்கும் இடையில் வித்தியாசம் இருப்பதாக தெரிவித்துவரும் ஸ்ரீலங்கா இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்க, அதனை நிரூபித்துக்காட்ட வேண்டும் என்று கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட சவால் விடுத்துள்ளார்.

ஊடகவியலாளர் எக்னலிகொட காணாமல் போகச்செய்யப்பட்ட விவகாரத்தில் அவரது ஆவணங்கள் அழிக்கப்பட்டதாக இராணுவத் தளபதி தெரிவித்திருக்கின்ற நிலையில் அதற்கான முழுப்பொறுப்பையும் இராணுவ புலனாய்வுப் பிரிவே ஏற்கவேண்டும் என்றும் சந்தியா எக்னலிகொட வலியுறுத்தினார்.

கேலிச்சித்திரக் கலைஞரும், ஊடகவியலாளருமான பிரகீத் எக்னலிகொட 2010ஆம் ஆண்டு கடத்திச்செல்லப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் தொடர்பான வழக்கில் இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த சிலரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் இராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனாநாயக்கவின் இந்தக் கூற்று உண்மையாகியிருப்பதாக சந்தியா எக்னலிகொட இராணுவத் தளபதிக்கு நேற்றைய தினம் திங்கட்கிழமை வழங்கிய கடிதத்தில் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது.

மேலும் தனது கணவரான பிரகீத் எக்னலிகொடவின் கடத்தல் விவகாரத்தில் அரசியலின் மேலிடத்திலிருந்து விடுக்கப்படுகின்ற அழுத்தம் காரணமாக விசாரணைகள் தாமதப்படுத்தப்பட்டு வருவதாகவும் கொழும்பில் நேற்று ஊடகங்களிடம் கருத்து தெரிவித்தபோது சந்தியா எக்னலிகொட கூறினார்.

சந்தேக நபர்களான அதிகாரிகளுக்கான விளக்கமறியல் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பகிரங்கமாக அண்மையில் தனது அதிருப்தியை வெனியிட்டிருந்த நிலையில் அதனூடாக சந்தேக நபர்களுக்கு பிணை வழங்குவதாக விருப்பநிலை தெளிவாகின்றது என்றும் சந்தியா எக்னலிகொட தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டுள்ள நபர் தொடர்பான தகவல்களை மூடிமறைக்கும் இராணுவ அதிகாரிகள் உண்மையிலேயே கொலைகாரர்கள் மற்றும் குற்றவாளிகள் என்பதை சுட்டிக்காட்டிய சந்தியா எக்னலிகொட, இது தொடர்பில் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட வேண்டும் என்றும் இராணுவத் தளபதியிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

Allgemein