காரைநகர் மணிவாசகர் விழா முன்னெடுக்கும் திருவாசக விழாவின் இரண்டாம் நாள் நிகழ்வுகள் இன்று 29.12.2017 வெள்ளிக்கிழமை ஈழத்துச் சிதம்பர தேவஸ்தான மண்டபத்தில் திருப்பெருந்துறை அரங்கில், யாழ்ப்பாணம் சைவபரிபாலன சபைத் தலைவர் ஓய்வுநிலை நீதிபதி இ.வசந்தசேனன் தலைமையில் நடைபெற்றது.
.
நிகழ்வில் மாவை ஆதீன முதல்வர் மகாராஜஸ்ரீ கு.ச.இரத்தினசபாபதி குருக்கள் ஆசியுரை வழங்கினார். ஈழத்துச் சிதம்பர ஆதீன கர்த்தர் மு.சுந்தரலிங்கம் திருவாசகம் இசைத்தார். மணிவாசகர் சபையின் உபதலைவர் ஓய்வுநிலை அதிபர் க.தில்லையம்பலம் வரவேற்புரை ஆற்றினார்.
.
சிறப்புச் சொற்பொழிவுகளாக ‘உன்கையிற் பிள்ளை உனக்கே அடைக்கலம்” என்ற பொருளில் கோப்பாய் ஆசிரிய கலாசாலை பிரதி முதல்வர் ச.லலீசன் அவர்களும் வேண்டத்தக்கது அறிவோய் நீ என்ற பொருளில் கலாபூஷணம் காரை பண்டிதர் மு.சு. வேலாயுதபிள்ளை அவர்களும் சொற்பொழிவுகளை ஆற்றினர்.
.
திருவாசக விழாவையொட்டி காரைநகர் பாடசாலைகளிடையே நடத்தப்பட்ட திருவாசகப் போட்டிகளுக்கான பரிசில் வழங்கும் நிகழ்வும் இடம்பெற்றது.
.
நிகழ்வுகளை மணிவாசகர் சபையின் தலைவர் ஓய்வுநிலை அதிபர் வே.முருகமூர்த்தி நெறிப்படுத்தினார்.
.
திருவாசக விழா 28.12.2017 தொடக்கம் எதிர்வரும் 01.01.2018 திங்கட்கிழமை வரை இடம்பெறவுள்ளது.
காரைநகர் மணிவாசகர் சபை 1940 ஆம் ஆண்டில் யோகர் சுவாமிகளின் ஆசிகளுடன் அமரர் கலாநிதி வைத்தீசுவரக் குருக்களால் நிறுவப்பட்ட சபை என்பது குறிப்பிடத்தக்கது.