பட்டம் விட்ட இளைஞன் உயிரிழப்பு காரணம் என்ன.?

யாழ்ப்பாணம் புத்தூர் – மீசாலை வீதியில் பட்டம் விட்டுக் கொண்டிருந்த போது, பட்டத்தில் பொருத்தியிருந்த மின்சார வயர் வீதியால் சென்ற பிரதான மின் கம்பியுன் சிக்குப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இன்று (07) மாலை இடம்பெற்ற குறித்த சம்பவத்தில், புத்தூர் கிழக்கு பகுதியினை சேர்ந்த பாஸ்கரன் டர்சன் வயது (19) என்ற இளைஞனே பலியாகியுள்ளதாக, அச்சுவேலி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உயர்தரத்தில் கல்வி பயலும் குறித்த இளைஞன் இன்று மாலை சக நண்பர்களுடன் இணைந்து பட்டம் ஏற்றியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இரவு நேரம் பட்டம் தொடர்ந்து நிற்பதற்காக, மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு அதற்கு மின்சார இணைப்பும் வழங்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது.

வீதியில் நின்று ஏற்றிய பட்டத்தினை வயல் தரவைக்குள் எடுத்து செல்ல முற்பட்ட போது பட்டத்தின் வாலில் பொருத்தியிருந்த வயர் வீதியால் சென்ற உயர் மின் அழுத்த பிரதான வடத்தில் உரசுண்டுள்ளது.

இதனையடுத்து, மின்சாரம் தாக்கிய நிலையில், தூக்கி வீசப்பட்ட குறித்த இளைஞனை சக நண்பர்கள் காப்பாற்றி அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

பின்னர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போது, வழியிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Allgemein தாயகச்செய்திகள்