தமிழரசுக்கட்சியுடனான முரண்பாடு – முதல்வர் சி.வி.

தவறிழைக்கும் கட்சித் தலைமைப்பீடம் தங்களைச் சரியான வழிக்கு மாற்றாமல் என்னைக் குறை கூறுவது விசித்திரமாக இருக்கின்றது என வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் வாராந்தம் ஊடகவியலாளர்களின் கேள்விக்கு எழுத்து மூலம் பதிலளித்து வருகின்றார். அந்த வகையில், ‘முதல்வர் கட்சிக்குக் கட்டுப்பட்டு நடப்பதில்லை’ என தமிழரசுக்கட்சி முன்வைக்கும் குற்றச்சாட்டுத் தொடர்பான கேள்விக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

குறித்த பதிலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 2013ம் ஆண்டின் தேர்தல் விஞ்ஞாபனம் எனக்குத் தரப்பட்டது. அதில் உள்ள கொள்கைகள் எனக்குச் சரியெனப்பட்டன. எனவே அதனை அடிப்படையாகக் கொண்டு என் அரசியல் வாழ்க்கை பயணத்தை மேற்கொண்டேன்.

ஆனால் வெகுவிரைவில் ஒன்றை உணர்ந்து கொண்டேன். விஞ்ஞாபனக் கொள்கைகளுக்கும் விரவியிருந்த யதார்த்த நிலைக்கும் இடையில் பாரிய விரிசல் இருந்ததை நான் உணர்ந்தேன்.

நடைமுறை நலன்கள் எவ்வாறு அமைந்தனவோ அவற்றை முன்வைத்தே தீர்மானங்கள் எடுக்கப்பட்டன. அங்கு சுயநலமே கட்சித் தலைமைப்பீடத்தால் கருத்துக்கெடுக்கப்பட்டது என்பதையும் உணர்ந்து கொண்டேன்.

தேர்தல் வாக்குறிதிக்கு மாறாக குறைத்தோ, அரசாங்கத்திடம் எமது கோரிக்கைகளை முன்வைப்பது என்றால் அது மக்களின் கருத்துக்கிசைவாக நடைபெற வேண்டும்.

ஆகக் குறைந்தது கூட்டமைப்பின் கட்சித் தலைவர்களின் கருத்தொருமிப்பின் அடிப்படையில் கோரிக்கைளில் மாற்றம் ஏற்படுத்த வேண்டும். தான்தோன்றித்தனமாக சுயலாபம் கருதி நடவடிக்கைகளை எடுக்கக் கூடாது.

ஆனால் அவ்வாறு தலைமையே கூட்டுக் கட்சியின் கொள்கைகளை உதாசீனம் செய்யும் போது ஒருவர் என்ன செய்ய வேண்டும்? ஒன்று வெளியேற வேண்டும். வெளியேறினால் உதாசீனம் செய்து நடந்து கொள்பவர்கள் கை ஓங்கிவிடும். இது எமது மக்களையே பாதிக்கும்.

மக்கள் பெருவாரியாக என்னைத் தேர்ந்தெடுத்தபோது கொள்கைகளின் அடிப்படையில்தான் தேர்ந்தெடுத்தார்கள். அவற்றிலிருந்து கட்சியின் தலைமைத்துவம் வழுக முற்படும் போது கட்சியின் நடவடிக்கைகளை மக்கள் சார்பாக மாற்ற எத்தணிப்பதே எமது கடமை என்று உய்த்துணர்ந்தேன்.

இலங்கைத் தமிழரசுக் கட்சிக்குக் கட்டுப்பட்டு நான் நடக்கவில்லை என்று கூறும் போது அதே கட்சியின் கொள்கைக்குக் கட்டுப்படாத கட்சித் தலைமைத்துவத்துக்கு நான் என்ன பதில் கூற முடியும்? என்னை கட்சிக் கூட்டங்களுக்கு அழைத்திருந்தால் எமது முரண்பாடுகள் பற்றிக் கூறியிருப்பேன். அது நடைபெறாத நிலையில் எமது கொள்கை ரீதியான விடயங்களை வெளிப்படையாக மக்களுக்குக் கூறுவதே எமது கடமை என்று நான் நினைத்தேன். அதையே செய்தும் வருகின்றேன் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Allgemein தாயகச்செய்திகள்