இராணுவத்தின் களமிறக்கம்; பொறுப்பற்ற தமிழ்த்தலைமை

இரண்டு பொலிஸார் மீது, கொக்குவில் பகுதியில் வாள்வெட்டு நடத்தப்பட்டதையடுத்து, யாழ்ப்பாணம் வந்திருந்த பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, “நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர, தேவைப்பட்டால் இராணுவத்தினர், கடற்படையினர், விமானப்படையினரின் உதவியையும் பெறுவேன்” என்று கூறியிருந்தார்.

யாழ்ப்பாணக் குடாநாட்டில் சுமார் ஆயிரம் பேரைக் கொண்ட விசேட அதிரடிப்படையைத் தனது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் பொலிஸ்மா அதிபர், அவர்களின் மூலம், நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் வாய்ப்புகள் இருந்தாலும், முப்படைகளையும் களமிறக்குவேன் என்று எச்சரித்தமை, சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடிய விடயமல்ல.

வடக்கிலுள்ள மக்களுக்கு இராணுவமோ, கடற்படையோ, விமானப்படையோ ஒன்றும் புதியவையல்ல. முப்பதாண்டுப் போரில் இதுபோன்ற எல்லாப் படைகளையும் சந்தித்தவர்கள் அவர்கள். இங்குள்ள படையினரை மாத்திரமன்றி, இந்தியப் படையினரையும் கூடப் பார்த்து விட்டவர்கள்.

ஆனால், முப்படைகளைக் களமிறக்குவது என்பது, எந்தளவுக்கு நிலைமையைச் சிக்கலாக்கும் என்பதைப் பொலிஸ் மா அதிபர் உணர்ந்திருக்கிறாரா என்பதுதான் கேள்விக்குரிய விடயமாக இருக்கிறது.

ஏனென்றால், வாள்வெட்டுக் குழுக்களைச் சமாளிக்க, இராணுவம்தான் தேவை என்ற நிலை ஏற்பட்டால், பொலிஸாரினது திறன் என்ன? போர்க்காலத்தில், கிழக்கு மாகாணத்தில் விடுதலைப் புலிகளுக்கே சவால் விடுத்த பொலிஸ் விசேட அதிரடிப்படையின் ஆற்றல் என்ன? என்றெல்லாம் கேள்விகள் எழும்.

அதேவேளை, முப்படைகள் களமிறக்கப்படும்போது, அதன் பாதிப்புகள் தமிழ் மக்களுக்கு பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். அதுவும் போரினால், குடும்பத் தலைவரை இழந்ததால், பெண்கள் குடும்பங்களுக்குத் தலைமை தாங்கிக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வசிக்கின்ற ஒரு பிரதேசத்தில், முப்படைகள் களமிறக்கப்படுவதன் ஆபத்தைச் சற்றும் குறைத்து மதிப்பிட்டு விடமுடியாது.

போருக்குப் பின்னர், படையினர் சுதந்திரமாக உலாவித் திரிந்த காலகட்டத்தில், இதனால் ஏகப்பட்ட பிரச்சினைகளைத் தமிழ் மக்கள் எதிர்கொண்டனர். ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர்தான் இராணுவத்தினர் பெரும்பாலும் முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள நிலை காணப்படுகிறது. இதனால், பெண் தலைமைத்துவக் குடும்பங்களும் ஏனைய தமிழ் மக்களும் எதிர்கொண்டு வந்த பல்வேறு சிக்கல்கள் குறைந்திருக்கின்றன.

இப்படியான நிலையில், வாள்வெட்டுக் குழுக்களை அடக்குகின்ற போர்வையில், முப்படையினரையும் வீதிக்கும், வீடுகளுக்குள்ளேயும் கொண்டு வந்தால், அது விபரீதமான விளைவுகளையே ஏற்படுத்தும்.

இராணுவத் தலையீடுகள் இல்லாத இயல்பு வாழ்வைத் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற நிலையில், மீண்டும் இராணுவ நெருக்குவாரங்களுக்கு உட்பட்ட, ஒரு சூழலுக்குள் அவர்களைத் தள்ளிச் செல்வது, மக்கள் மத்தியில் குழப்பங்களையும் கோபத்தையும் ஏற்படுத்தும்.

அதைவிட, மிகையான படைபலத்தை, வாள்வெட்டுக் குழுக்களின் மீது பிரயோகிக்க முனையும் போதும், தேவையற்ற பிரச்சினைகள்தான் முளைக்கும். அது இராணுவத்தினரையும் கூடத் தவறான வழிக்குக் கொண்டு செல்லும்.

