தனது மனைவி, மகனை நாடு கடத்த வேண்டாம்: சீனாவிடம் கெஞ்சும் வடகொரியர்

தன்னுடைய மனைவியையும், மகனையும் வலுக்கட்டாயமாக நாடு கடத்த வேண்டாம் என வட கொரியர் ஒருவர் சீன அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

வலுக்கட்டாயமாக வடகொரியா அனுப்பி வைக்கப்பட்டால், அவர்கள் மரண தண்டனையை எதிர்கொள்ள நேரிடும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சீனாவின் எல்லையை கடந்தபோது கைது செய்யப்பட்ட 10 வட கொரியர்கள் குழுவில் குறித்த பெண்ணும், அவருடைய 4 வயது மகனும் இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தற்போது கைது செய்யப்பட்ட குறித்த குழுவினரை வடகொரியாவுக்கே திருப்பி அனுப்பும் பொருட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனையடுத்து தென் கொரியாவில் கடந்த 2015 ஆம் ஆண்டு தஞ்சமடைந்துள்ள லீ என்பவர் தமது குடும்பம் தொடர்பில் இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

தன்னுடைய மனைவியும், மகனும் வட கொரியாவுக்கு அனுப்பப்பட்டால், அவர்களுக்கு மரண தண்டனை வழங்கப்படும் அல்லது அரசியல் சிறை முகாமில் அடைக்கப்படுவார்கள் என்று சீனா அதிகாரிகளிடம் அவர் மன்றாடியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

நாடு கடத்துவதில் இருந்து தன்னுடைய குடும்பத்தை காப்பாற்றுங்கள் எனக் கூறியுள்ள அவர்,

சீனா ஜனாதிபதி ஜிங்பிங் ஒரு குடும்பத்தின் தந்தையாக தனது குடும்பத்திற்கு உதவ வேண்டும் என்றும் அவர் மன்றாடி கேட்டு கொண்டுள்ளார்.

கைது செய்யப்பட்டிருக்கும் தன்னுடைய மகனின் படங்களை பார்த்து தான் மிகவும் துன்புறுவதாக கூறியுள்ள அவர்,

தன்னுடைய குழந்தை தன்னை பெயர் சொல்லி அழைப்பது தனது காதுக்கு கேட்கிறது. என்னுடைய குழந்தை மோசமான சிறை அறையில் தந்தைக்காக அழுது கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது. நான் எதுவும் செய்யாமல் இருக்க முடியவில்லை என்றும் அவர் மிக உருக்கமாக கூறியுள்ளார்.

சீனாவின் வட கிழக்கிலுள்ள லியோவ்நிங் மாகாணத்திலுள்ள ஷென்யாங்கில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் நடத்திய தேடுதல் வேட்டையின்போது வடகொரியாவை விட்டு தப்பியோடிய 10 பேர் குழு ஒன்று நவம்பர் 4 ஆம் திகதி கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Allgemein உலகச்செய்திகள்