எம்மை வைத்து அரசியல் நடத்தாதீர்கள்; சரஸ்வதிகுடியிருப்பு மக்கள் சிறிதரனுக்கு எச்சரிக்கை

தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரனின் செயற்பாடுகள் அதிருப்தியளிப்பதாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் பன்னங்கண்டி – சரஸ்வதிபுரம் மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எந்த அரசியல்வாதிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்ட மக்களை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும் மக்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நிரந்தர காணி உரிமைப்பத்திரத்தை பெற்றுத்தருமாறு வலியுறுத்தி பன்னங்கண்டி – சரஸ்வதி குடியிருப்பு மக்கள் இன்று 07 ஆவது நாளாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.

இந்நிலையில் கவனயீர்ப்பில் ஈடுபட்டுவரும் மக்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் நேரில் சென்று சந்தித்துள்ளார்.

எனினும் மக்களை நேரில் சென்று சந்தித்து கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர் தமது பிரச்சனை தொடர்பாக எந்தவித சாதகமான பதிலையும் வழங்கவில்லை என்று பாதிக்கப்பட்ட மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை மக்களுடனான சந்திப்பின் பின்னர், குறித்த சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவிக்குமாறு ஊடகவியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கு பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன், கிளிநொச்சி மாவட்ட ஊடகவியலாளர்களைத் தரக்குறைவாக பேசியுள்ளதுடன், ஊடகங்கள் முறையற்ற வகையில் செயற்படுவதாகவும் குற்றம் சுமத்தியதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிலையில் தமது போராட்டம் குறித்து கருத்து வெளியிட்ட மக்கள், குறித்த பகுதியிலிருந்து ஒருபோதும் வெளியேற மாட்டோம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதேவேளை பன்னங்கண்டி – சிவா பசுபதி கிராம மக்கள் தமது காணிகளை மீட்பதற்கு முதுகெழும்பாக திகழ்ந்த ஊடகவியாளர்களை நாடாளுமன்ற உறுப்பினர் தரக்குறைவாக பேசியமைக்கு கண்டனம் தெரிவிப்பதாகவும் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

Allgemein