அவற்றுக்கு அப்பால், நல்லிணக்க முயற்சிகளில் ஈடுபட்டுள்ள அரசாங்கமும் சரி, இராணுவமும் சரி, இதுபோன்ற பிரச்சினைகளால், பின்னடைவுகளையே சந்திக்க நேரிடும்.

இதையெல்லாம், பொலிஸ்மா அதிபர் அறியாதவராக இருப்பார் என்று கருதுவதற்கில்லை. ஆனாலும், இந்த விடயத்தில் ஏன் அவசரப்படுகிறார் என்று தெரியவில்லை.

பொதுவாகவே, சட்டம் ஒழுங்கு விடயத்தில் பொலிஸ் தரப்பினால் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியாது போகும்போது, இராணுவத்தினரை உதவிக்கு அழைப்பது வழக்கம்.

யாழ். குடாநாட்டின் சட்டம் ஒழுங்கு விவகாரத்தில், இராணுவத் தலைமையகத்தின் ஆலோசனையைப் பெற்றுக் கொள்ளாமல், எந்த நடவடிக்கையிலும் ஈடுபடக் கூடாது என்று யாழ். படைகளின் தலைமையகத் தளபதிக்கு, இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க உத்தரவிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இராணுவத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர், முதல் முறையாக யாழ்ப்பாணத்துக்குப் பயணம் மேற்கொண்டிருந்த போதே, அவர் இந்த உத்தரவை வழங்கியிருந்தார்.

முப்படைகளையும் உதவிக்கு அழைக்கும் முடிவை, பொலிஸ்மா அதிபர் இதுவரை எடுக்காவிடினும், இத்தகையதோர் எச்சரிக்கை விடுத்த பின்னரும், இதைச் சாதாரணமான ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது.

பொலிஸ்மா அதிபர், பகிரங்கமாக இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கும் நிலையில், தமிழ் அரசியல் தலைமைகள் இந்த விடயத்தில் எந்தளவுக்குப் பொறுப்புடன் நடந்து கொண்டிருக்கின்றன என்பது கேள்விக்குறி.

2015 ஆம் ஆண்டு, புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, யாழ்ப்பாணத்தில் வன்முறைகள் வெடித்தபோதே, அதைக் கட்டுப்படுத்த இராணுவத்தைக் களமிறக்க அரசாங்கம் திட்டமிட்டது.

அதற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரனும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதனால், விசேட அதிரடிப்படையினர் மூலம், வன்முறைகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இப்போதும் கூட, பொலிஸ் விசேட அதிரடிப்படையைப் பயன்படுத்தி, நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முடியும். அதுவும் கூட, ஒரு துணை இராணுவம்தான். போர்க்காலத்தில் அவர்களும் கூட, தமிழ் மக்களுக்குத் துன்புறுத்தல்களைக் கொடுத்தவர்கள்தான்.

ஆனாலும், இராணுவத்தைப் போல, நிலைமைகளைப் பாரதூரமாகக் கையாள மாட்டார்கள். அதற்கேற்ற பயிற்சிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, இந்த விடயத்தில், அக்கறையற்றிருக்கிறதோ என்றே சந்தேகிக்க வேண்டியுள்ளது. பொலிஸ்மா அதிபரின் கருத்து வெளியானதுமே, அதிகாரபூர்வமான எதிர்ப்பை அறிக்கையாக வெளியிட்டிருக்க வேண்டும். ஆனால், கூட்டமைப்பின் தலைமை அப்படிச் செய்யவில்லை. ஊடகங்கள் தட்டி, எழுப்பி கேள்வி கேட்கின்ற வரை, அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இன்னமும் கூட வாய் திறக்கவில்லை.

இதுபோன்ற விடயங்களில், அரசாங்கத்துடன் கடும் போக்குடன் நடந்து கொள்ளத் தவறினால், அது தமிழ் மக்களுக்கு மாத்திரமன்றி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் கூட, பாதிப்பையே ஏற்படுத்தும். அதைக் கூட்டமைப்புத் தலைமை கருத்தில் கொண்டிருப்பதாகவே தெரியவில்லை.

