மனிதன் செய்த தவறுக்கு மடிய போகும் மக்கள் : 400 ஆண்டுகளுக்கு முன் நடந்தது!

நேற்றுப் பெய்த கன மழையைக் கண்டு மிரண்டு தான் போய் விட்டது சென்னை. இருக்காதா பின்னே? 2015-ல் பெய்த பேய் மழையும், அணையிலிருந்து திறந்து விடப்பட்ட காட்டாற்று வெள்ளத்திலும், கொஞ்ச நாட்களுக்கு தனித் தீவாகி விட்டது சென்னை. நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மேல் தட்டு மக்களும் நடுத்தெருவுக்கு வந்து விட்டனர்.

அடுத்த வீட்டில் யார் இருக்கிறார்கள் என்று தெரியாமல் வாழ்ந்த சென்னை வாசிகளுக்கு, மனிதர்களைப் பற்றியும், மனிதாபிமானத்தின் முக்கியத்துவத்தையும் யோசிக்க வைத்துப் பாடம் புகட்டிய தருணங்கள் அவை! ஏந்ந நேரம் எதுவும் நடக்கும். எதுவும் நிரந்தரம் இல்லை, என்று தற்போதைய அறிவியல் தொழில் நுட்பங்களுக்குச் சவால் விட்டிருந்தது இயற்கை.


அந்த இயற்கையை எதிர்த்து, சாமானிய மனிதர்களாகிய நாம் எதுவும் செய்ய இயலாமல் கைகட்டி நின்ற அந்த நிதர்சனமான தருணத்தை, மனிதனாகப் பிறந்த யாரும் அவ்வளவு சீக்கிரம் மறந்திருக்க மாட்டார்கள். பசியாலும், பிணியாலும் வாடிய மக்களைக் காண, காரை விட்டு இறங்காமல், கார் கண்ணாடியை மட்டும் இறக்கி விட்டு பேச வந்த அமைச்சரை மக்கள் நடத்திய விதத்தை, அதற்குள் மறந்து விட்டுப் பேசுகிறார்களோ? என்று மீண்டும் சென்னைவாசிகளின் கோபம் ஆளும் கட்சியினர் மீது திரும்பியிருக்கிறது.

அவர்கள் கட்சிக்குள் இருக்கும் பிரச்சினையைப் பேசித் தீர்க்கவே ஆளும், நேரமும் இல்லாத போது, மக்களைப் பற்றிக் கவலைப்பட அவர்களுக்கு எங்கே நேரம் இருக்கப் போகிறது? என்பது தான், பொது மக்களின் வசவுகளாக வந்து கொட்டிக் கொண்டிருக்கும் வார்த்தைகள்!

இந்த லட்சணத்தில், அமெரிக்காவை விட நாங்கள் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கிறோம், என்று உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி அளித்த பேட்டியை மீம்சாகவும், டப்ஸ்மேச்சாகவும், காமெடியாகவும் வாட்ஸ்அப்பில் தமிழகமெங்கும் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு நாள் மழைக்கே தாங்கலையே, இன்னும் நாலு நாள் சேர்ந்தாற்போல் பேஞ்சா நம்ம கதி என்ன? என்று இப்போதே சென்னைவாசிகளின் வயிற்றில் புளி கரையத் தொடங்கியிருக்கிறது.

இயற்கை எப்போதுமே தனது இயல்பை மாற்றிக் கொள்ளாது. 400 வருடங்களுக்கு முன்பாக வெறும் மீன்பிடி கிராமமாக இருந்த சென்னை, இன்று தமிழ்நாட்டின் தலை நகராக மாறியிருக்கிறது. அப்போது, செயின்ட் சார்ஜ் கோட்டையைக் கட்டித் துறைமுகமாக மாற்றிய ஆங்கியேரின் காலத்தில், இன்றைய சென்னையைச் சுற்றி 600-க்கும் மேற்பட்ட நீர்நிலைகள் இருந்தன.

சென்னை நகரம் விரிவாக விரிவாக, குளங்கள் எல்லாம் பிளாட்டுகளாக மாறி, தற்போது, அடுக்குமாடிக் கட்டிடங்களாகவும், நெரிசலாக மக்கள் வாழும் பகுதிகளாகவும் மாறிக் கொண்டிருக்கின்றன. தற்போது அந்த நீர் நிலைகளில் பத்து கூட இல்லை என்பது தான் வேதனையான விஷயம்.

விஷயம் தெரியாமல், இயற்கையுடன் போட்டி போட்டுக் கொண்டு, நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக சென்னை நிமிடத்திற்க நிமிடம் கட்டிடங்களாக உருமாறிக் கொண்டேயிருக்கின்றது.ஆனால், மழை நீருக்கு, எப்போதும் அது செல்லும் பாதையில் தான் செல்லும். அது மாறாது.

அந்த இடங்களில் கட்டிடங்கள் இருந்தால், அதைப்பற்றி அதற்கு கவலை இல்லை. அங்கு தான் நுழைந்து சூழ்ந்து தங்கும். இது சென்னைக்கு மட்டுமல்ல. உலகத்திற்கே பொதுவான நியதி. அப்படியிருக்க, இயற்கையுடன் போட்டி போட மனிதர்களாகிய நமக்கு எந்த தகுதியும் இல்லை.

இதனைத் தற்காத்துக் கொள்ள, வெள்ளத்திலிருந்து தப்பித்துக் கொள்ள வழி தேடலாமேயொழிய அதை மாற்றிக் காட்ட இயலாது என்ற உண்மையை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். மழைக் காலங்களில் வாழ்வதற்குத் தகுதியான நகரமாக  இல்லை என்ற நிலைக்கு சென்னை ஏற்கனவே தள்ளப்பட்டு விட்டது.

இந்த உண்மை தெரியாமல், அமெரிக்காவில் கூட மழைவெள்ளம் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. தமிழகம் காப்பாற்றப் பட்டுக் கொண்டிருக்கிறது என்ற அமைச்சரின் அறிக்கைக்கு விபரம் தெரிந்த மக்களிடமிருந்து வரும் விமர்சனம் ஒன்றே ஒன்று தான். அமைச்சரே! அமெரிக்காவும், இந்த பூமியில் தான் இருக்கிறது!

Allgemein உலகச்செய்திகள்