தென்னிலங்கையில் வெடிக்கும் புதுச் சர்ச்சை! தேரர்களுக்கு எதிராக தேரர்களே போர்க்கொடி

இலங்கை அரசியல் பௌத்தம் சார்ந்து நகர்வதனால் தென்னிலங்கை அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய மஹாநாயக்க தேரர்கள் என்பவர்கள் அதி முக்கியத்துவம் வாய்ந்தவர்கள்.

இந்த நிலையில் அண்மையில் ஞானசாரர தேரரின் கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாக மஹாநாயக்க தேரர்கள் கருத்துகளை தெரிவித்திருந்தனர்.

அந்தக் கருத்துகளுக்கு மத சுதந்திரத்திற்கான அமைப்பினர் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளனர். பிரதான தேரர்களை உள்ளடக்கியே இந்த அமைப்பு செயற்பட்டு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

குறித்த அமைப்பினைச் சேர்ந்த சதேவஹூவே சந்திரானந்த தேரர் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில்,

30 வருடகால கொடிய யுத்தம் நிறைவு பெற்று விட்டதோடு தற்போது சமாதானப் பாதையில் இலங்கை பயணித்துக் கொண்டு வருகின்றது.

நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் அனைத்து மக்களுக்கும் சம உரிமை கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே மக்கள் உள்ளனர்.

அதன் அடிப்படையில் அதிகாரப்பகிர்வு கொடுக்கப்பட வேண்டும். இந்த அதிகாரப்பகிர்வு பற்றி சரியாக மக்கள் அறிந்து கொள்வார்கள் என்றால் இரு கைகளையும் உயர்த்தி அதற்கு ஆதரவு தெரிவிப்பார்கள்.

இதற்கு எவரும் தடையாக இருக்கவேண்டாம். அந்த வகையில் மஹாநாயக்க தேரர்களும் தற்போது தவறாக நடந்து கொண்டு வருகின்றார்கள்.

அவர்கள் பற்றிய அனைத்து உண்மைகளும் எமக்கு தெரியும் மஹாநாயக்க தேரர்கள் முறைகேடான வாக்குகள் மூலமாகவே நியமிக்கப்பட்டுள்ளனர். இது பற்றிய ஆதாரங்கள் எம்மிடம் உண்டு.

அதனை வெளியிடவும் ஆயத்தமாக இருக்கின்றோம். தற்போதைய சூழலில் அரசியல் உள் நோக்கங்கள் அற்ற வகையில் செயற்பட வேண்டியது அவசியமாகும்.

பௌத்த தேரர்கள் செகுசு வண்டிகளிலும், குளிரூட்டப்பட்ட அறைகளிலும் வாழ்கின்றனர் இதனை ஏற்றுக் கொள்ள முடியுமா? இவை எங்கிருந்து அவர்களுக்கு வந்தது.

நல்லிணக்கத்திற்கும், அதிகாரப்பகிர்விக்கும் தடையாக செயற்படும் போது இன்னோர் யுத்தம் வெடிக்கக் கூடிய வாய்ப்பு உண்டு. இதனை மக்கள் புரிந்து செயற்பட வேண்டிய தருணம் இப்போது உதயமாகி உள்ளது எனவும் சந்திரானந்த தேரர் தெரிவித்திருந்தார்.

இந்தக் கருத்துகளின் படி தென்னிலங்கையில் பிரதானமான மஹாநாயக்க தேரர்களை கடுமையாக சாடும் வகையில் தேரர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளமை தெளிவாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் தென்னிலங்கையில் ஒரு தரப்பினர் அதிகாரப்பகிர்வுக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வரும் நிலையில்.,

தென்னிலங்கை அரசியலில் முக்கியத்துவம் வாய்ந்த தேரர்களுக்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது. அதில் ஒரு தரப்பு அதிகாரப்பகிர்வு அவசியம் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளது.

தேரர்களுக்கு இடையில் புதிதாக வெடித்துள்ள சர்ச்சையினை அரசு எவ்வாறு கையாளப்போகின்றது? இதனால் அரசியல் சீர்திருத்தத்தில் தாக்கம் ஏற்படுமா என்பதும் இப்போதைக்கு கேள்விக்குறியாகும்.

Allgemein