கூட்டமைப்புத் தலைமை மாத்திரமன்றி, வடக்கு மாகாண முதலமைச்சர்
சி.வி.விக்னேஸ்வரனும் கூட, இந்த விடயத்தில் இன்னும் கூடுதலான ஈடுபாட்டையும் பொறுப்பையும் வெளிப்படுத்தியிருக்க முடியும்.

வடக்கு மாகாணத்தின், சட்டமும் ஒழுங்கும் அமைச்சுப் பதவியும் முதலமைச்சரிடம் தான் இருக்கிறது. இந்தப் பதவியை அவர் பயன்படுத்திக் கொள்வதாகவே தெரியவில்லை. வடக்கு மாகாணசபையின் அண்மைய அமர்வுகளின்போது, இது ஒரு குற்றச்சாட்டாகவும் கூட முன்வைக்கப்பட்டது.

முதலமைச்சர் தன்னிடம் உள்ள சட்டமும் ஒழுங்கும் அமைச்சர் பதவியை வைத்துக் கொண்டு, வடக்குக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபரை அழைத்துப் பேசி, உத்தரவுகளை வழங்க முடியும் என்று ஆலோசனையும் முன்வைக்கப்பட்டது. ஆனால், முதலமைச்சர் விக்னேஸ்வரன், பொலிஸ் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதிலோ, பொலிஸ் அதிகாரிகளை அழைத்து உத்தரவுகளை இட்டு, தனது அதிகாரங்களை உறுதிப்படுத்திக் கொள்வதிலோ, ஆர்வம் காட்டவில்லை. அவரது இந்த மென்போக்கான செயற்பாடும் கூட, பொலிஸ்மா அதிபர் இதுபோன்ற கருத்துகளை வெளியிடுவதற்குத் துணைபோயிருக்கலாம்.

இனிமேலும், முதலமைச்சர் விக்னேஸ்வரன் இந்த விடயத்தில் மௌனம் காப்பாரானால், வடக்கின் பாதுகாப்பு என்பது மாகாணசபையுடன் தொடர்பில்லாத விவகாரமாகவே மாறிவிடும். அதிகாரங்களைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கும் போதுதான், அவற்றை இழக்க நேரிடுகிறது. அவ்வாறான ஒன்றில் பொலிஸ் அதிகாரமும் ஒன்று என்பதை மறந்து விடலாகாது.

அதேவேளை, விடுதலைப் புலிகளால் இனிமேல் மீண்டெழவே முடியாது. அந்தளவுக்கு வடக்கில் நாங்கள் புலனாய்வு வலையமைப்பைப் பலப்படுத்தியிருக்கிறோம் என்று அரச மற்றும் இராணுவ அதிகாரிகள் பலமுறை கூறியிருக்கிறார்கள்.

புலிகளை வளர விடாமல் தடுக்கக் கூடிய, பலமான வலையமைப்பினால், வாள்வெட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு அடக்குவது ஒன்றும் கடினமான காரியம் என்று கூற முடியாது. இராணுவத்தின் புலனாய்வுத் தகவல்களைப் பெற்று, வாள்வெட்டுக் குழுக்களை அடையாளம் கண்டு, ஒடுக்கும் வாய்ப்புகளை பொலிஸ் தரப்பு பயன்படுத்துகிறதா என்று தெரியவில்லை.

முகாம்களுக்குள் முடக்கப்பட்டுள்ள படையினரை வெளியே கொண்டு வருவதுதான், இதுபோன்ற சம்பவங்களின் இலக்காக இருக்குமேயானால், அதற்குத் துணை போகின்ற வகையில்தான் பொலிஸ்மா அதிபரின் எச்சரிக்கை அமைந்திருக்கிறது.

வாள்வெட்டுக் குழுக்களின் அட்டகாசத்தை அடக்க, இராணுவத்தைக் களமிறக்குவதற்கு துணை நிற்கும் முதலமைச்சர் விக்னேஸ்வரனின் கருத்து, ஏற்கெனவே, வடக்கு மாகாணசபைக் குழப்பத்தின்போது, இராணுவத்தைக் களமிறக்குவது பற்றிய சர்ச்சைக்குரிய கருத்தை அவர் வெளியிட்டிருந்தமையும் கவனிக்கத்தக்கது.வடக்கில் இராணுவம் களமிறக்கப்படுவதை முதலமைச்சர் நியாயப்படுத்தும் அளவுக்கு, நிலைமை மாறியிருக்கிறது. இது தமிழர்களுக்குத் துரதிஷ்டமே.

Allgemein தாயகச்செய்திகள்