விகாரை நிர்மாணிப்பை நிறுத்துமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபை மனு தாக்கல்

நாவற்குழியில் சட்டவிரோதமான முறையில் கட்டப்படும் தாதுகோபுர நிர்மாணப்பணிகளை நிறுத்துமாறு கோரி சாவகச்சேரி பிரதேச சபையால் சாவகச்சேரி நீதிமன்றில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனை அடுத்து நாவற்குழி விகாராதிபதியை எதிர்வரும் இருபதாம் திகதி மன்றில் முன்னிலையாகுமாறு சாவகச்சேரி நீதிமன்றம் அழைப்பாணை அனுப்பியுள்ளது.
மேற்படி விகாரையின் தாதுகோபுர நிர்மாணப் பணிகளை நிறுத்துமாறு கோரி நேற்றைய தினம் சாவகச்சேரி பிரதேச சபை செயலரினால் மனுதாக்கல் செய்யபட்ட நிலையிலேயே,
சாவகச்சேரி நீதிமன்ற நீதவான் திருமதி சிறிநிதி நந்தசேகரம், விகாராதிபதிக்கு அழைப்பாணை விடுத்துள்ளார்.
நாவற்குழி சிங்கள குடியேற்றத்தில் ஏற்கெனவே விகாரை ஒன்று அமைந்துள்ள நிலையில், அந்த விகாரைக்கு மேலதிகமாக பிரமாண்டமான முறையில் ஒரு கோடி ரூபாய் செலவில் தாதுகோபுரம் ஒன்றை அமைக்கும் முயற்சியில் அந்த விகாரையின் விகாராதிபதி அம்பிலிபிட்டிய சுமண தேரர் ஈடுபட்டிருந்தார். சாவகச்சேரி பிரதேச சபையின் நிர்வாக எல்லைக்குள் குறித்த கட்டுமான பணிகள் நடைபெற்ற போதிலும், பிரதேச சபையின் அனுமதியை பெறாமல் குறித்த தாதுகோபுரம் கட்டப்பட்டுள்ளது.
இதனை அடுத்து குறித்த கட்டுமான பணிகளை நிறுத்துமாறு சாவகச்சேரி பிரதேச சபை குறித்த விகாராதிபதிக்கு அறிவித்திருந்தது. எனினும் தாதுகோபுர கட்டட நிர்மாணப் பணிகள் தொடர்ந்தும் நடைபெற்ற நிலையில், சாவகச்சேரி பிரதேச சபை செயலரினால் நேற்றைய தினம் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
இதனை பரிசீலனைக்கு எடுத்து கொண்ட நீதவான் குறித்த விகாராதிபதியை நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணையை அனுப்பியுள்ளார்.
 இதேவேளை குறித்த விகாரை மற்றும் தாது கோபுர நிர்மாணப்பணிகள் சட்டத்திற்கு முரணான வகையில் முன்னெடுக்கப்பட்டிருந்தது என வடக்கு மாகாண சபையிலும் தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்பட்டிருந் தமை குறிப்பிடத்தக்கது.
Allgemein தாயகச்செய்திகள்