Oktober 3, 2022

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் எச்சரிக்கை

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் சின்னத்தையும் பயன்படுத்தி எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மாநாடு ஒன்றினை நடத்தச் சிலர் முயன்று வருவதாக கனடாவிலுள்ள தலைமையகத்திற்கு தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமைக்காக அந்த இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட சிலர் முயற்சி செய்து வருவதாகவும் அறிய முடிந்துள்ளது.

இவ்வாறு எவராவது உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையோ அல்லது சின்னத்தையோ தவறாகப் பயன்படுத்தி செயற்படுவார்களேயானால் அவர்களுக்கு எதிராக கனடாவிலும், இலங்கையிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என இயக்கத்தின் ஜேர்மன் நாட்டுக் கிளையின் தலைவரும், இயக்கத்தின் சர்வதேச ஒருங்கிணைப்பாளருமான திரு. இ. இராஜசூரியர் மிகவும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த இயக்கத்தின் மாநாடு எனக்கூறி இலங்கையில் அல்லது சர்வதேசத்தில் நிதி வசூலிக்கும் செயற்பாடுகளிலும் இவர்கள் ஈடுபட்டள்ளதால் கொடை வள்ளல்களை எச்சரிக்கையாக இருக்குமாறும் திரு. இ.இராஜசூரியர் தெரிவித்துள்ளார். உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் 13 ஆவது சர்வதேச மாநாடு யாழ்ப்பாணத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்துடன் இணைந்து கடந்த ஆகஸ்ட் மாதம் 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் மிகவும் சிறப்பாக பல்கலைக்கழக மண்டபத்திலும், ரில்கோ ஹோட்டலிலும் நடைபெற்றமையை சகலரும் அறிவர்.

இயக்கத்தின் பெயரையோ இலச்சினையையோ தவறாகப் பயன்படுத்துவது தண்டனைக்குரிய குற்றமாகவே கருதப்படும்.
எனவே தவறிழைத்தமைக்காக தண்டிக்கப்பட்ட சிலரும், பதவிகளுக்காக முண்டியடிக்கும் சிலரும், பணத்தைச் சூறையாட முயலும் சிலரும் கூடி விளையாட முற்பட்டுள்ளதாகவே கருத வேண்எயுள்ளது.

எனவே இந்தக் கூட்டத்தினருக்கு இலங்கை வாழ் தமிழ் மக்கள் எவ்வகையிலும் அனுமதிக்கக் கூடாது எனவும் திரு. இ. இராஜசூரியர் தெரிவித்துள்ளார். எமது எச்சரிக்கையை மீறியும் இவர்கள் செயற்படுவார்களேயானால் இலங்கையில் இவர்களுக்கும், இவர்களுக்குத் துணை போவோருக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் திரு. இ. இராஜசூரியர் மிகவும் கண்டிப்பாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த இயக்கத்திற்கென இலங்கையில் ஒரு கிளை உள்ளதாகவும் அவர்களே அங்கு அங்கீகாரம் பெற்ற அமைப்பாக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ள திரு. இ. இராஜசூரியர் அந்த அமைப்பிற்கும் இந்த மாநாட்டிற்கும் எவ்விதமான தொடர்பும் கிடையாது எனவும் தெரிவித்துள்ளார்.