ஜெனீவா மனித உரிமைச் சபையில் இலங்கை அரசாங்கம் மீது காரசாரமான குற்றச்சாட்டு!

இறுதிப் போருக்குப் பின்னர் ஜெனீவா மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறும், அதற்கான கால அட்டவணை ஒன்றை வெளியிடுமாறும் சர்வதேச நாடுகள் கடும் அழுத்தம் கொடுத்துள்ளன.

அமெரிக்கா, இந்தியா, பின்லண்ட், டென்மார்க், ஒஸ்ரேலியா, மசிடோனியா, நோர்வே, நியூசிலாந்து உட்பட பல நாடுகள் ஜெனீவா மனித உரிமைச் சபையில் இந்தக் கோரிக்கையை இலங்கை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் தெரிவித்தார்.

மனித உரிமைச் சபையில் இலங்கையின் மனித உரிமை நிலை குறித்த மூன்றாவது காலக்கிரம மீளாய்வு மாநாடு நேற்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்றது. 90 நாடுகள் கலந்துகொண்டன. தமிழ் பகுதிகளில் தொடர்ச்சியாக பாலியல் வல்லுறவுகள் இடம்பெறுவதாகவும், மக்கள் விரக்தியடைந்து ஆா்ப்பாட்டங்களில் ஈடுபடுவதாகவும் மீளாய்வு மாநாட்டில் பங்குபற்றிய பிரதிநிதிகள் குற்றம் சுமத்தப்பட்டுள்ளனர்.

2012 ஆம் ஆண்டு இடம்பெற்ற மீளாய்வின்போது இலங்கை அரசு சமர்ப்பித்த அறிக்கையில் ஏற்பட்ட முன்னேற்றம், மற்றும் நல்லாட்சி அரசாங்கத்தின் தற்போதைய மனித உரிமை நிலைமை என்பன குறித்து ஏனைய உறுப்பு நாடுகள் ஆராயும் அமர்வாக அந்த மீளாய்வு மாநாடு இடம்பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மாநாட்டில் கலந்துகொண்ட மசிடோனியாவின் பிரதிநிதி இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் குறித்து குறைகூறினார். குறிப்பாக பொறுப்புக் கூறல், மீளிணக்கம் ஆகியவற்றில் நல்லாட்சி அரசாங்கத்தில் முன்னேற்றம் இல்லையென்றும் இதனால் வடபகுதியில் மக்களால் தொடர்ச்சியாக ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

மக்களின் விரக்தி நிலைதான் அவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு காரணம் எனவும் மசிடோனியா பிரதிநிதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அதேவேளை இலங்கைப் படைகள் தற்போதும் மீறல்களில் ஈடுபட்டுள்ளதாக வெளியாகும் தகவல்களும், ஏனைய மதங்களை பின்பற்றுபவர்கள் மீதான தாக்குதல்களும் கவலையளிப்பதாக அமெரிக்கா தெரிவித்தது.

அத்துடன் மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்திட்டம் ஒன்றை தயாரிக்குமாறும் அமெரிக்கா இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளது.

இலங்கையில் பொறுப்புக் கூறல் மற்றும் மீளிணக்கம் என்பன தொடர்பாகப் பெருமளவு பணிகள் புரியப்பட வேண்டியிருப்பதாக கனடா தெரிவித்தது.

குடிசார் விடயங்களில் படையினரின் தலையீட்டை முடிவுக்குக் கொண்டுவருமாறு கனடா, இலங்கையைக் கேட்டுக் கொண்டது. படையினர் ஆக்கிரமித்துள்ள மக்களின் காணிகள் விடுவிக்கப்படவேண்டுமெனவும் பயங்கரவாதத் தடைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு, சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்படக் கூடிய சட்டம் பதிலுக்கு நடைமுறைப்படுத்தப்படவேண்டுமெனவும் கனடா கோரிக்கை விடுத்துள்ளது.

இதேவேளை காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அனைவரது பெயர்களையும் உள்ளடக்கிய பெயர் பட்டியலை வெளியிடுமாறு சுவிட்சர்லாந்து கோரிக்கை விடுத்துள்ளது. தமிழ் பகுதிகளில் இலங்கைப் பாதுகாப்புப் படையினர் பாலியல் வன்முறை மற்றும் சித்திரவதைகளைத் தொடர்வதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து சுதந்திரமான விசாரணை தேவையென மொன்டநீக்றோ கோரிக்கை விடுத்தது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை உருவாக்கிய றோம் சாசனத்தில் இணைந்து கொள்ளுமாறு கிழக்குத் தீமோர், ஒஸ்ரேலியா, எஸ்தோனியா மற்றும் சுலொவேனியா ஆகிய நாடுகள் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டன. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான அலுவலகத்தை முழுமையாக செயற்படுத்துமாறும், அதற்கான வளங்களை வழங்குமாறும் பிரித்தானியா, தென் கொரியா உட்படப் பல நாடுகள் கேட்டுக் கொண்டன.

அதேவேளை அரசியலமைப்பின் 13 ஆம் திருத்தத்தின் அடிப்படையில் அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வை வழங்குமாறு இந்தியாவும் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை வேகப்படுத்துமாறும், முழுமையான நிலைமாறு கால நீதிப்பொறிமுறையை அமைக்குமாறு தென்னாபிரிக்காவும் கோரிக்கை விடுத்ததுள்ளதாக ஐ.பி.சி.தமிழ் செய்தியாளர் மேலும் தெரிவித்தார்.

Allgemein உலகச்செய்திகள்