கிளிநொச்சி டிப்போச் சந்தியில் இருந்து அக்கராயன்குளம் செல்லும் வீதியில் உள்ள சேவையர் கடைச் சந்திக்கு அண்மையாக வேகக் கட்டுப்பாட்டை இழந்த மகேந்திர பிக்கப் வாகனம் ஒன்று வீதியின் ஓரத்தில் இருந்த வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 03, பேர் படுகாயம் அடைந்த நிலையில் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அதில் சிகிச்சை பலனி ன்றி இளம் பெண் ஒருவர் மரணமடைந்துள்ளார். இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,
கடந்த ஞாயிற்றுக்கிழமை இ.போ.ச. பேருந்தும் மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளான சம்பவத்தில் உயிழந்தவரின் இறுதி மரண நிகழ்வுக்குச் செல்வதற்காக மகேந்திர பிக்கப் வாகனத்தில் 08, பேர் பயணித்துக் கொண்டிருந்த போது, வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்த நிலையில் வீதியின் அருகே உள்ள வீட்டு மதிலுடன் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இச்சம்பவத்தில் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 03, பேரில் கிளிநொச்சி திருநகர் தெற்கைச் சேர்ந்த எஸ்.விஜிதா (வயது 22) என்ற இளம் யுவதி சிகிச்சை பல னின்றி பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இச்சம்பவத்தில் விபத்துக்குள்ளான இருவர் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு சென்ற கிளிநொச்சி பொலிஸார் விபத்துக்குள்ளான வாகனங்களை மீட்டு பொலிஸ் நிலையத்திற்கு எடுத்துச் சென்றதுடன் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.