”பிரபாகரனை எப்போது கொன்றோம்? என்னிறார், கமால் குணரத்ன!

கடந்த 2009 ஆம் ஆண்டு மே மாதத்திற்குப் பின்னர் பயங்கரவாதம் தொடர்பான எந்தவித பிரச்சினைகளும் எழவில்லை என ஸ்ரீலங்காவின் முன்னாள் இராணுவ அதிகாரி கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

மேலும், ”கை, கால் என உடல் உறுப்புக்களையும் உணர்ச்சிகளையும் இழந்து எமது இராணுவத்தினர் எதற்காக யுத்தம் செய்தார்கள்? எதற்காக இவ்வளவு துன்பத்தையும் அவர்கள் தாங்கிக்கொண்டார்கள்” என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.

இலங்கையில் இடம்பெற்ற போர் தொடர்பான சர்ச்சைக்குரிய கருத்துக்களை முன்வைத்துவரும் முன்னாள், வன்னி பாதுகாப்புப் படைகளின் தலைமைத் தளபதியாக இருந்த கமால் குணரத்ன என்பவரே இவ்வாறு கூறியுள்ளார்.

“எலிய – ஒளிமயமான அபிலாசைகள்” என்ற பெயரிலான புதிய அமைப்பை, கோத்தபாய ராஜபக்ச தலைமையில் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தமிழ், சிங்களம், முஸ்லிம் என அனைத்து மக்களும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இராணுவத்தினர் இத்தனை துயர்களையும் தாங்கிக்கொண்டார்கள். முத்தையா முரளிதரனினதும் சுசந்திகா ஜெயசிங்கவினதும் இலக்குகளையும் சாதனைகளினையும் யாருமே இன்னமும் முறியடிக்கவில்லை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால் எமது இராணுவத்தினரின் சாதனைகள் பற்றி யாருமே பேசுவதில்லை.

வடக்கு தமிழ் மக்களுடன் நாம் இருந்தோம். அவர்களுடைய அபிலாசைகள் பற்றி எமக்கு நன்றாகவே தெரியும். அவர்கள் மகிழ்ச்சியான வாழ்க்கையையும் குடும்பத்துடன் வாழ்வதற்கான சந்தோசமான சூழலையையுமே விரும்பினார்கள். அவர்களுக்கு அந்த வாழ்க்கையை மஹிந்த ராஜபக்ஸவின் அரசாங்கத்தில் நாம் பெற்றுக்கொடுத்தோம்.

மேலும் அவர்களுக்கு சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம், வடக்கில் தற்போது குண்டு வெடிக்கவில்லை, மக்கள் பங்கர்களுக்குள் பயந்து மறையவில்லை. எந்த பிரச்சினையும் இல்லாமல் இருக்கின்றார்கள். கடந்த 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் திகதி காலை 10.30 மணிக்கு வேலுப்பிள்ளை பிரபாகரனைக் கொன்றோம். அதன்பின் பயங்கரவாதம் தொடர்பில் எந்த பிரச்சினையும் இதுவரை ஏற்படவில்லை.” எனவும் மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார்.

Allgemein