April 19, 2024

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு

இந்திய இராணுவத்துக்கு எதிராக இரண்டு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பில் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்த தியாகி அன்னை பூபதியின், உண்ணாவிரத அறப் போராட்டத்தின் 35 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, உண்ணாநோன்பின் 25ஆம் நாளான இன்று புதன்கிழமை, யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது.

யாழ். பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் இடம்பெற்ற இந்த நிகழ்வில், பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், கலைப்பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், விஞ்ஞான பீட மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகள், பல்கலைக்கழகப் பணியாளர்கள், மற்றும் விரிவுரையாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.

1988 ஆம் ஆண்டு இந்திய அமைதிப் படைக்கு எதிராகக் குரல் கொடுக்க, அறப் போராட்டங்களை நடத்த மட்டு – அம்பாறை மாவட்ட அன்னையர் முன்னணி முடிவு செய்தது. “உடனடியாகப் போர் நிறுத்தத்தை நடைமுறைப்படுத்த வேண்டும்.

“புலிகளுடன் பேச்சு நடத்தித் தீர்வு காண வேண்டும்.” ஆகிய இரு கோரிக்கைகளை முன்வைத்து மட்டக்களப்பு மாமாங்கப் பிள்ளையார் ஆலயத்தில் குருந்தை மரநிழலில் 1988 மார்ச் 19ஆம் திகதி அன்னை பூபதி சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தார்.

மகாத்மா காந்தியின் அகிம்சை போராட்டாத்தால் விடுதலை பெற்ற பாரத நாடு என வரலாறு கூறப்படும் இந்திய நாடு, அன்னை பூபதியின் அகிம்சைவழி போராட்டத்தைக் கணக்கில் எடுக்கவில்லை.

அன்னை பூபதி நீர் மட்டும் அருந்தி சாகும் வரை உண்ணா நோன்பு இருந்தார். இடையில் பல தடங்கல்கள் வந்தன. உண்ணாவிரதத்துக்கு ஒத்துழைப்பு வழங்கியவர்களையும், அன்னை பூபதியின் பிள்ளைகள் சிலரையும், இந்திய இராணுவம் கைது செய்தது. ஆயினும் போராட்டம் நிறுத்தப்படவில்லை. அவர் உறுதியாகப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.

கோரிக்கைகள் ஏற்றுக் கொள்ளப்படாத நிலையில் சரியாக ஒரு மாதத்தின் பின் 19.04.1988 அன்று காலை 8.45, மணிக்கு அன்னை பூபதி உயிர் நீத்தார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert