பெண் வேட்பாளரை அச்சுறுத்திய சந்தேகத்தில் ஒருவர் கைது!

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட இருந்த பெண் வேட்பாளர் ஒருவரைத் தாக்கி அச்சுறுத்திய சந்தேகத்தில் நபர் ஒருவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

இதுகுறித்து தெரியவருவதாவது, நடைபெறவுள்ள உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச சபையில் புளொட் அமைப்பின் சார்பாக பெண் ஒருவர் களமிறங்கவுள்ளார் என கூறப்பட்டுள்ளது. குறித்த பெண் நேற்றைய தினம் காலை பாராளுமன்ற உறுப்பினர் சிவமோகனின் கட்சி அலுவலகத்திற்கு வேட்பாளர் கையெழுத்து வைப்பதற்காக சென்றுள்ளார். இதன்போது சிவமோகனின் ஆதரவாளர்களால் மிரட்டப்பட்டு மாலை வரை ஆதரவாளர் ஒருவரின் வீட்டில் அடைக்கப்பட்டு கையெழுத்து வைக்கவிடாமல் தடைசெய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுதொடர்பில் பாதிக்கப்பட்ட வேட்பாளரான இளங்கோபுரம் விசுவமடுவினை சேர்ந்த மஞ்சுளா என்பவர் இன்றைய தினம் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்துள்ளார். இதன்படி வழக்கு பதிவு செய்த புதுக்குடியிருப்பு பொலீஸார் குறித்த  நபரை கைதுசெய்து சிறையில் அடைத்துள்ளதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் கூறுகின்றன.

இதேவேளை பாதிக்கப்பட்ட குறித்த பெண் வேட்பாளரை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பொலிஸார் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Allgemein