April 19, 2024

பயங்கரவாதச் சட்டம்: நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் அதிருப்தி!

இலங்கையில் பயங்கரவாத தடைச்சட்டத்தை ரத்துச் செய்வது தொடர்பாக இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் அரசியல் அச்சுறுத்தல்களுக்கு இந்த சட்டம் பயன்படுத்தப்படலாம் என்ற அச்சத்தையும் ஐரோப்பிய ஒன்றியம் வெளியிட்டுள்ளது.

இதனையடுத்து, இந்த விடயம் எதிர்வரும் மார்ச்சில் வெளியாகவுள்ள இலங்கைக்கான ஜிஎஸ்பி மீதான அறிக்கை எதிர்பார்க்கப்படுவதாக ஆங்கில நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம், இலங்கையில் இன்னும் சிக்கல் நிறைந்ததாக அமைந்துள்ளது.

எனினும அவற்றை தீர்ப்பதற்கு இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் போதுமானதாக இல்லை என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் இலங்கைக்கான தூதுவர் டெனிஸ் சாய்பி நேர்காணல் ஒன்றின்போது தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் நீதித்துறை மீளாய்வு மேற்கொள்ளப்படவில்லை. எனவே பல அரசியல்வாதிகள் தங்களுக்கு எதிராக பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்பட்டதாக தம்மிடம் முறையிட்டுள்ளதாகவும் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச் சட்டத்துடன் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்பதில் இலங்கை மக்கள் மத்தியில் பரந்த கருத்தொருமைப்பாடு உள்ளது.

2017 ஆம் ஆண்டில் பயங்கரவாத தடை சட்டத்தை சர்வதேச தரத்திற்கு ஏற்ப அமைக்க அரசாங்கம் உறுதியளித்தது.

அத்துடன் கடந்த அரசாங்கம், பயங்கரவாத தடைச்சட்டத்தை பயன்படுத்துவதற்கு நடைமுறையில் தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பயங்கரவாத தடைச் சட்டத்தை பயன்படுத்தியதாக ஐரோப்பிய ஒன்றியத்தூதுவர் தமது ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக புதிய தேசிய பாதுகாப்பு சட்டம், சர்வதேச எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப அமைவதையே தாம் எதிர்பார்ப்பதாக தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு வந்திருந்த ஐரோப்பிய ஒன்றிய நிபுணர்களும் இலங்கைக்கு ஜிஎஸ்பி பிளஸின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், பயங்கரவாத தடைச் சட்டம் உட்பட இலங்கைக்கு தீர்வு காண வேண்டிய சில பிரச்சினைகள் நிலுவையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை ஜிஎஸ்பி பிளஸ் பயனாளிகள் குறித்த அறிக்கை எதிர்வரும் மார்ச் மாதம் வெளியிடப்படும் என்றும், ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்றம் மற்றும் ஐரோப்பிய பேரவையில் சமர்ப்பிக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert