März 28, 2024

தமிழ் அரசியல் கட்சிகளின் பிளவு – பொங்குதமிழ் நினைவு நிகழ்வில் பல்கலை சமூகம் எச்சரிக்கை

இதன்போது அவர்கள் விடுத்த அறிக்கையில், “தமிழ் மக்களுக்கு எதிரான அடக்குமுறைகள் தொடரும் நிலையிலும் எமது தமிழ் தேசிய அரசியல் பரப்பில் பல பிளவுகள் ஏற்பட்டுள்ள துரதிஷ்டவசமான ஒரு காலப் பின்னணியில் இருந்து, நாங்கள் மாபெரும் மக்கள் எழுச்சி பொங்கு தமிழ் பிரகடனத்தின் 22 ஆவது ஆண்டு நிறைவை நினைவு கூருகின்றோம்.

அடக்குமுறைக்குள் இருந்த தமிழினம் தங்களது இன உரிமைகளை வலியுறுத்தி உலகெங்கும் அவற்றை பறைசாற்றும் வகையில் இராணுவ அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் கடந்த 2001 ஆம் ஆண்டு தை மாதம் 17 ஆம் திகதி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் வீறுகொண்டெழுந்தார்கள்.

யாழ்.பல்கலைக்கழக மாணவர் சக்தியால் உருவான தமிழ் மக்களின் பேரெழுச்சியானது அன்றைய ஆட்சியாளர்களை மட்டுமல்ல உலக நாடுகளையே திரும்பிப்பார்க்க வைத்த நாள் அன்றாகும்.

தமிழ் மக்களின் அபிலாசைகளான சுயநிர்ணய உரிமை, தமிழ் மக்களது மரபுவழித் தாயகம், தமிழ்த் தேசியம் என்பன அங்கீகரிக்கப்பட வேண்டும் என அன்றைய நாளில் வலியுறுத்தப்பட்டு பிரகடனப்படுத்தப்பட்டதுடன் யாழ்.பல்கலையில் நினைவுக் கல்லாக பொறிக்கப்பட்டது.

கடந்த காலங்களில் பல எதிர்ப்புக்கள், அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் எமது மாணவர்களால் குறித்த பிரகடனம் கல்வெட்டாக செதுக்கப்பட்டது.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் வருடா வருடம் குறித்த பொங்கு தமிழ் மக்கள் பேரெழுச்சி நாள் யாழ்.பல்கலைக்கழகத்தில் நினைவு கூறப்பட்டு வருகிறது.

தமிழ் மக்களது அடிப்படை அபிலாசைகளையும் யாழ்ப்பாண பல்கலைக்கழக சமூகத்தின் தமிழ்தேசிய நிலைப்பாட்டையும் ஆணித்தரமாக ஆட்சியாளர்களுக்கும் உலகுக்கும் இந்த பொங்கு தமிழ் பிரகடன கல்வெட்டு பறைசாற்றி நிற்கின்றது.

தமிழ் மக்கள் காலாதிகாலமாக ஏற்றுக்கொண்டதும், பாதுகாத்து வந்ததுமான தமிழ்தேசிய நிலைப்பாடானது, ஆட்சியாளர்களாலும் எமது தமிழ் தேசிய பரப்பிலுள்ள அரசியல் கட்சிகளின் ஒற்றுமையற்ற செயற்பாடுகளினாலும் சிதைந்துபோய் கேள்விக்குறியாகியுள்ள இக்காலகட்டத்தில், எமது பொங்கு தமிழ் பிரகடன நினைவுகூரல் நிகழ்வு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.

தமிழ் தேசிய அரசியலில் பயணிக்கும் கட்சிகள் தமது கட்சி நலனையும் சில குறுகிய அரசியல் நோக்கத்தையும் அடிப்படையாகக் கொண்டு அண்மைக்காலத்தில் செயற்படுவது, அரசியல் தீர்வினைப் பெறுவதற்கான தமிழ் மக்களின் நீண்ட கால முயற்சிகளை தடுப்பதாக அமைந்துவிடும்.

தமிழ் மக்கள் கௌரவமாக வாழ வேண்டும் என்பதற்காக வடகிழக்கில் பல்லாயிரக்கணக்கான விலைமதிப்பற்ற உயிர்களை நாம் இழந்துள்ளோம்.

ஆனால் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பு மனு திகதி அறிவிக்கப்பட்ட நிலையில், தமிழ் தேசியம் சார்ந்து பயணிக்கும் கட்சிகள் ஒன்றிணைந்து ஓர் அணியாக பயணிக்க முடியாமையினையிட்டு மனம் வருந்துகின்றோம்.

இலங்கை அரசானது, நல்லெண்ணத்தை வெளிப்படுத்துகின்றோம் என சில செயற்பாடுகளை மேற்கொண்டு சர்வதேசத்தையும் தமிழ் மக்களையும் ஏமாற்றி வருகின்றது.

அதே போல் தமிழ்த் தேசிய கட்சிகள் ஜெனீவா அமர்வு ஆரம்பிக்க முன்னரும் தேர்தல் காலங்களிலும் ஒற்றுமை என்னும் மாயையைக் காட்டி தமிழ் மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. ஒற்றுமை என்பதை பேச்சுக்களால் மட்டும் காட்டாது செயற்பாட்டில் காட்டுங்கள்.

ஆகவே தமிழ் மக்களாகிய எமக்கு சுயநிர்ணய உரிமை, மரபுவழித்தாயகம், தமிழ்த் தேசியம் இவையே உயிர்மூச்சு என்பதை தமிழ் தேசிய பரப்பிலுள்ள அனைவருக்கும் மீண்டும் நினைவுபடுத்துவதுடன் ஒற்றுமையுடன் பயணித்தால் மட்டுமே எமக்கான தீர்வை பெற முடியும் என கூறிக்கொள்வதுடன், மாணவர்களாகிய நாம் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக மாணவர் சக்தி மாபெரும் சக்தியாக என்றும் துணைநிற்போம் என உரத்துக்கூறுகிறோம் – என்றுள்ளது.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert