April 25, 2024

காங்கிரஸ் என்ன செய்ய போகிறது ?

ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள், அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய  பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார். 

சமகால நிலைமை தொடர்பாக நேற்றைய தினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணத்தில் ஊடகங்களுக்கு கருத்து கூறியபோதே இதனைத் தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், 

வடக்கு கிழக்கில் காணி சுவீகரிப்பு இடம்பெறுகிறது. வடக்கு கிழக்கு மாகாணங்கள் இடையிலான நிலத்தொடர்ச்சியை இல்லாமல் செய்து இடையில் அநுராதபுர மாவட்டத்தை புகுத்துவதற்கு முயற்சிகள் இடம்பெறுகிறது. 

தற்போது தமிழ்மக்கள் பார்வையாளர்களாக இருக்காமல்  தங்களுடைய இருப்பை பாதுகாக்க இருக்கின்ற சகல விடயங்களையும் பயன்படுத்த வேண்டும். 

இந்த விடயத்தில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் என்ன செய்கின்றது என்ற கேள்வியெழுகிறது. 

இருபத்தைந்து ஜம்பது பேரை திரட்டி காலத்துக்கும் போராடப்போகின்றோமா? தமிழ்மக்கள் தமக்குரிய சட்டபூர்வ அதிகாரங்களை பயன்படுத்த போகினறோமா? மாகாணசபை முறைமை மூலம்  பொலிஸ் காணி  விடயங்களை பெறமுடியும். 

அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் தவிர தமிழ்த் தேசிய கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலையை எடுத்து ஜனாதிபதியுடனான கலந்துரையாடலின் போது இவ் விடயங்கள் வலியுறுத்தப்பட்டன. 

அரசாங்கம் சில விடயங்களை செய்வதற்கு சம்மதித்துள்ளனர். அவற்றை அரசாங்கம் செய்யுமா இல்லையா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். 

நாட்டில் நிலவும் நெருக்கடி காலங்களில் அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு அழைக்கும்  சந்தர்ப்பத்தில் நாம் பேச்சுவார்த்தைக்கு செல்லாமல் சமஸ்டி தருவதாக உறுதியளித்தாலே பேச்சுவார்த்தைக்கு வருவோமென கூறிவிட்டு நித்திரை கொள்ளமுடியாது. 

பேச வேண்டியது எமது கடமை அதனை சரியான தடத்தில் கொண்டுசெல்வதும் தமிழ் தரப்புகளின் கடமை. அதனூடாக முதல்கட்டமாக இருக்கின்ற அதிகாரங்களையாவது பெற்றுக்கொள்ள வேண்டும். 

வெறுமனே ஏனைய கட்சிகளை பார்த்து துரோகிகள் அடிவருடிகள் என கூறுவதை விடுத்து தற்போதைய  பிரச்சினையை தீர்ப்பதற்கான ஆக்கபூர்வமான வழி என்ன என்பது தொடர்பில் அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸ் வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

Schreibe einen Kommentar

Deine E-Mail-Adresse wird nicht veröffentlicht. Erforderliche Felder sind mit * markiert